Published:Updated:

அட்சய திரிதியை, ஆதிசங்கரர் ஜயந்தி... சித்திரை மாத விழாக்கள், விசேஷங்கள்!

அட்சய திரிதியை, ஆதிசங்கரர் ஜயந்தி... சித்திரை மாத விழாக்கள், விசேஷங்கள்!
அட்சய திரிதியை, ஆதிசங்கரர் ஜயந்தி... சித்திரை மாத விழாக்கள், விசேஷங்கள்!

தற்போது   நாம் இருப்பது 33-வது வருடம் விகாரி. வரும் ஞாயிறன்று, விளம்பி முடிந்து விகாரி தொடங்குகிறது.  வருடத்தில் முதல் மாதம் சித்திரை. சித்திரை என்றால் 'ஒளி பொருந்திய' என்று பொருள். இளவேனிற்காலமான சித்திரை பிறந்தாலே வசந்தமும் சேர்ந்து பிறந்துவிடும். சித்திரையில்தான், மகான்களான மகாவீரர், ராமானுஜர், ஆதி சங்கரர் ஆகியோர் அவதரித்தனர். மதுரையில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என்று பல்வேறு ஆன்மிகத் திருவிழாக்களும் சித்திரையில்தான் வருகின்றன. சித்திரை மாத விழாக்களையும், விசேஷங்களையும் அறிந்துகொள்வோம்.

14.4.19 வருடப்பிறப்பு

விளம்பி முடிந்து மங்களகரமான விகாரி வருடம், உத்தராயன புண்ணிய காலத்தில் பிறக்கிறது. வளர்பிறை, ஆயில்ய நட்சத்திரம் 2 - ம் பாதம், கடக ராசி, கடக லக்னத்தில் புத்தாண்டு பிறப்பதால் இந்த வருடம் முழுவதும் செழிப்பாக இருக்கும் என்று பஞ்சாங்கங்கள் கூறுகின்றன. 

17.4.19 மகாவீரர் ஜயந்தி

சமண மதத்தின் 24 - வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர். கொல்லாமையையும் வாய்மையையும் உலகத்துக்குப் போதித்து, சமண மதக் கருத்துகளைப் பரப்பிய மகாவீரர் அவதரித்த தினம் இன்று. மகாவீரர் ஜயந்தியையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பழைமைவாய்ந்த திரைலோக்கியநாதர் ஜீனசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

17.4.19 மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

பாண்டிய மன்னன் மலையத்துவஜனுக்கு மகளாகப் பிறந்த மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் நிகழும் தினம் இன்று. மதுரையில் பல்லாயிரக்கணக்கானோர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அருள் பெறுவர். இந்த வைபவத்தின்போது சுமங்கலிகள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வர். 

19.4.19 சித்திரைப் பௌர்ணமி

சித்திரை மாதத்தில், பௌர்ணமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யும் சித்திரகுப்தன் பிறந்த தினம் சித்திரா பௌர்ணமி. இன்று, சித்திரகுப்தனுக்கு விரதமிருந்து வழிபட்டால் ஆயுள் பெருகும், வாணிபம் செழிக்கும், பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

19.4.19 அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும், மதுரையின் புகழ் மிக்கத் திருவிழா சித்திரைப் பௌர்ணமியன்றுதான் நடைபெறும். திருமாலிருஞ்சோலையிலிருந்து தனது தங்கை மீனாட்சியின் திருமணத்துக்கு வரும் அழகர், வைகை ஆற்றைக் கடக்க இறங்குவார். அப்போது, அவருக்குத் திருமணம் நடந்துமுடிந்துவிட்ட செய்தி கிடைக்கும். உடனே, கோபித்துக்கொண்டு மீண்டும் அழகர்மலைக்கே திரும்பிச் சென்றுவிடுவதாக ஐதீகம். பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்ளும், இந்த வைபவம் தென் இந்தியாவில் நடக்கும் மிகப் பெரிய திருவிழாவாகும். 

19.4.19 புனித வெள்ளி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த் தியாகம் செய்த தினம். உலகம் முழுவதும் கிறித்தவர்கள்,  புனித வெள்ளியன்று இறைமகனாம் இயேசுபிரானின்  தியாகத்தைத் துதித்துப் போற்றுவர். அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 

21.4.19 ஈஸ்டர் ஞாயிறு

‘இந்த ஆலயத்தை இடித்துத் தள்ளுங்கள். மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்’  என்று சொன்ன சொல்லை மெய்ப்பிக்கும்விதமாக, இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று மீண்டும் உயிர்த்தெழுந்த திருநாள் இன்று. சாத்தானை வெற்றிகொண்டு மனித இனத்துக்கான மீட்பை இறைவன் அருளிய இந்த தினத்தில் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள், கொண்டாட்டங்கள் நடைபெறும்.  

17.4.19 சித்திரைத் திருவோண நடராஜர் அபிஷேகம்

ஓர் ஆண்டில் நடராஜப் பெருமானுக்கு ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடக்கும். அவற்றுள் சித்திரைத் திருவோண நாளும் ஒன்று. சிதம்பரத்தில் சித்திரைத் திருவோண நட்சத்திரத் தினத்தன்று ஆடலரசனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த உச்சிகால அபிஷேகத்தைத் தரிசித்தால், பிறப்பில்லாப் பெருவாழ்வை அடையலாம் என்பது ஐதீகம். 

23.4.19 வாஸ்து நாள்

வாஸ்து பகவான் உறக்கத்திலிருந்து கண் விழிக்கும் நாளே வாஸ்து தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது, புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை செய்வதற்கு உகந்தநாள். காலை 10.32 - 11.08 மணிக்குள் பூமிபூஜை செய்யலாம். தமிழ் வருடத்தின் முதல் வாஸ்துநாள் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.  

4.5.19 சித்திரை அமாவாசை

முன்னோர் வழிபாடு செய்வதற்கும், தர்ப்பணம் செய்வதற்கும் உகந்த நாள், அமாவாசை தினம். இன்று நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும். வாழ்க்கை வளமாகும் என்பது ஐதீகம்.   

7.5.19 அட்சய திரிதியை

சித்திரையில் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை, அட்சய திரிதியை. இதிகாசங்களின்படி, அட்சய திரிதியை நாளில்தான் திரேதாயுகம் தொடங்கியது. இது, பரசுராமர் அவதரித்தது, கங்கை நதி பூமிக்குப் பாய்ந்தது என்று பல்வேறு ஆன்மிக அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் நாள்.  அட்சய திரிதியை நாளில் லட்சுமி மற்றும் குபேரரை வணங்கினால் ஐஸ்வர்ய யோகம் கிடைக்கும். 

9.5.19 ஆதிசங்கரர் ஜயந்தி

கேரள மாநிலத்தில் காலடி எனப்படும் கிராமத்தில் பிறந்த அத்வைதத் தத்துவத்தின் பிதாமகர் ஆதிசங்கரர். தனது எட்டு வயதிலேயே துறவியாகி, ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்ட மகான். சண்மதங்கள் எனப்படும் கௌமாரம், சைவம், சாக்தம், சௌரம், வைணவம், கணாபத்தியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே மதமாக்கிய மகானின் அவதார தினம் இன்று. 

9.5.19 ராமாநுஜர் ஜயந்தி 

ஆதி சங்கரர் அவதரித்த அதே நட்சத்திரத்தில், ஸ்ரீபெரும்புதூர் திருத்தலத்தில் அவதரித்த மகான் ஸ்ரீ ராமாநுஜர். குருவிடம், தான் முயன்று பெற்ற உபதேசமான எட்டெழுத்து மந்திரத்தை, உலக மக்கள் அனைவரும் அடைந்து  பயன்பெற வேண்டும் என்று சொல்லிக் கோபுரத்தில் ஏறி நின்று கூவிய ஆன்மிகப் பகலவன் ராமாநுஜரின் அவதார தினம் இன்று.