Published:Updated:

சொந்த வீட்டில் சந்திரன்... தசம ஸ்தானத்தில் சூரியன்... அனைவருக்கும் முன்னேற்றம் தரும் தமிழ்ப் புத்தாண்டு!

ஏப்ரல் 14-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சுக்ல பட்சம், நவமி திதி, ஆயில்யம் நட்சத்திரத்தில், கடக ராசி, கடக லக்னத்தில் விகாரி தமிழ்ப் புத்தாண்டு பகல் 1.07 மணிக்குப் பிறக்கிறது. இந்த வருடக் கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக அமைந்திருக்கின்றன.

சொந்த வீட்டில் சந்திரன்... தசம ஸ்தானத்தில் சூரியன்... அனைவருக்கும் முன்னேற்றம் தரும் தமிழ்ப் புத்தாண்டு!
சொந்த வீட்டில் சந்திரன்... தசம ஸ்தானத்தில் சூரியன்... அனைவருக்கும் முன்னேற்றம் தரும் தமிழ்ப் புத்தாண்டு!

சித்திரை மாதம் வசந்தகாலத்தின் தொடக்கம். அதுவரை மரங்கள் தங்களுக்குள் சேர்த்து வைத்திருந்த வனப்பை வெளிப்படுத்தி பூத்துக்குலுங்கத் தொடங்கும். வேங்கை மரம் மொட்டுவிடத் தொடங்கினாலே சித்திரை நெருங்குகிறது என்று புரிந்துகொள்ளலாம். முதலில் வேம்பும் புங்கையும்தான் பூக்கும். அதன்பிறகு எல்லா மரங்களும் செடிகளும் பூக்களை முகிழத்தொடங்கிவிடும். 

சித்திரை முதல்நாள், சில கிராமங்களில் அதிகாலையிலேயே எழுந்து 'செண்பகம்' என்னும் பறவையைத் தேடிக் காணச் செல்வர். கறுப்பு நிற உடலையும் காவி நிற இறக்கையையும் உடையது செண்பகப் பறவை. அதன் வால் நீளமாக இருக்கும். காகத்தை விடவும் சற்றே பெரிதாக இருக்கும். செண்பகம், ஓரிடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காது. கிளைக்குக் கிளை தாவிக் குதித்துக்கொண்டே இருக்கும்.  

மற்ற நாள்களிலெல்லாம் வேலியோரம் சாதாரணமாகத் தென்படும் செண்பகம், சித்திரை முதல்நாள் மட்டும் பார்வைக்கு அகப்படாது. வயல், ஏரி, காடு, ஓடை, கரும்புத் தோட்டம் என்று அதைத் தேடாத இடம் இருக்காது. விடிந்ததும் தொடங்கும் செண்பகத் தேடல், சில நேரங்களில் உச்சிப்பொழுது வரைக்கும்கூட நீளும். வியர்த்து விறுவிறுக்கத் தேட, எங்காவது பொந்துக்குள் சத்தம் எழுப்பாமல் தனது இணையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் செண்பகம். அதிர்ஷ்டம் வாய்த்தவர்கள், செண்பகத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவர். செண்பகத்தைப் பார்த்த பிறகு, அடுத்த வேலை ‘நல்லேர்’ கட்டப் பயணப்படுவதுதான். 

PC : https://ta.wikipedia.org - AntanO

சித்திரைக்கு முதல் நாளே ஏர் கலப்பையைக் கழுவித் தயாராக வைத்திருப்பார்கள். கலப்பையோடு, அறுவடை முடிந்து சுத்தப்படுத்தி வைத்திருக்கும் வயலுக்குச் செல்வார்கள். அங்கு இரண்டு நீள்வட்டங்களின் அளவுக்கு உழவு செய்து, மையத்தில் மாடு மற்றும் ஏர் கலப்பையை அப்படியே நிறுத்தி வைத்துப் படையல் இடுவர். ஏர் கலப்பைக்கு முன்பாக, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து அதில் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபடுவர். இதில் சிறப்பே அதில் வைத்துப் படைக்கப்படும் கலப்பு அரிசி (காப்பரிசி) தான். அரிசி, எள், கம்பு, பச்சைப்பயறு... அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஊறவைத்து வெல்லம் சேர்த்து செய்வதுதான் கலப்பு அரிசி. வழிபாடு முடிந்ததும் இதை அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுப்பார்கள். நல்லேர் கட்டிவிட்டு வீடு திரும்பியதும் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசி வழங்கி பணம் கொடுப்பார்கள். பிறகு, வழக்கமான சித்திரைப் படையல் இட்டு, கோயிலுக்குச் சென்று வருவர். 

பெரும்பாலான கிராமங்களில் தமிழ் வருடப்பிறப்புக் கொண்டாட்டம் இப்படித்தான் இருக்கும். இப்போது பல வீடுகளில் ஏர் கலப்பை இல்லை. டிராக்டர்களே நிறைந்திருக்கின்றன. டிராக்டர் வைத்திருப்பவர்கள், மரபு விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை எடுத்துச்சென்று நிலத்தில் சம்பிரதாயத்துக்கு உழுதுவிட்டு வருகின்றனர்.  

இந்த வருடம், தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறக்கிறது. இந்த 'விகாரி' தமிழ்ப் புத்தாண்டின் சிறப்புகள் பற்றி விளக்குகிறார் ஜோதிடர் முத்து குருக்கள்.

“ஏப்ரல் 14-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சுக்ல பட்சம், நவமி திதி, ஆயில்யம் நட்சத்திரத்தில், கடக ராசி, கடக லக்னத்தில் விகாரி தமிழ்ப் புத்தாண்டு பகல் 1.07 மணிக்குப் பிறக்கிறது. இந்த வருடக் கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக அமைந்திருக்கின்றன. விகாரி வருடம், கடக லக்னத்தில் உதயமாகும்போது சந்திர பகவான் சொந்த வீட்டில் சஞ்சரிப்பது அருமையான அமைப்பு. அதே போன்று சூரிய பகவானும் தசம ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார்.

இந்தக் கிரக அமைப்பு, அனைவருக்கும் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொடுக்கப்போகிறது. பொருளாதார ரீதியில் மிகப் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். சித்திரைப் பிறப்பன்று மாலையில் 6 - 7 மணிக்குள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் அனைத்து வகையிலும் பலன் கிடைக்கும். காலையில் சிவபெருமானையும் மாலையில் லட்சுமியையும் தரிசித்தால் வாழ்வில் அனைத்து யோகங்களும் கிடைக்கும்” என்றார்.

தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் வளத்தையும் செழிப்பையும் கொண்டுவரட்டும். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!