Published:Updated:

அங்கம்பூம்பாவாய் வைபவம்... அறுபத்துமூவர் விழா... களைகட்டும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அங்கம்பூம்பாவாய் வைபவம்... அறுபத்துமூவர் விழா... களைகட்டும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்!
அங்கம்பூம்பாவாய் வைபவம்... அறுபத்துமூவர் விழா... களைகட்டும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்!

உலகில் வெல்ல முடியாதது மரணம் என்று சொல்வர். அதை அடியவரான ஞானசம்பந்தப் பெருமான் வென்றுகாட்டிய இடம் மயிலாப்பூர்.

`பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்’ என்று ஔவைப்பாட்டி,  `இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் உயர்ந்தது எது’ என்று பட்டியல் இடுவார். இந்த உலகம் நான்முகன் படைப்பு. நான்முகனோ திருமாலின் உந்தியில் பிறந்தவன் என்று அடிக்கிக்கொண்டே வரும் அந்தப் பாடல், 
 

`உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்; 
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்; 
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!’

என்று முடியும். ஔவை மட்டுமல்ல, புராண இதிகாசங்களும் இதையே சொல்கின்றன. அடியவர் மேல் அம்மையும் அப்பனும் அளவிடற்கரிய அன்பைச் செய்த தன்மை புராணங்களில் மிகுந்து காணப்படுகிறது. சிவனடியார்க்குச் செய்யும் தொண்டு சிவனுக்கே செய்த தொண்டெனப்படும். இதற்கெல்லாம் அடிப்படை, இறைவனே அடியார் பெருமையை உலகுக்கு உணர்த்த தன் திருவிளையாடல்கள் புரிந்தமை புராணங்களில் காணப்படுகின்றன. அத்தகைய அடியார்களைக் கொண்டாடி வணங்கும் திருவிழாவாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலில் நடைபெறும் `அறுபத்துமூவர் விழா’ என்றால் மிகையல்ல. 


மயிலாப்பூர் தலபுராணமும் அன்னை அடியார்பால் காட்டிய அன்பையே பறைசாற்றுகிறது. ஒருமுறை அம்மையும் அப்பனும் கயிலையில் ஏகாந்தமாக இருந்த வேளையில், சிவன் வேதத்தின் உட்பொருளை அம்மைக்கு உபதேசித்துக்கொண்டிருந்தார். ஆனால், அம்மையின் மனமோ, உபதேசத்தைக் கேட்பதை விடுத்து, அங்கு தோகையை விரித்து அழகுற நின்ற மயிலின் அழகில் லயித்து நின்றது. 
உடனே இறைவன் அம்மையை நோக்கி, ``தேவி, நான் வேதப் பொருள் பற்றிக் கூறுகையில் நீ மயிலின் ஆட்டத்தை ரசிக்கிறாயே’’ என்று கேட்கிறார். அதற்கு இறைவி, ``ஈசனே,  மயில், நம் குழந்தை முருகனின் வாகனம் அல்லவா, முருகனுக்குத் தொண்டு செய்கிறது அல்லவா? அதைப் பார்த்ததுமே எனக்கு முருகனின் நினைவு வந்துவிட்டது. அதனால்தான் நான் மயிலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்’’ என்று கூறினாள்.  


 ``அப்படியானால் என்னுடைய உபதேசத்தைவிடவும் அந்த மயில் உனக்கு உயர்வாகத் தெரிகிறதா?’’ என்று ஈசன் கேட்டார்.

``சுவாமி! தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிது அல்லவா?’’ - என்றாள் அன்னை.

இதைக் கேட்ட ஈசன், ``அப்படியானால் அதை நிறுவு’’ என்று சொல்ல, ஈசனின் திருவிளையாடலை அறிந்துகொண்ட அன்னை கயிலையை விட்டு நீங்கி, மயில் உருக்கொண்டு பூவுலகம் வந்து சேர்ந்தாள். தற்போது மயிலாப்பூர் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதி முற்காலத்தில் புன்னைவனமாக இருந்தது. புன்னைவனத்தில் மயிலாக வந்த அம்பிகை, அங்கே ஒரு புன்னை மரத்தினடியில் சிவலிங்கம் இருக்கக் கண்டு, அந்த லிங்க மூர்த்தத்துக்குத் தினமும் மலர் சொரிந்து தொழுது சிவத் தொண்டு புரிந்தாள். அன்னையின் தொண்டில் மகிழ்ந்த இறைவன் அன்னை முன்தோன்றி அவளை மீண்டும் உமையவளாகச் செய்து திருமணம் செய்துகொண்டு அந்த இடத்திலேயே கோயில் கொள்ளத் திருவுளம் கொண்டார். அன்னை மயிலாக மாறி நின்ற காரணத்தால் அந்த இடம், `மயிலாப்பூர்’ என்று பெயர் பெற்றது. `அடியாரின் மகிமையை உலகுக்கு உணர்த்திய தலமாக மயிலாப்பூர் விளங்க வேண்டும்’ என்று அன்னை வேண்டிக்கொண்டாள். அதை நிரூபிக்கும் வகையில் ஈசன் அருளிய பல்வேறு அற்புதங்கள் இந்தத் தலத்தில் நடந்துள்ளதாகத் தலபுராணம் சொல்கிறது. அதில் ஒன்று `அங்கம்பூம்பாவாய்’ வைபவம்.

