Published:Updated:

நாளை குருத்து ஞாயிறு... இயேசுவின் இறையாட்சிக் கனவை நனவாக்குவோம்! #PalmSunday

வாக்களிக்கப்பட்ட மெசியாவாகவும் அமைதியின் அரசராகவும் விளங்கிய இயேசு நம்மை மீட்பதற்காகத் தன்னுடைய உயிரையே தருகிறார் என்றால், அதற்குக் கைமாறாக நாம் ஏதாவது செய்வது நம்முடைய கடமையாகும். 

நாளை குருத்து ஞாயிறு... இயேசுவின் இறையாட்சிக் கனவை நனவாக்குவோம்! #PalmSunday
நாளை குருத்து ஞாயிறு... இயேசுவின் இறையாட்சிக் கனவை நனவாக்குவோம்! #PalmSunday

முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். நீதியோடும், நேர்மையோடும் அவன் அரசாட்சி செய்ததால் மக்கள் அவனுடைய ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, அந்த அரசாங்கத்துக்குத் திருஷ்டிப் பொட்டு வைத்தாற்போன்று வளர்ந்தான் இளவரசன். அவன் பொல்லாத நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தாறுமாறாக வாழ்ந்து வந்தான். ஒருமுறை இளவரசனைச் சந்தித்த ஒரு பெரியவர், அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டி, `இளவரசராக இருந்துகொண்டு இப்படியெல்லாம் வாழலாமா?' என்று கேட்டார். பெரியவர் சொன்னதைக் கேட்டதும் இளவரசனுக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே அவன் அந்தப் பெரியவரை ஓங்கி அடித்தான். அவன் அடித்த மறுகணம் பெரியவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார். 


இளவரசன் பெரியவரை அடித்துக்கொன்ற சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. அது அரசனுடைய காதுகளையும் எட்ட, இளவரசனை விசாரணைக்கு உட்படுத்தினான். விசாரணையின்போது இளவரசன் பெரியவரை அடித்துக்கொன்றது உண்மை என்பது நிரூபணமானது. அப்போது அவையில் கூடியிருந்தவர்கள் அனைவரும், ‘நீதி வழுவாத அரசன் என்ன முடிவெடுக்கப் போகிறானோ?’ என்று அவனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அரசன் அவையோரைப் பார்த்து, `தவறு செய்தது யாராக இருந்தாலும், அது என் மகனாகவே இருந்தாலும் தண்டனை ஒன்றுதான். ஆகவே, நாளைக் காலை இளவரசனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்' என்றான். 

மறுநாள் காலை, மக்கள் அனைவரும் என்ன நடக்கப்போகிறதோ என்று அரண்மனைக்கு முன்பாக மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார்கள். நேரம் சென்றுகொண்டிருந்தது. அரசனையும் இளவரசனையும் அங்கே காணவில்லை. சிறிதுநேரத்துக்குப் பின்பு இரண்டு கைகளும் கட்டப்பட்டு, தலை நன்றாக மூடப்பட்ட நிலையில் இளவரசன், தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் மேடைக்குக் கொண்டுவரப்பட்டான். அதன்படி, அவனுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எல்லாம் நிறைவேறியபின்பு மக்கள் மத்தியில் ஒருவிதமான சலசலப்பு ஏற்பட்டது. ‘இளவரசன் தூக்கிலிடப்பட்டிருக்கிறான்... ஆனால், இந்த நேரத்தில் அரசனைக் காணவில்லையே?’ என்று எல்லோரும் பரபரப்பாகப் பேசத் தொடங்கினர். சிலமணி நேரத்துக்குப் பிறகு இளவரசனுக்குப் பதில் அரசன் தூக்கிலிடப்பட்டது தெரிந்தது. உடனே மக்கள் அனைவரும் ‘தன் மகனுக்காகத்  தன்னையே தந்த அரசன் எங்கேயும் உண்டோ’ என்று அரசனை நினைத்துக் கண்ணீர் சிந்தி அழுதார்கள். 


பாடுகளின் குருத்து ஞாயிறு, நாளை கொண்டாடப்படவிருக்கிறது. குருத்தோலை ஞாயிறு அல்லது குருத்தோலைத் திருவிழா என்பது இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களால் நினைவுகூரப்படும் ஒரு நிகழ்வாகும். 

இயேசு கிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் எருசலேம் நகருக்குள் நுழைந்தார். அப்போது அவர் ஒரு கழுதையின் மீது ஏறி அமர்ந்து வந்தார். அப்போது வழியெங்கும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு கைகளில் பேரீச்சை மரத்தின் குருத்துகள், ஒலிவ மரத்தின் கிளைகள் மற்றும் லில்லி மலர்களை ஏந்தியபடி இயேசுவை முன்னால் போகச் செய்து மக்கள் அணிவகுத்துச் சென்றார்கள்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரக்கூடிய அரசன் எப்படித் தன்னுடைய மகனுக்காகத் தன்னையே தந்தாரோ, அதுபோன்று நம் அனைவரது மீட்புக்காகவும் தன்னையே தந்த/ தரவிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் தியாக அன்பைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். 
இயேசு எருசலேம் நகரில் வெற்றிவீரராக பவனி வருகிறார். இயேசுவின் இந்த எருசலேம் பவனி அவர் வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை உரக்கச் சொல்கிறது. எவ்வாறென்றால், இறைவாக்கினர்களான செக்கரியாவும் (செக் 9:9) செப்பனியாவும் (3: 16-19) மெசியா என்பவர் நீதியுள்ளவர், எளிமையானவர் என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

அதேபோல், 'அவர் வருகையின்போது, மக்களுடைய துன்பமெல்லாம் நீங்கி, மகிழ்ச்சி பிறக்கும்' என்றும், 'மீட்பும் புத்துயிரும் இன்னும் ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்' என்றும் சொன்னதும் இயேசுவின் வாழ்க்கையில் அப்படியே நிறைவேறுகின்றன. அந்த அடிப்படையில் இயேசுவை வாக்களிக்கப்பட்ட மெசியா என்று சொல்லலாம். மேலும், எருசலேம் பவனியின்போது மக்கள் உரைத்த `ஓசன்னா' என்ற வார்த்தையும் (ஓசன்னா என்ற கிரக்கச் சொல்லுக்கு ‘காப்பாற்றும்’ என்று பொருள் - 2 சாமுவேல் 14:4) இயேசுவை மக்கள் வாக்களிக்கப்பட்ட மெசியா என ஏற்றுக்கொண்டதை உறுதிப்படச் சொல்கிறது.

இயேசு, எருசலேம் நகருக்குள் பவனி வரும்போது கழுதைக் குட்டியின்மீது அமர்ந்து வருகிறார். வழக்கமாக ஓர் அரசர் இன்னொரு நாட்டின்மீது படையெடுத்துச் செல்லும்போது குதிரையின்மீது அமர்ந்து செல்வார். ஆனால் இயேசு, இந்த உலக அரசர்களைப் போன்று நாடுகளைக் கைப்பற்றி ஆட்சிசெலுத்தும் அரசர் இல்லை. மாறாக, அமைதியைக் கொண்டு வந்த அரசர் என்பதை நிரூபிக்கும்வகையில் அவர் கழுதையின்மீது அமர்ந்து பவனி வருகிறார். இவ்வாறு இயேசுதான் இந்த உலகத்துக்கு அமைதியைக் கொண்டு வந்த அமைதியின் அரசர் என்பதை நிரூபிக்கிறார். ஏற்கனவே அவருடைய பிறப்பின்போது வானதூதர்கள், `உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக (லூக் 2:14)' என்று பாடியதையும் இங்கு இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 

வழக்கமாக யூதர்களின் பாஸ்கா விழாவின்போது உலகம் முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் யூதர்கள் எருசலேமில் ஒன்றுகூடுவார்கள். இயேசு நினைத்திருந்தால் அவ்வளவு பெரிய மக்கள் தொகையைத் தனக்குத் துணையாகக் கொண்டு ரோமையர்களின் ஆட்சியைக் கவிழ்த்து தன்னுடைய ஆட்சியை நிறுவியிருக்கலாம். ஆனால், இயேசுவின் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது இல்லை என்பதாலும், அவர் இந்த உலகுக்கு அமைதியைக் கொண்டுவந்தார் என்பதாலும் அப்படிச் செய்யவில்லை. 

யூதர்களின் பாஸ்கா விழாவின்போது எருசலேமில் உள்ள கோயிலில் 20 ஆயிரத்தும் மேற்பட்ட ஆடுகள் பலியாக ஒப்புக்கொடுக்கப்படும். ஆனால், `பாஸ்கா ஆடு' மட்டுமே பாஸ்கா பெருவிழாவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக தலைமைக் குருவால், எருசலேமில் பவனியாகக் கொண்டுவரப்பட்டு பலியாக ஒப்புக் கொடுக்கப்படும். இயேசு தன்னை `பாஸ்கா ஆடு' என்றும் உலகின் பாவங்களைப் போக்கும் `கடவுளின் செம்மறி' (யோவா 1:29) என்றும் நிரூபிக்கும்வகையில் தன்னையே பலியாகத் தருகிறார். எனவே, வாக்களிக்கப்பட்ட மெசியாவாகவும் அமைதியின் அரசராகவும் விளங்கிய இயேசு நம்மை மீட்பதற்காகத் தன்னுடைய உயிரையே தருகிறார் என்றால், அதற்குக் கைமாறாக நாம் ஏதாவது செய்வது நம்முடைய கடமையாகும். 

இயேசு எருசலேமின் உள்ளே நுழையும் முன்பு கண்ணீர் வடித்தார் (லூக் 19: 41-42). உள்ளே நுழைந்த பின்பு திருக்கோவிலில் வாணிபம் நடப்பதைக் கண்டும் அத்திமரத்தில் கனி இல்லாததைக் கண்டும் வேதனையடைந்தார் (லூக் 19: 44-46). நாம் எருசலேம் நகரில் வாழும் மக்களைப் போன்று இயேசுவுக்கு வருத்தத்தையும் வேதனையும் தரப்போகிறோமா? அல்லது அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து, மிகுந்த கனிதந்து (யோவா 15:8) அவரது அன்பில் நிலைத்திருக்கப் போகிறோமா? (யோவா 15:9) என்று சிந்தித்துப் பார்ப்போம்.

 ‘தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை’ (யோவா 15: 13) என்று சொல்லி, நமக்காகத் தன்னுயிர் தந்த இயேசுவின் வழியில் நாமும் நடந்து, தேவைப்பட்டால் உயிரையும் தந்து இயேசு கண்ட இறையாட்சிக் கனவை நனவாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய்ப் பெறுவோம்.