Published:Updated:

நீங்களே செய்யலாம் ஆத்மார்த்த அபிஷேகம்... சக்திவிகடன் நடத்தும் மகாசிவராத்திரி வைபவம்! #Vikatan360

மற்ற நாள்களில் இறைவனுக்கு இரவில் வழிபாடுகள் நடைபெறுவதில்லை. ஆனால் சிவராத்திரி அன்று நான்கு காலமும் பூஜைகள் நடைபெறும். சிவன் அபிஷேகப் ப்ரியன். எப்போதும் ஜலதாரையின் கீழ் அமர்ந்திருப்பவன். அவனுக்கு நான்கு ஜாமமும் நான்கு விதமான பூஜைகள்.

நீங்களே செய்யலாம் ஆத்மார்த்த அபிஷேகம்... சக்திவிகடன் நடத்தும் மகாசிவராத்திரி வைபவம்! #Vikatan360
நீங்களே செய்யலாம் ஆத்மார்த்த அபிஷேகம்... சக்திவிகடன் நடத்தும் மகாசிவராத்திரி வைபவம்! #Vikatan360

வேதங்களின் நடுநாயகமாக நிற்பது ஶ்ரீ ருத்ர ஜபம். ருத்ர ஜபத்தின் நடுவில் வேதத்தின் உட்பொருளாக அமர்ந்திருப்பது சிவ என்னும் நாமம். மகாசிவராத்திரி நாளில் இரவு கண்விழித்து இறைவனின் சந்நிதியில் அமர்ந்து அவன் நாமத்தை ஜபிப்பது அவசியமாகிறது. ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்க வேண்டும் என்கிற நியமம் உண்டு. அவ்வாறு உபதேசம் பெறவும் ஜபிக்கவும் உகந்த நாள் சிவராத்திரி. உபதேசம் பெறாதவர்கள் `சிவ' என்கிற இரண்டெழுத்தை ஜபம் பண்ணினாலே ஒட்டுமொத்த வேதங்களையும் பாராயணம் செய்த பலனைப் பெறமுடியும். நாராயணனைத் துதிக்க `ராம' என்கிற நாமம் எப்படி உகந்ததோ, அதேபோல சிவபெருமானைத் துதிக்க `சிவ' என்கிற நாமம் உயர்ந்தது.   

சிவ நாமத்தை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டேயிருக்க, உறக்கம் நம்மைத் தீண்டாது விழித்திருப்போம். விழித்திருப்பதன் மூலம் சிவதரிசனத்தைக் கண்ணாரக் கண்டு மகிழலாம். மற்ற நாள்களில் இறைவனுக்கு இரவில் வழிபாடுகள் நடைபெறுவதில்லை. ஆனால் சிவராத்திரி அன்று நான்கு காலமும் பூஜைகள் நடைபெறும். சிவன் அபிஷேகப் ப்ரியன். எப்போதும் ஜலதாரையின் கீழ் அமர்ந்திருப்பவன். அவனுக்கு நான்கு ஜாமமும் நான்கு விதமான பூஜைகள்.

ஒவ்வொரு கால வழிபாட்டிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. முதல் ஜாமம் இரவு 10 மணிக்குத் தொடங்கும். அது பிரம்மன் இறைவனைப் பூஜித்த காலம் என்று சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் இறைவனை வழிபடுவது செல்வ கடாட்சத்தை ஏற்படுத்தும். இரண்டாம் ஜாமம் இரவு 12 மணி. இது மகாவிஷ்ணு இறைவனை பூஜித்த காலம். அப்போது இறைவனை வழிபட மங்கல வாழ்வு கைகூடும். மூன்றாம் ஜாமம், அதிகாலை 2 மணிக்குத் தொடங்கும். இது அன்னை அம்பிகை இறைவனை பூஜித்த காலம். இந்த நேரத்தில் அபிஷேகித்து ஆராதிக்க நோயற்ற வாழ்வும், தீர்க்க ஆயுளும் கிடைக்கும். நான்காம் ஜாமம் காலை 4 மணி. இது உலகின் சகல ஜீவராசிகளும் இறைவனைப் போற்றி வழிபடும் நேரம். அந்த நேரத்தில் மகாதேவனை தரிசித்து வணங்க மோட்சப் பேறு கிட்டும் என்பது ஐதீகம். நான்கு ஜாம அபிஷேக ஆராதனைக்கெனப் பிரத்யேக திரவியங்களை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவர்கள் குறிப்பிட்டுள்ள உரிய திரவியங்களைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபடுவது சிறப்புமிக்கது. 

சிவாலயங்கள் அனைத்திலும் மகாசிவராத்திரிப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆந்திர மாநிலத்தில் உள்ள சிவத்தலம் ஶ்ரீகாளஹஸ்தி. சிலந்தி - யானை -பாம்பு ஆகியன வழிபட்ட தலம் என்பதால், ஶ்ரீகாளஹஸ்தி எனப் பெயர் பெற்றது. காளஹஸ்தியின் சிவராத்திரிப் பெருவிழா பத்து நாள்கள் நடைபெறும். விழாவின் தொடக்கமான முதல்நாள் பக்த கண்ணப்பரின் சிவபக்தி மாண்பினைப் போற்றும் வகையில் அருகிலுள்ள கண்ணப்பர் கோயிலில் கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெறும். மறுநாளே காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம் நடக்கும். இறைவனின் பெருமையைக் கூறினால் அது புராணம். அடியாரின் பெருமையைக் கூறுவது பெரியபுராணம். சிவ மகிமையை விட சிவனடியாரின் மகிமையை முன்னிறுத்தும் மரபாக இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   

கண்ணப்பன் வீடுபேறுபெற்ற தலம் காளஹஸ்தி. மகாபாரதத்தில் அர்ஜூனன் பாசுபதாஸ்திரம் பெற சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். அவனுக்கு அருள்புரிய இறைவன் வேடனாக வந்து திருவிளையாடல் நடத்தினான். இருவருக்கும் இடையில் சிறு யுத்தம் நடைபெறுகிறது. அதன் முடிவில் வந்திருப்பது இறைவனே என்று அடையாளம் கண்டுகொண்ட அர்ஜூனன், சந்திரகலாதரனாக இறைவனை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றான். இறைவனின் திருவுருவைக் கண்டபின் வேறு வேண்டுவோர் உண்டோ? அர்ஜூனன், தனக்கு பாசுபத அஸ்திரம் வேண்டாம். இறைவனின் மீதான பாசமே வேண்டும் என்று வேண்டினான். மற்றொரு பிறவியில் அதை நீ பெறுவாய் என்று வரமருளி பாசுபதாஸ்திரத்தைத் தந்து இறைவன் அனுப்பினான். அந்த வரத்தின் காரணமாக அர்ஜூனன் கலியுகத்தில் கண்ணப்பனாகப் பிறந்து இறைவன்மேல் மேலான பாசத்தைப் பொழிந்தான். இறைவன் வேடுவன் வேடம் தரித்து வந்தபோது அவரை அவதூறாகப் பேசியதால் கண்ணப்பன் வேடுவ குலத்திலேயே பிறந்து பக்தி செய்தான்.

இறைவன், எக்குலத்தவராயினும் பேதம் பாராட்டாமல் அவர் செய்யும் ஆத்மார்த்த அபிஷேக ஆராதனைகளை ஏற்பவன் என்பதற்கு கண்ணப்ப நாயனாரின் சரிதம் ஓர் உதாரணம்.

அன்புள்ள வாசகர்களே, மகிமை பொருந்திய மகாசிவராத்திரி அன்று சக்திவிகடன் சார்பில் வாசகர்களின் நலனுக்காகவும், உலகில் சுபிட்சம் நிலைத்திருக்கவும் வேண்டி, ஆத்மார்த்த அபிஷேகம் என்னும் ஆன்மிகக் கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

அன்னை உமையவளுக்கு ஈசன் சிவலிங்க பூஜையினை முதல்முதலாகச் சொல்லித் தந்த திருத்தலம் திரு ஏகாம்பரநல்லூர்.  இந்தத் தலத்தில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் இந்த வைபவம் மார்ச் - 4 திங்கள்கிழமை அன்று மாலை 4 மணியளவில் தொடங்கி, மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடைபெறும். 

மகாசிவராத்திரி ஆத்மார்த்த அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டுக்கான சிவலிங்கத் திருமேனி செய்வதற்கான பொருள்கள், அபிஷேக-அர்ச்சனை திரவியங்கள், மலர்கள் ஆகியவை வாசகர்களுக்கு ஆலயத்திலேயே வழங்கப்படும். பூஜைக்குத் தேவையான சிறிய தாம்பாளத் தட்டு, பூஜை மணி, விளக்கு ஆகிவற்றை மட்டும் நீங்கள் எடுத்துவந்தால் போதும்.

முன்பதிவு செய்ய: மு. ஹரி காமராஜ் - 89390 30246

எப்படிச் செல்வது?: வேலூர் மாவட்டம், ஆற்காடு நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ளது திருஏகாம்பரநல்லூர். அனைத்து ஊர்களிலிருந்தும் ஆற்காடு செல்ல பேருந்துவசதிகள் உண்டு. ஆற்காடு பைபாஸ் அல்லது பேருந்து நிலையத்திலிருந்து திருவலம் செல்லும் பேருந்தில் ஏறி, ஏகாம்பரநல்லூர் ஆலயத்தை வந்தடையலாம். லாலாபேட்டை எனும் ஊருக்கு அருகிலுள்ளது ஏகாம்பரநல்லூர்.