Published:Updated:

நாச்சியார் கோயிலில் இன்று கல் கருட சேவை... 20.3.19 அன்று திருத்தேர்

சைலபதி
நாச்சியார் கோயிலில் இன்று கல் கருட சேவை... 20.3.19 அன்று திருத்தேர்
நாச்சியார் கோயிலில் இன்று கல் கருட சேவை... 20.3.19 அன்று திருத்தேர்

நாச்சியார்கோயில், ஸ்ரீ வஞ்சுளவல்லி சமேத அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் பங்குனித் திருத்தேர் பெருவிழாவில் இன்று கல் கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது.

சோழநாட்டு திவ்ய தேசங்கள் ஒன்று திருநறையூர். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருத்தலம். மேதவி முனிவரின் மகளாகத் திருமகள் அவதாரம் செய்தார். பெருமாள் தானே முன்வந்து முனிவரை வேண்டி தாயாரைத் திருமணம் செய்துகொண்டதாகத் தலபுராணம் சொல்கிறது. இந்தத் தலத்துத் திருவிழாக்களில் மார்கழி மற்றும் பங்குனிப் பெருவிழாக்களில் நடைபெறும் கருடசேவை விசேஷமானது. 

இந்தத் தலத்தின் எழுந்தருளும் கல்கருடத் திருமேனி சந்நிதியில் இருந்து வெளியே வரவர எடை கூடிக்கொண்டே போகும். சந்நிதியில் இருந்து வெளிவரும்போது 4 பேர் சுமந்தால் போதுமானது. ஆனால், பிராகாரத்தைச் சுற்றும்போது 8 பேர் தேவைப்படுவர். அடுத்து 16 பேரும் வெளியே வரும்போது 32, 64 என்று கணக்கில் சுமக்கும் அளவுக்கு எடை கூடிவிடுமாம். அதேபோல் திரும்பச் சந்நிதி சேரும்போதும் அதே விகிதத்தில் எடை குறைந்துகொண்டே போகும் என்கிறார்கள்.

இந்த ஆண்டு பங்குனிப் பெருந்தேரோட்டப் பெருவிழாவின் நான்காவது நாளான இன்று மாலை 6 மணி முதல் 7 மணிவரை கருடசேவை நடைபெற உள்ளது. வழக்கமாக ஸ்வாமி,  கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும்போது, வஞ்சுளவல்லி தாயார் அம்சவாகனத்தில் உடன் எழுந்தருளி அருள்பாலிப்பார். வரும் 20.3.19 அன்று திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளது.