Published:Updated:

'சித்திரைத் திருவிழா நடக்குற பத்துநாள்கள்ல உண்மையான உறங்கா நகரத்தைப் பார்க்கலாம்!'- 'பட்டிமன்றம்' ராஜா #MaduraiChithiraiFestival

'சித்திரைத் திருவிழா நடக்குற பத்துநாள்கள்ல உண்மையான உறங்கா நகரத்தைப் பார்க்கலாம்!'- 'பட்டிமன்றம்' ராஜா #MaduraiChithiraiFestival
'சித்திரைத் திருவிழா நடக்குற பத்துநாள்கள்ல உண்மையான உறங்கா நகரத்தைப் பார்க்கலாம்!'- 'பட்டிமன்றம்' ராஜா #MaduraiChithiraiFestival

'சித்திரைத் திருவிழா நடக்குற பத்துநாள்கள்ல உண்மையான உறங்கா நகரத்தைப் பார்க்கலாம்!'- 'பட்டிமன்றம்' ராஜா #MaduraiChithiraiFestival

``சித்திரைத் திருவிழா மதுரைக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே பெருமை சேர்க்கிற விழா. நாயக்க மன்னர்கள், அவர்கள் காலத்தில் இருந்த சைவ, வைணவ பூசல்களை மாற்ற இந்தத் திருவிழாவை வடிவமைத்திருக்கிறார்கள். அழகர் கோயில் திருவிழாவையும், மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவையும் ஒரே மாதத்தில் நிகழ்த்த ஏற்பாடு செய்தனர். மீனாட்சியம்மன் கோயிலில் பத்துநாள்கள் உற்சவம் நடக்கும். திருக்கல்யாணம் நடக்கும், திருத்தேர் நடக்கும். அழகர் வருவதற்கு முன்பாகவே மீனாட்சி திருக்கல்யாணம் நடந்து முடிந்துவிடுவதால், அவர் கோபித்துக்கொண்டு செல்வதாக ஒரு கதை மக்களிடையே உண்டு. இதன்மூலம், இரு சமய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முயற்சியாகத்தான் இந்தத் திருவிழாவைக் காணமுடிகிறது..." என்கிறார் `பட்டிமன்ற' பேச்சாளர் ராஜா.

மதுரையின் மைந்தனான ராஜாவிடம், `சித்திரைத் திருவிழா நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்' என்று கேட்டதும் மடைதிறந்த வெள்ளம்போல வந்து கொட்டுகின்றன வார்த்தைகள். 

``சித்திரைத் திருவிழா, இப்போ இருக்கிற மதுரை மட்டுமல்ல, அந்தக் காலத்தில் மதுரை மாவட்டம் எனப்பட்ட தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து ஊர்களும் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாக இருந்தது. வைகைக் கரை முழுக்கவே சித்திரைத் திருவிழா நடைபெறும். நான் என் இளம்வயதுவரைக்கும், கீழமாத்தூர் என்கிற கிராமத்தில்தான் இருந்தேன். அப்போ, பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். எங்க வீட்டு ஓரமா வண்டிகள் வரிசையாப் போகும். நாங்க உட்கார்ந்து அதை எண்ணிக்கிட்டு இருப்போம். இரவெல்லாம் வண்டிகள் போய்க்கொண்டேயிருக்கும். அதைக் காண்பதே மிக அழகா இருக்கும். 

இப்படிக் கிளம்பி வருகிற மக்களுக்கு, உணவு ஒரு பிரச்னையாகவே இருக்காது. தாகத்துக்கு நீர்மோர், ஜூஸ், பானகம் மாதிரி திரவங்கள், புளியோதரை, பொங்கல்ன்னு நிறைய உணவுகள் வயிறார சாப்பிடக் கிடைக்கும். அந்தக் காலத்தில் இதற்காகவே பெரிய மனிதர்கள், நிறுவனங்கள் எல்லாம் மண்டகப்படிகள் ஏற்படுத்தி அதை ஒரு சேவையா செஞ்சிகிட்டிருந்தாங்க. இந்தத் திருவிழாவுல அன்னதானம்தான் பிரதானம். 

சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரைல அந்தக் காலத்தில் இரண்டு விசயங்கள் நடக்கும். ஒன்று பொருட்காட்சி... மற்றொன்று சர்க்கஸ். இந்த ஆண்டு தேர்தல் சேர்ந்துவர்றதால பொருட்காட்சி வைக்கிறாங்களான்னு தெரியல. சர்க்கஸ் பெரும்பாலும் இல்லைன்னே சொல்லலாம். அந்தக் காலத்துல சித்திரைத் திருவிழாவுக்கு வரும் ஜனங்கள், மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போவாங்க, அழகரை சேவிப்பாங்க, அப்புறம் பொருட்காட்சி... இல்லேன்னா சர்க்கஸ். அதுவும் இல்லேன்னா சினிமா. திருவிழா நடக்கும் பத்து நாள்களும் மதுரை உறங்காது. மதுரை மிகவும் அழகாகக் காட்சி தருவது இந்தத் திருவிழாக் காலங்களில்தான். 

எதிர் சேவைன்னு ஒண்ணு நடக்கும்... இந்த ஆண்டு எதிர்சேவை, தேர்தல் அன்னைக்குதான் நடக்குது. எதிர்சேவை அன்றைக்குக் கோரிப்பாளையம் பகுதியே அதிரும். அந்த அளவிற்கு மனிதர்கள் கூட்டம் அலைமோதும். இதில் குடும்பமாக வந்தவர்கள் கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவரை பிரிந்துபோய்விடுவதும் நடக்கும். அங்க ஒரு உயரமான ஒரு மேடை இருக்கும். அங்க மைக்கில் ஒரு போலீஸ்காரர் தொடர்ந்து கத்திக்கிட்டே இருப்பாரு.

ஒருமுறை, புதிதாகத் திருமணம் ஆன கணவன் தன் மனைவியைத் தவறவிட்டுட்டு காவல்துறைல புகார்கொடுக்க, காவல்துறை தேடிக் கண்டுபிடிச்சிக் கூட்டிகிட்டு வந்தாங்க. அந்த மனுஷன், எப்படியோ வந்தியேன்னு சந்தோஷப்படாம, `எங்க போனே'னு அந்த அம்மாவை அடிக்கப்போக ஒரே கலாட்டாவாகிப்போச்சு.

அழகர் கோயில் திருவிழாவில் மிக முக்கியமான விஷயம், அழகராக மாறி பக்தர்கள் வேஷம் கட்டிகிட்டு வர்றதுதான். இவங்களுக்கான உடைகளைத் தைக்க தையல் கலைஞர்கள் புதுமண்டபம் முழுக்க இருப்பாங்க. பக்தர்கள் ஒரு தோல்பையில தண்ணீர் வச்சிப் பீச்சியடிப்பாங்க. இப்படி எல்லோரும் கூடித்தான் மதுரையை அந்தப் பத்து நாள்களும் அழகுபடுத்துவாங்க.

சித்திரைத் திருவிழால இன்னும் பழைய மரபுகள் நிறைய இருக்கிறது. மதுரைக்குப் பக்கத்துல அழகர்கோயில் போற வழியில கள்ளந்திரி என்கிற ஊர் இருக்குது. அன்று முதல் இன்றுவரை அந்தக் கிராமத்தினர்தான், கையில் தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு அழகர்கூடவே பாதுகாப்பாக வந்து செல்கின்றனர். இதுபோன்ற பல மரபுகள் இந்தத் திருவிழாவில் இன்னும் கடைபிடிக்கப்படுது.    

முக்கியமா சொல்லணும்னா, எல்லாச் சமயத்தைச் சேர்ந்தவங்களும் இந்தத் திருவிழாக் காலத்துல பக்தர்களுக்கு உணவுதானத்துல ஈடுபடுறாங்க. இன்றும், சாதி, சமய வேறுபாடுகள் கடந்து எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி, அன்பு செய்யும் திருவிழா இந்தச் சித்திரைத் திருவிழா. சுமார் பத்து லட்சம் ஜனங்கள் வந்து கலந்துகொள்ளும் விழா. வடநாடுகளில் நடைபெறுகிற கும்ப மேளா போல தமிழகத்தின் பெருமை இந்தச் சித்திரைத் திருவிழா

அடுத்த கட்டுரைக்கு