Published:Updated:

`தேடி வாடும் நெஞ்சமே...' சக்தி விகடனின் மகாசிவராத்திரி துதிப்பாடல் உங்களுக்காக...! #MahaShivratri

`தேடி வாடும் நெஞ்சமே...' சக்தி விகடனின் மகாசிவராத்திரி துதிப்பாடல் உங்களுக்காக...! #MahaShivratri
`தேடி வாடும் நெஞ்சமே...' சக்தி விகடனின் மகாசிவராத்திரி துதிப்பாடல் உங்களுக்காக...! #MahaShivratri

முப்புரத்தைச் சிரித்தழித்தது முதலான சிவபெருமானின் மறக்கருணையையும், ஆலகால கொடும் விஷத்தைக் கண்டத்தில் ஏற்றருளிய அவரின் அறக்கருணையையும் கொண்டு வரிகள் அழகுபெற்றன.

ன்று மகா சிவராத்திரி. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி கூடிய இந்தத் திருநாளில், உலகங்களும் உயிர்களும் பிரளயத்தின் வயப்பட்டுப் பரம்பொருளாம் சிவபெருமானிடத்தில் ஒடுங்கிப்போக, உலகமும் உயிர்களும் மீண்டும் உருவாகிக் தழைக்க வேண்டும் எனும் வேண்டுதலோடு, உலக அன்னையான அம்பிகை அந்த ஈசனை வழிபட்ட திருநாள். இவ்வருடம் சிவனாருக்கு உகந்த சோமவாரமாம் திங்கள் கிழமையோடு மகாசிவராத்திரி இணைந்து வருவது மிகவும் விசேஷம்.

இதழ்ப் பணிகளோடு இறைப்பணிகளிலும் முத்திரைப் பதித்து வரும் சக்தி விகடனும் வாசகர்களோடு இணைந்து, மிக அற்புதமான மகா சிவராத்திரி விழா கொண்டாட்டத்துக்குத் தயாரானது. 

அவ்வகையில், `எவ்விதமான வைபவங்களை முன்னெடுக்கலாம் - சிவவழிபாட்டைச் சிறப்பிக்கலாம் என்பது குறித்த தங்களின் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்’ என்று வாசகர்களிடமும் நம்மோடு அணுக்கமான ஆன்மிக அமைப்புகளிடமும் வேண்டுதல் விடுத்தோம். இதைத் தொடர்ந்து அவர்கள் அளித்த ஆலோசனைகளின்படி, வாசகர்களே நான்கு காலமும் நான்கு விதமான லிங்கங்களைப் பூஜித்து வரம் பெறும் விதமாக, மகா ஆத்மார்த்த அபிஷேகத்துக்குத் தயாரானோம்.

சிறப்பு  வழிபாடு  மட்டுமன்றி நந்தி நர்த்தனம் - களறியாட்டம், குற்றாலக்குறவஞ்சி நாட்டிய நாடகம், ஆன்மிக ஆன்றோர்களின் சொற்பொழிவு ஆகியவற்றுடன்கூடிய அற்புதமான இந்த வழிபாட்டை, வேலூர் - ஆற்காடு அருகிலுள்ள திருஏகாம்பரநல்லூர் - அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடத்தத் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு சக்திவிகடனிலும் விகடன் இணையதளத்திலும் வெளியாகின. 

அதைத் தொடர்ந்து, மிகுந்த ஆர்வத்துடன் எண்ணற்ற வாசகர்கள் சக்தி விகடனின் மகா சிவராத்திரி வைபவத்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்துகொண்டிருந்த நிலையில், வாசகர் தரப்பிலிருந்து வேறோர் யோசனையும் வேண்டுதலும் முன்வைக்கப்பட்டன.

`பண்டு தமிழ்ச் சங்கத்தின் தலைமைக் காவலனாயிருந்து திக்கெட்டும் தமிழ் மணம் கமழ அருள்செய்த நம் பரமனுக்கு, அடியார்கள் பலரின் பாசுரங்களையே பூச்சரங்களாக உவப்புடன் ஏற்று மகிழும் நம் சிவனாருக்கு, அற்புதமான துதிப்பாடல் ஒன்றைச் சமர்ப்பிக்கலாமே...’ என்பதுதான் அந்த யோசனை - வேண்டுதல். வாசகர்களின் வேண்டுகோளை - விருப்பத்தை நிறைவேற்றுவதுதானே நம் தலையாயப் பணி. ஆகவே, உடனடியாக அந்தத் திருப்பணியில் சிரத்தை எடுத்துக்கொண்டது சக்திவிகடன். 

