Published:Updated:

`கபாலி... கபாலி...’ - விழாக்கோலமான மயிலையில் அறுபத்து மூவர்...

`கபாலி... கபாலி...’ - விழாக்கோலமான மயிலையில் அறுபத்து மூவர்...
`கபாலி... கபாலி...’ - விழாக்கோலமான மயிலையில் அறுபத்து மூவர்...

ருடம் முழுவதும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் அவற்றில் முக்கியமானது அறுபத்து மூவர் திருவிழா. சிவபெருமானுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு புரிந்த அறுபத்து மூன்று நாயன்மார்களும், கபாலீசுவரர் மற்றும் கற்பகாம்பாளுடன் பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்புரியும் திருநாளே, அறுபத்து மூவர் திருவிழாவாகும். இன்று அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூரே களைகட்டியிருக்கிறது. எங்கு நின்றாலும் `கபாலி... கபாலி...’ எனும் வாழ்த்து முழக்கத்தைக் கேட்க முடிகிறது.

இந்த வருடம் பங்குனிப் பெருவிழா கடந்த 11 - ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு நடந்த சிறப்புப் பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று (17.3.19) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து கபாலீசுவரர் கோயில் பங்குனித் திருவிழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்குப் பூஜை நடந்த பிறகு பிற்பகல் மூன்று மணியளவில் விழா தொடங்கியது. சங்கு, மத்தளம் முழங்கத் தீவர்த்தி உயர முதன் முதலில் வினைகள் போக்கும் விநாயகப் பெருமான் கோயில் கோபுரம் வழியே வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து கபாலீசுவரர் கற்பகாம்பாளுடன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பிறகு, முருகப் பெருமான் வள்ளி - தெய்வானையுடன் தோன்றி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். அவருக்குப் பின்னால் சண்டிகேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்தார். அவரைத் தொடர்ந்து திருஞான சம்பந்தரும், பூம்பாவையும் ஒரு தேரில் வெளிவந்தனர். அவர்களைத் தொடர்ந்து நாயன்மார்களின் பல்லக்குகள் ஒவ்வொன்றாக வெளிவந்து பக்தர்களுக்குக் காட்சிதரத் தொடங்கின. 

`கபாலி... கபாலி...’  என்று எழுந்த முழக்கத்துக்கிடையே பக்தர்கள் பல்லக்குகள் ஒவ்வொன்றையும் தூக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர். மயிலாப்பூர் முழுவதும் கபாலி... கபாலி... என்ற ஒற்றை முழக்கம் மட்டுமே தற்போது எழுந்துகொண்டிருக்கிறது. பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருப்பதால் காவல் துறையினர் போக்குவரத்தில் மாற்றம் செய்திருக்கிறார்கள்.