உலகில் வெல்ல முடியாதது மரணம் என்று சொல்வர். அதை அடியவரான ஞானசம்பந்தப் பெருமான் வென்று காட்டிய இடம் மயிலாப்பூர். ஞானசம்பந்தருக்கு மணம் முடிப்பதற்காகவே வளர்க்கப்பட்ட பெண் பூம்பாவை அகால மரணமடைந்தாள். அவளின் தந்தை அவளுக்கான ஈமக் கிரியைகளைச் செய்து அவளின் அஸ்தியை ஒரு பானையில் இட்டுக் காத்துவந்தார். மயிலாப்பூருக்கு ஞானசம்பந்தர் எழுந்தருளிய தருணம், பூம்பாவாயின் தந்தை அவரிடம் அந்தக் கலசத்தை ஒப்படைத்து நடந்ததைத் தெரிவித்தார். அதைக் கேட்டு கண்ணீர் மல்கிய ஞானசம்பந்தர், இறைவனை நோக்கிப் பதிகம் பாடினார். பத்துப் பாடல்கள் கொண்ட அந்தப் பதிகத்தை அவர் முடிக்கும்போது பூம்பாவை மீண்டும் உயிர்பெற்று வந்தாள். `என்னால் மீண்டும் உயிர்பெற்றதால் அவளுக்கு நான் தந்தையாவேன்’ என்று சொல்லி ஞானசம்பந்தப் பெருமான் அவளை ஆசீர்வதித்தார்.

இன்றும், பங்குனி உத்திரப் பெருவிழாவின்போது அறுபத்து மூவர் உற்சவநாளில் அடியாரின் சொல், மரணத்தை வென்ற சம்பவம் `அங்கம்பூம்பாவாய்’ உற்சவமாக நிகழ்த்தப்படுகிறது. ஞானசம்பந்தராகத் தன்னை வரிந்துகொண்டு ஓர் அடியார் பதிகம் பாடுவார். ஒவ்வொரு பாடலும் முடியும்போது சங்கு முதலிய கயிலாய வாத்தியங்கள் முழங்கப்படும். அதைக் காண்பவர்களுக்கு ஒருகணம் கயிலையில் நிற்கிறோமா அல்லது மயிலையில் நிற்கிறோமா என்று சிந்தை மயக்கம் தோன்றும் வண்ணம் மெய்சிலிர்ப்பு ஏற்படும். இறுதிப்பதிகம் பாடியதும் இறைவனுக்கு தீபாராதனை நிகழும். 

அன்றைய தினத்தின் மதியப் பொழுதில் அறுபத்து மூவர் உற்சவம் தொடங்கும். சமயக்குரவர்கள் நால்வரும் தனித் தனிப் பல்லக்குகளில் எழுந்தருள்வர். பிற நாயன்மார்கள் நாலுபேருக்கு ஒரு பல்லக்கு என எழுந்தருள்வர். அவர்களோடு மயிலாப்பூரின் கிராமதேவதையான கோலவிழியம்மனும் எழுந்தருள்வார். உடன், அருகில் இருக்கும் சிவாலயங்களில் இருந்தும் மூர்த்திகள் வந்து கலந்துகொள்வர். இவர்கள் அனைவரும் முன்செல்ல கபாலீஸ்வரரும் கற்பகவல்லியும் எழுந்தருளி அருள்பாலிப்பர். 

நான்கு மாட வீதிகள்தாம்; ஆனால் மூர்த்திகளின் ஊர்வலம் மதியம் புறப்பட்டு மீண்டும் ஆலயம் வந்து சேர இரவு ஆகிவிடும். காரணம் மக்கள் கூட்டம்.  அடியாரின் பல்லக்குகள் மக்கள் கடலில் மிதந்துவரும் கலங்கள் போலக் காட்சியளிக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அடியார்களையும் ஆண்டவனையும் தரிசனம் செய்வர். இறைவனின் திருக்காட்சியிலேயே ஆன்மாவும் மனமும் நிறைந்துவிடும் என்றபோதும் பக்தர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்னும் நல்லுள்ளங்கள் அங்கு நூற்றுக்கணக்கான அன்னதானக் கூடங்களை அமைப்பர். யாருக்கும் இல்லை எனச் சொல்லாமல் விதவிதமான உணவுகளையும் தாகம் தீர்க்கும் நீர்மோர், பானகம் போன்றவற்றையும் வாரிவாரி வழங்குவர்.  

63 நாயன்மார்களில் ஒருவர் வாயிலார் நாயனார். இவர் மயிலாப்பூரில் தோன்றியவர். பல்லவர்கள் காலத்தில் கடற்கரைக்கு அருகில் ஆலயம் கட்டப்பட்டதில், வாயிலார் நாயனார் பெரும் துணையாக இருந்திருக்கிறார். அதற்குச் சாட்சியாக கற்பகாம்பிகை சந்நிதிக்கு நேராக அவருடைய திருவுருவம் இருப்பதை இன்றும் தரிசிக்கலாம்.

அடியார்கள் திருக்கூட்டம் சூழ, அடியார்க்கு அடியாராய் பக்தர்கள் கூடும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலின் அறுபத்து மூவர் திருவிழா வரும் திங்கள் (18.03.2019) அன்று நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு ‘அங்கம்பூம்பாவாய்’ உற்சவம் நடைபெறும். அனைவரும் அறுபத்துமூவர் உற்சவத்தில் கலந்துகொண்டு தருமமிகு சென்னையின் நடுநாயகமாக வீற்றிருக்கும் ஈசன் கபாலீஸ்வரர் மற்றும் அன்னை கற்பகவல்லியின் அருளுக்குப் பாத்திரராவோம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு