Published:Updated:

காமன் திருவிழா, காரடையான் நோன்பு... பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்!

காமன் திருவிழா, காரடையான் நோன்பு... பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்!
காமன் திருவிழா, காரடையான் நோன்பு... பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்!

மிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. மாசி மாதத்தில் இலைகளை உதிர்க்கும் மரங்கள், பங்குனி மாதம், புது தளிர்களை ஏந்தி, பூத்துக்குலுங்கும் வசந்த காலமாகும். பங்குனி மாதத்தில்தான் பெண்கள் கடைப்பிடிக்கும் காரடையான் நோன்பு, காதல் பண்டிகையான காமன் பண்டிகை, கடவுள்களின் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திரம் என்று பல்வேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன. பங்குனி மாதத்தில் வரும் விழாக்கள் மற்றும் விசேஷங்கள் பற்றி அறிந்துகொள்வோம்...


15. 3.2019 காரடையான் நோன்பு 

குறைவான ஆயுள் கொண்டவன் என்பதை அறிந்தும் சாவித்திரி சத்தியவானைத் திருமணம் செய்துகொண்டாள். எமதர்மன் சத்தியவானின் உயிரைப் பரித்துச் செல்ல வந்தான். அப்போது, எமதர்மனிடம் வாதிட்டு அனுமதிபெற்று தன் கணவன் சத்தியவானை காக்கும் பொருட்டு அம்மனை வணங்கிக் கடுமையான நோன்பு நோற்றாள். அதன் பலனாக சத்தியவான் மீண்டுவந்தான். அப்போது சாவித்திரி மேற்கொண்ட விரதமே காரடையான் நோன்பு எனப்படுகிறது. தீர்க்க சுமங்கலி பாக்கியத்துக்காகப் பெண்கள் மேற்கொள்ளும் தலையாய நோன்பு காரடையான் நோன்பு. ‘உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோன்பு நோற்றேன். ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும்’ என்று சொல்லி வேண்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.   

17.3.2019 ஆமலகீ ஏகாதசி

ஏகாதசி, பெருமாளை வணங்குவதற்கு உகந்த நாளாகும். பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு `ஆமலகீ ஏகாதசி’ என்று பெயர். இன்றைய தினத்தில் விரதமிருந்து, நெல்லி மரத்தடியில் பரசுராமர் படத்தை வைத்து பூஜை செய்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். பசு தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். ஆமலகீ ஏகாதசி விரதம் மூலம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

18.3.2019, 2.4.2019 பிரதோஷம்

சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள் பிரதோஷ தினமாகும். பிரதோஷ தினத்தில் கோயிலுக்குச் சென்று சிவ வழிபாடு செய்தால் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. அதிலும் 18.3.2019 அன்று வரும் சோமவார பிரதோஷம் மிகவும் சிறப்புடையது.

20.3.2019 பங்குனி பௌர்ணமி
சந்திரன் தனது ஒளியைப் பரிபூரணமாக பூமி மீது வழங்கும் நாள் பௌர்ணமி. அதனால், பௌர்ணமியன்று செய்யப்படும் அம்பிகை வழிபாட்டுக்குப் பலன்கள் அதிகம். பௌர்ணமி இரவு நேரத்தில் சிவ வழிபாடு செய்த பிறகு திருவண்ணாமலை, சங்ககிரி போன்ற புண்ணிய மலைத் தலங்களில் கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.  

20.3.2019 ஹோலிப் பண்டிகை

இரணியன் எனப்படும் ஹிரண்யகசிபுவின் சகோதரி ஹோலிகா, இவள் நெருப்பால் அழியாத தன்மையைக் கொண்டவள். இரணியனின் கட்டளைப்படி பிரகலாதனை அழிக்க அவனுடன் நெருப்புக்குள் இறங்கினாள் ஹோலிகா. அப்போது ஹோலிகா எரிந்துவிடுவாள். பிரகலாதனை நெருப்பு சுடாது. ஹோலிகா, அக்னி பகவானால் எரிக்கப்பட்டதன் நினைவாகக் கொண்டாடப்படும் வண்ணமயமான வசந்த உற்சவமே ஹோலிப் பண்டிகை. ஒருவர் மற்றொருவர் மீது சகோதரத்துவத்துடன் வண்ணங்களைப் பூசி மகிழும் நாள் இது. 

