Published:Updated:

அழகர் எழுந்தருளப்போகும் ஆயிரம்பொன் சப்பரத்துக்குத் தலை அலங்கார பூஜை!

அழகர் எழுந்தருளப்போகும் ஆயிரம்பொன் சப்பரத்துக்குத் தலை அலங்கார பூஜை!
அழகர் எழுந்தருளப்போகும் ஆயிரம்பொன் சப்பரத்துக்குத் தலை அலங்கார பூஜை!

இந்த வருடத்துக்கான சித்திரைத் திருவிழா வரும் 8-ம் தேதி திங்கள்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 

துரை என்றாலே, உலகப் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாதான் அனைவரின் நினைவுக்கும் வரும். குறிப்பாக, `மீனாட்சி பட்டாபிஷேக வைபவம்', `மீனாட்சி திருக்கல்யாணம்', `கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்' எனக் களைகட்டும் திருவிழாவைத் தரிசிக்க பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள். இந்த வருடத்துக்கான சித்திரைத் திருவிழா வரும் 8-ம் தேதி திங்கள்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் தொடக்கமாக, மீனாட்சி திருக்கல்யாணத்துக்குச் சீர் கொண்டு வரும் அழகர் எழுந்தருளும் கோயில்கள் மற்றும் மண்டகப்படிகளில் முகூர்த்தக்கால் நடைபெறும் நிகழ்ச்சி, நாளை நடைபெறுகிறது. 

சித்திரைத் திருவிழாவின்போது, அழகர்மலையிலிருந்து புறப்படும் கள்ளழகர், சுமார் 30 கி.மீ. தொலைவு பயணித்து வண்டியூர் வந்து சேர்கிறார். திரும்பும்போதும் அதே வழியிலேயே செல்கிறார். வழிநெடுகிலும் பல நூறு வருடங்கள் பழைமையான கல் மண்டபங்கள் உட்பட 400-க்கும் அதிகமான இடங்களில் கள்ளழகருக்கு மண்டகப்படிகள் நடைபெறும்.  

இந்த மண்டபங்களில் பந்தக்கால் நடும் வைபவம், வருடந்தோறும் சித்ரா பவுர்ணமிக்கு முந்தைய அமாவாசை நாளில் நடைபெறுகின்றது. அதன்படி நாளை அமாவாசை தினத்தன்று, காலையில் தல்லாகுளம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் `தலை அலங்கார பூஜை' நடைபெறுகின்றது. அதைத் தொடர்ந்து கோயில் வாசல் பகுதியில் `காலை 9 மணிமுதல் 10 மணிக்குள்' பந்தற்கால் ஊன்றப்படுகிறது. 

ஆயிரம்பொன் சப்பரத்தின் தலைப்பகுதிக்குச் செய்யப்படும் பூஜையே `தலை அலங்கார பூஜை!' இந்த ஆயிரம் பொன் சப்பரத்தின் பின்னணியில் சிலிர்ப்பூட்டும் சம்பவம் ஒன்றும் உண்டு. 

மதுரையை ஆட்சி செய்து வந்த திருமலைநாயக்கர், அழகர்கோயில் கள்ளழகருக்கு அழகியதொரு தேரினைச் செய்து காணிக்கையாக்க விரும்பினார். ஆனால், அழகர் கோயிலில் ஏற்கெனவே தேர் இருப்பதால், புதிய தேர் செய்வது ஆகம விதிகளுக்கு முரணானது என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் கூறினர். ஆனாலும், தேர் போன்ற அமைப்பில்தான் ஏதேனும் ஒன்றைச் செய்து அழகருக்குக் காணிக்கையாக்க நினைத்த திருமலைநாயக்கர், சிற்ப சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த சிற்பி ஒருவரைக் கொண்டு, அழகான சப்பரம் ஒன்றைச் செய்து அழகருக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். 

சரி, இந்தச் சப்பரத்துக்கு ஆயிரம் பொன் சப்பரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது?

தான் நினைத்ததை விடவும் மிக அழகான வடிவமைப்பில் அந்தச் சப்பரம் அமைந்துவிடவே, மனம் மிகவும் மகிழ்ந்த திருமலை நாயக்கர், சப்பரத்தைச் செய்த சிற்பிக்கு ஆயிரம் பொன்னை அள்ளித் தந்தார். எனவே, இந்தச் சப்பரத்துக்கு ஆயிரம் பொன் சப்பரம் என்ற பெயர் ஏற்பட்டதாம்!

பந்தக்கால் ஊன்றியதையடுத்து முக்கிய நிகழ்வாக, வண்டியூரில் வைகையாற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் 2 மணிமுதல் 2.30 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்படுகின்றது. கள்ளழகர் மதுரைக்கு வருவதே இந்த மண்டபத்தில் மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம் வழங்குவதற்காகத்தான். எனவே, இந்த மண்டபத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு மதுரை மீனாட்சிக்கோயிலில் இருந்தும், மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்தும் கோயில் யானை, தம்பட்டக் காளை உட்படச் சகல பரிவாரங்களும் வருகின்றன என்பது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகின்றது.

``இந்த இரண்டு கோயில்களிலிருந்தும் பரிவாரங்கள் வருவது வழிவழியாகத் தொடர்கின்றது. ஒரு கோயிலின் முகூர்த்தக்கால் விழாவின்போது வேறு கோயிலிலிருந்து சகலவிதமான விருதுகளும் வருவது அழகருக்கான இந்த விழாவில் மட்டும்தான்!" எனச் சொல்லி பக்திப் பெருக்கோடு மகிழ்கிறார், அழகர்கோயில் அம்பி பட்டர். அழகர்மலை சுந்தரராஜபெருமாள் கோயிலிலும், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலிலும் நாளை முகூர்த்தக்கால் நடப்படுகின்றது. இதற்காக இந்தக் கோயில்களின் சுற்றுச் சுவர்கள் வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அழகர் வேடமணிந்து திரியெடுத்து ஆடுவது, விசிறி வீசுவது, துருத்தி நீர் பீய்ச்சுவது உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைச் செலுத்தவிருக்கும் பக்தர்கள் அனைவரும் அழகரை வழிபட்டு நாளை முதல் விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு