Published:Updated:

காளஹஸ்தியில் சிவராத்திரிப் பெருவிழா பிப். 27-ல் தொடக்கம்!- குவியும் பக்தர்கள்

காளஹஸ்தியில் சிவராத்திரிப் பெருவிழா பிப். 27-ல் தொடக்கம்!- குவியும் பக்தர்கள்
காளஹஸ்தியில் சிவராத்திரிப் பெருவிழா பிப். 27-ல் தொடக்கம்!- குவியும் பக்தர்கள்

பஞ்சபூதத் தலங்களுள் வாயுத்தலமாக அறியப்படும் காளஹஸ்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவராத்திரிப் பெருவிழா வரும்  27.2.19 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது திருக்காளஹஸ்தி. சம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற தலம். கண்ணப்பன் இறைவனிடம் அன்பு பாராட்டி வீடுபேறு பெற்ற தலம். ஸ்ரீ - காளம் - அத்தி  என்பதற்கு முறையே சிலந்தி - பாம்பு - யானை  என்று பொருள். சிலந்தி, பாம்பு, யானை ஆகியன சிவபெருமானை இந்தத் தலத்தில் வழிபட்டதால் இதற்கு காளஹஸ்தி என்று பெயர் ஏற்பட்டது. இந்தத் தலம் ராகு கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது இந்தக் கோயில். தொடர்ந்து பல சோழ மன்னர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர். விஜயநகரப் பேரரசர் காலத்தில் இந்தக் கோயில் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் மகாசிவராத்திரிப் பெருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மகாசிவராத்திரிப் பெருவிழா வரும் 27.2.19 தொடங்கி 10.3.19 வரை நடைபெறுகிறது. 27.2.19 அன்று  பக்த கண்ணப்பர் கொடியேற்றமும், 28.2.19 அன்று சுவாமி கொடியேற்றமும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மகாசிவராத்திரி 4.3.19 அன்று நான்கு கால பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறும். அன்று சிவபெருமான் நந்திவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். 5.3.19 அன்று தேரோட்டமும் 6.3.19 அன்று சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். 10.3.19 பல்லக்கு சேவையோடு விழா நிறைவுபெறும். 

சிவராத்திரி அன்று ஏராளமான பக்தர்கள் காளஹஸ்திக்கு வந்து ஞானப்பிரசூனாம்பாள் சமேத காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்.