20.3.2019 காம தகனம்

தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமானின் தவத்தைக் காமபாணம் தொடுத்துக் கலைத்துவிடுவான் மன்மதன். இதனால், கோபம்கொண்ட சிவபெருமான் தன் மூன்றாவது கண் திறந்து மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வே பங்குனி பௌர்ணமியின்போது காம தகனம் என்று கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் காதல் திருவிழாவாகவும் இந்தக் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

21.3.2019 பங்குனி உத்திரம்

12 வது மாதமான பங்குனி பௌர்ணமியுடன் 12 வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம். பங்குனி உத்திரத்தில்தான் சிவன் - பார்வதி, முருகன் - தெய்வானை, ராமன் - சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன. பங்குனி உத்திரம், சிவ மற்றும் முருகப் பெருமானை வழிபட உகந்த நாள். திருமணத் தடைகள் அனைத்தும் விலகும். 

22.3.2019 புனித வெள்ளி

ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனிதவெள்ளி. மண்ணுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்காகவும் தனது ரத்தத்தின் மூலம் ஒரு விடுதலையை ஏற்படுத்த விரும்பி யூத மக்கள் அவருக்கு அளித்த சிலுவையைப் பேரன்போடு ஏற்றுக்கொண்ட நாள். அவரின் தியாகத்தால் மனிதர்கள் எல்லோருக்குமான மீட்பு சாத்தியமானது. புனித வெள்ளி அவரின் அன்பையும் தியாகத்தையும் நினைவுகூரும் நாள். அன்றிலிருந்து மூன்றாம் நாளான ஈஸ்டர் பண்டிகை அன்று அவர் சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

23.3.2019 காரைக்கால் அம்மையார் குருபூஜை

‘அம்மையே’ என்று ஈசனின் திருவாயால் அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். தனது பக்தியின் மூலமும் பாடல்கள் மூலமும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி, கையாலேயே நடந்து கயிலை சென்று இறைவனைத் தரிசித்த காரைக்கால் அம்மையாரின் குருபூஜை, பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.

30.3.2019 சீதா தேவி விரதம்

அசோகவனத்தில் இருந்த சீதாதேவி, ராமபிரானை மீண்டும் சேர்வதற்கு சிவபெருமானை நோக்கி விரதமிருந்த நாள் இன்று. இன்று விரதமிருந்து சீதா தேவியையும் ராமரையும் வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் சீரும் சிறப்பும் பெருகும். பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வார்கள் என்பது நம்பிக்கை. 

1.4.2019 விஜயா ஏகாதசி 

ஏகாதசி பெருமாளுக்குரிய நாள். பங்குனி மாதத்தில் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா ஏகாதசி தினத்தில் ஏழு தானியங்களை ஒன்றன் மேல் மற்றொன்றைப் பரப்பி மகா விஷ்ணுவை ஆவாஹணம் செய்து வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். 

4.4.2019 சர்வ அமாவாசை

இறந்த முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த  நாள் `அமாவாசை.’ இன்று புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பாவங்கள் அனைத்தும் விலகி சகல நன்மைகளும் வந்து சேரும்.

6.4.2019 யுகாதி பண்டிகை

தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டு தினம் `யுகாதி பண்டிகை.’ நான்கு நவராத்திரிகளுள் ஒன்றான வசந்த நவராத்திரியும் யுகாதி அன்றுதான் தொடங்குகிறது. இந்த வசந்த நவராத்திரி காலத்தில் அம்மனை வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

13.4.2019 ஸ்ரீராம நவமி

ராமபிரான் அவதரித்த புண்ணிய தினமே ஸ்ரீராம நவமி. பூவுலகில் தீமையை அழிக்கவும் சரணாகதித் தத்துவத்தின் மகிமையை விளக்கவும் மகாவிஷ்ணு மண்ணுலகில் ராமனாக வந்து அவதரித்தார் என்கின்றன இதிகாச புராணங்கள். ராமநவமி அன்று விரதமிருந்து பானகம், நீர்மோர் ஆகியன படைத்து ராமபிரானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதிகம்.