Published:Updated:

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா தொடக்கம்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா தொடக்கம்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா தொடக்கம்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனிப் பெருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனித் திருவிழா இன்று (11.3.19) தொடங்கி வரும் 20 - ம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா நடைபெறும் தருணங்களில் மயிலாப்பூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் பக்தர்கள் வசதிக்காகக் காவல் துறையினர் போக்குவரத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர்.

பத்து நாள்கள் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவானது கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்குப் பூஜை செய்த பிறகு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று இரவு, அம்மை மயில் வடிவத்தில் சிவ பூஜை செய்யும் வைபவம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து புன்னை மரம், கற்பக மரம், வேங்கை மரம் ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருவார். ஒவ்வொரு நாளும் அம்மை அப்பர் பல்வேறு வாகனங்களில் ஊர்வலம் எழுந்தருளி அருள்புரிவர். 13- ம் தேதி அதிகார நந்தி திருவிழாவும், 17 - ம் தேதி தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக 18 - ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா நடைபெறும். தொடர்ந்து 20 ஆம் தேதி, தீர்த்தவாரி உற்சவமும், புன்னை மரத்தடியில் சிவ வழிபாடும் நடைபெற உள்ளது. அன்று மாலை திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடையும். 

இந்தச் சமயங்களில் மயிலாப்பூர் முழுவதும் கூட்டம் அலைமோதும் என்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் வாகனம் நிறுத்துமிடமும் அறிவிக்கப்பட்டுள்ளன. லஸ் சர்ச் சாலை, காமதேனு திருமண மண்டபம், சாய் பாபா கோயில், வெங்கடேச அக்கிரகாரம், திருமயிலை பறக்கும் ரயில்வே நிலைய மேம்பாலம் கீழே, பி.எல். சிவசாமி கலாலயா பள்ளி மற்றும் ஆர்.ஆர்.சபா ஆகிய இடங்களில் பக்தர்கள் தமது வாகனங்களை நிறுத்திவிட்டுக் கோயில் திருவிழாவுக்குச் செல்லலாம் என்று காவல் துறையினர் அறிவித்திருக்கிறார்கள்.