Published:Updated:

மேஷ ராசியில் தொடங்கும் யுகாதிப் பண்டிகை... திருப்பதியில் நாளை சிறப்பு வழிபாடு!

மேஷ ராசியில் தொடங்கும் யுகாதிப் பண்டிகை... திருப்பதியில் நாளை சிறப்பு வழிபாடு!
மேஷ ராசியில் தொடங்கும் யுகாதிப் பண்டிகை... திருப்பதியில் நாளை சிறப்பு வழிபாடு!

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு பண்டிகையான `யுகாதி' நாளை (6.4.19) கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் வசிக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் ஒவ்வொரு வருடமும் இதைச் சிறப்பாகக் கொண்டாடுவர். மராட்டியர்கள் `குடிபாட்வா’ என்றும், சிந்தி இன மக்கள் `சேதி சந்த்' என்றும் இதே தினத்தில் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சாந்திரமான ஆண்டு பிறப்பு , முதன்முதலில் சாலிவாகனன் என்ற சாதவாகன மன்னனால் தொடங்கப்பட்டது. சாலிவாகனன் புராணக் கதைகளின்படி, உஞ்சையினி மன்னன் விக்கிரமாதித்யனைத் தோற்கடித்தவன். சாலிவாகன மன்னனே, கௌதமபுத்திர சதகர்ணி என்ற கருத்தும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் உண்டு.

சாதவாகனர்கள், கிமு 1 - கி.பி - 2 ம் நூற்றாண்டு காலகட்டத்தில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்களாவர். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சாந்திரமான நாட்காட்டி கி.பி - 78 ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. 

சைத்ர மாதத்தின் முதல்நாள்தான் பிரம்மன் இந்த உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணம் கூறுகிறது. வடமொழியில் யுகாதி என்றால் `யுகத்தின் தொடக்கம்’ என்று பொருள். அதனால், யுகம் தோன்றிய நாளாததால் இந்த நாளுக்கு `யுகாதி’ என்ற பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு. எனவே, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், யுகாதி தினத்தில்தான் புது தொழில், கல்வி, வேலை ஆகியவற்றைத் தொடங்குகிறார்கள். இந்த தினத்தில் எந்த புதுப் பணியைத் தொடங்கினாலும் அது சிறக்கும் என்பது நம்பிக்கை. 

மேலும், சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால் யுகாதி பண்டிகை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியின் போதுதான் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 12 - ம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை `பாஸ்கரா - 2' வகுத்த கணித அடிப்படையில் யுகாதி புது வருடமாகக் கணக்கிடப்படுகிறது.

அதாவது சூரியன், பூமத்திய ரேகையைக் கடந்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தராணயத்தில் சஞ்சரித்திருக்கும் போது வரும் அமாவாசைக்கு அடுத்த நாளே புது வருடப்பிறப்பாகக் கருதப்படுகிறது. 

வசந்த காலத்தின் பிறப்பு, சைத்ர மாதத்தின் முதல் நாள், முதல் வளர்பிறை, முதல் திதி என்று அனைத்திலும் முதலாவது வருவதால்தான் யுகாதி பண்டிகை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. வசந்த காலத்தில் ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் `வசந்த நவராத்தி (சைத்ர நவராத்ரி) விழா, யுகாதியன்று தொடங்கி ராமநவமியன்று முடிவடைகிறது. 

புராணங்களில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் யுகாதி தினத்தின் போதுதான் நடந்திருக்கின்றன...

1. தசாவதாரங்களில் முதலாவதான மச்சாவதாரம் யுகாதியன்றுதான் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
2. ஸ்ரீராமர், சீதா தேவியை மீட்டு, அயோத்திக்குத் திரும்பியதும் யுகாதியன்றுதான். 
3. பாரதத்தில், யுதிஷ்டிரர் பட்டாபிஷேகம் செய்துகொண்டதும் யுகாதியன்றுதான் என்று நம்பப்படுகிறது. 
4. கிருஷ்ணாவதாரம்  பூர்ணத்துவம் பெற்ற நாள் யுகாதி என்று புராணங்கள் சொல்கின்றன.
5. துவாபரயுகம் முடிந்து கலியுகம் ஆரம்பமான தினமும் யுகாதி என்றும் சொல்லப்படுகிறது.

திருப்பதி திருமலை கோயிலில் யுகாதியன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். பக்தர்களுக்கு முன் புது வருடப் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வும் அரங்கேறும். இந்த வருடம் யுகாதியைக் கொண்டாடுவதற்காக, சுமார் ஐந்து டன் எடை கொண்ட அரளி, மரிக்கொழுந்து, ரோஜா, சாமந்தி, துளசி உள்ளிட்ட மலர்களால் திருப்பதி திருமலை கோயில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. 

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வசிக்கும் அனில்குமார் மல்லக்கேடி யுகாதி கொண்டாட்டம் பற்றிக் கூறியதாவது...

``ஒவ்வொரு புத்தாண்டின் போதும், காலைலயே எழுந்திருச்சி, எண்ணெய் தேய்ச்சு குளிச்சி, புத்தாடை உடுத்தி, வீட்ல இருக்கற எல்லா கதவுகள்ளையும் மாவிலைத் தோரணம் கட்டுவோம். சாமி கும்பிட்டுட்டு, உணவு உண்போம். அன்றைய உணவுல விசேஷமா, பூர்ண போளியும், அறு சுவையும் சேர்ந்த `யுகாதி பச்சடி' யும் இடம்பெற்றிருக்கும். யுகாதி பச்சடி, இன்பம், துன்பம்னும் எல்லாமும் சேர்ந்ததுதான் வாழ்க்கைணு எங்களுக்கு உணர்த்துறதா இருக்கும். 

எங்க வீட்ல இருக்கற கால்நடைகளை வழிபட்டு, உணவு கொடுப்போம். காலைல, இது எல்லாம் முடிஞ்சதுக்குப் பிறகு ஒவ்வொருத்தவங்களும், ஆயுத பூஜைக்குச் செய்ற மாதிரியே பூஜை செய்து புதுக் கணக்கைத் தொடங்குவோம்.” என்றார்.

மேஷ ராசியில் தொடங்கும் யுகாதி இந்த வருடம் மக்களுக்கு வசந்தத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்...