பாடல் எழுதும் பணி ஆரம்பமானது. எவ்விதமாய் எழுதுவது, துதிப்பாடலில் எதைச் சொல்லி துதிப்பது... என்று ஏராளமான கேள்விகள் நமக்குள். ஆனாலும் `இப்பணி உமக்காக’ என்று சிவன் தாள் பணிந்து சிவனிடமே சரணடைந்தோம். `உலகெலாம் எனத் தொடங்கி எழுதுக...’ என்று சேக்கிழாருக்கு அருள் செய்த பரமன், எளியோராகிய நமக்கும் அருள்செய்வார் என்று உளமார நம்பினோம். நம்பிக்கை பலித்தது. வாசகர்களிடமும் ஆலோசித்தோம். 

``சிவனாரின் மகிமைகளை, பெருமைகளை, அவரின் வீரச் செயல்களை, திருவிளையாடல்களைச் சொல்லிப் பாடலாமே’’ என்று வழிகாட்டினார் பெரியவர் ஒருவர். பாடலாம்தான்... ஆனாலும், சில வரிகளில் அடங்கிவிடக்கூடியவையா அரனாரின் மகிமைகள். கோடிகோடி வார்த்தைகள் வேண்டுமே அவரைப் பாட’ எனும் சிந்தனை நமக்குள் எழ... அதுவே பாடலின் முதல் வரியாகவும் அமைந்தது சிவனருளே. 

``கோடி கோடி வார்த்தை வேண்டும் உன்னைப்பாட ஈசனே
எங்கும் உண்டு என்றபோதும் தேடி வாடும் நெஞ்சமே...’’ - என்று பாடல் பிறந்தது!

தொடர்ந்து... நக்கீரருக்கு அருள்செய்த லீலை, விஜயனிடம் சிவனார் வில்லடி ஏற்ற விளையாடல் எனத் தொடர்ந்தன வரிகள்:

கல்லடித்து  ஒருவன் உன்னை வணங்கி நின்றபோதும்
சொல்லடித்த புலவன் எரிந்து சாம்பலானபோதிலும்
வில்லடித்த விஜயனால் உம் சிரம் தடித்தபோதிலும்
அடித்ததும் பெற்றதும் வேறுவேறு அல்லவே...

அதுமட்டுமா? முப்புரத்தைச் சிரித்தழித்தது முதலான சிவபெருமானின் மறக்கருணையையும், ஆலகால கொடும் விஷத்தைக் கண்டத்தில் ஏற்றருளிய அவரின் அறக்கருணையையும் கொண்டு வரிகள் அழகுபெற்றன.

சிவத் துதிப்பாடல் உருவாகும் விதத்தை, ஆன்மிக அன்பர்கள் மூலம் தெரிந்துகொண்டு பாடலுக்கு பின்னணி இசையமைக்கும் பணியை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்டார், இசையமைப்பாளரும் பயிற்சியாளருமான அன்பர் `ஜெ.’ அவரின் மாணவரும் பின்னணிப் பாடகருமான உதய் மற்றும் பாடகி பூஜாஸ்ரீ பாடித் தர, மிக அற்புதமாய் பூரணத்துவம் பெற்றது, `தேடி வாடும் நெஞ்சமே’ எனும் தலைப்பிலான சக்தி விகடனின் மகா சிவராத்திரி துதிப்பாடல்.

இதோ... அந்தப் பாடல் இங்கே உங்களுக்காகவும். 

சிந்தை மகிழ்விக்கும் சிவனாரின் துதிப்பாடலை செவிகுளிர நீங்களும் முழுமையாகக் கேட்டு மகிழுங்கள். எங்களின் முதல் முயற்சி குறித்த குறை - நிறைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். என்றென்றும் உங்களின் மேலான விமர்சனங்களே எங்களுக்கான வழிகாட்டல்கள். காத்திருக்கிறோம்!

அடுத்த கட்டுரைக்கு