Published:Updated:

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நாளை தேரோட்டம்! - அலங்காரங்களில் ஜொலிக்கும் மாடவீதிகள்

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நாளை தேரோட்டம்! - அலங்காரங்களில் ஜொலிக்கும் மாடவீதிகள்
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நாளை தேரோட்டம்! - அலங்காரங்களில் ஜொலிக்கும் மாடவீதிகள்

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கற்பகாம்மாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் பங்குனிப் பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனிப் பெருவிழா, கடந்த 11 - ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு நடந்த சிறப்புப் பூஜைக்குப் பிறகு, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கொண்டாட்டம், வரும் 20 - ம் தேதி வரை நீடிக்கிறது. 

பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்த்திருவிழா நாளை (17.3.19) காலை எட்டு மணியளவில் நடைபெறவிருக்கிறது. திருத்தேரில், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அருள்வர். அதன்பிறகு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் தேரை வடம்பிடித்து இழுப்பர். மேளதாளம், நாதஸ்வரம் மற்றும் பக்தர்களின் பக்தி முழக்கத்தினூடே திருத்தேர் அசைந்து அசைந்து நான்கு மாடவீதிகளிலும் வலம்வரும். 

அதைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுவது வழக்கம். 

 விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை மறுநாள் (18 - ம் தேதி) அறுபத்து மூவர் திருவிழா நடைபெறும். தொடர்ந்து, 20-ஆம் தேதி, தீர்த்தவாரி உற்சவமும், புன்னை மரத்தடியில் சிவ வழிபாடும் நடைபெற உள்ளது. அன்று மாலை திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய திருவிழாக்களின்போது, மயிலாப்பூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், காவல் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.