Published:Updated:

விடைபெறுகிறது 'விளம்பி'... பிறக்கிறது 'விகாரி'... நம்பிக்கையை விதைக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டு!

விடைபெறுகிறது 'விளம்பி'... பிறக்கிறது 'விகாரி'... நம்பிக்கையை விதைக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டு!
விடைபெறுகிறது 'விளம்பி'... பிறக்கிறது 'விகாரி'... நம்பிக்கையை விதைக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டு!

புதிய ஆண்டில் நம்பிக்கையோடு அடியெடுத்துவைப்போம்!

ஓர் ஆண்டைக் கடந்துவருவதென்பது அத்தனை சுலபமானதல்ல. வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம், உறவில் மகிழ்ச்சி, பிரிதல் துயரம் எனப் பல வண்ணங்கள் கலந்த ஓவியம் போன்றது ஓர் ஆண்டு. மனித மனதுக்குக்  கணந்தோறும் கணந்தோறும் புதுப்புது மகிழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால், கிடைத்தாலும் அவற்றை மனம் உடனே கடந்துவிடுகிறது. ஆனால் துயரத்தையோ நீண்ட காலம் மனதுக்குள்ளேயே போட்டுப் புழுங்கிக் கிடக்கிறது. அத்தகைய துயரங்களில் இருந்து மீட்டெடுக்க உதவுபவை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள். மனதைப் புத்துணர்ச்சி பெறச்செய்து வாழ்வை நம்பிக்கையோடு முன்னெடுக்கச் செய்பவை அவை. 

புத்தாண்டு தினம் போன்ற பண்டிகை தினங்களை, ஒரு விடுமுறை நாளாகக் கருதும் மனநிலை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இன்று வந்துவிட்டது.  அதை விடுமுறைநாளாக மட்டுமே சுருக்கிவிட இன்று நுகர்வுக்கலாசாரம் முனைகிறது. தொலைக்காட்சி, விடுமுறைநாள்களை முழுமையாக ஆக்கிரமித்து, பிற விஷயங்களில் இருந்து நம்மைத் தனிமைப்படுத்துகிறது. விழாக்கள் என்பன பட்டிமன்றமும், புதிய திரைப்படங்களும் மட்டுமன்று. ஒரு நீண்ட நெடிய பாரம்பர்யத்தினை நமக்கு நினைவுபடுத்தும் தினம்.

இன்று 'விகாரி' வருடம் பிறந்திருக்கிறது. 'பிரபவ' வில் தொடங்கி 'அட்சய' வில் முடியும் தமிழ் வருடங்கள் , மொத்தம்  அறுபது. இதில் 33 வது ஆண்டு 'விகாரி.' 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் சுழற்சி அடிப்படையில், ஆண்டுகள் மீண்டும் இதே பெயர்களைப் பெறும். சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் இந்த வருடக் கணக்கு, நம் சமூகத்துக்கு மட்டும் உரியதன்று. உலகில் பல்வேறு நாகரிகங்களுக்கும் உரியதே. சீனா, சுமேரிய மற்றும் அமெரிக்காவில் வாழ்ந்த பழங்குடி மக்களான மாயன் இனத்தோரிடமும் இந்த அறுபதாண்டு சுழற்சிக் கணக்குகள் இருந்துவந்துள்ளன.   

60 என்கிற எண், காலக்கணக்கில் மிகவும் முக்கியமான எண். வருடங்கள் 60 என்பதைத் தாண்டி, 60 நொடிகள் ஒரு நிமிடம்; 60 நிமிடங்கள் ஒரு மணி நேரம். 60 நாழிகை ஒரு நாள் என முக்கியத்துவம் கொள்கிறது. 

தமிழ் நாட்டில், 60 ஆண்டுகளின் பெயர்கள் மற்றும் விவரங்கள் பற்றிய சான்றாதாரங்கள்  14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. 15 -ம்  நூற்றாண்டுக்கு முந்தியவராகக் கருதப்படும் இடைக்காடர் என்னும் சித்தர், தனது சோதிட நூலில் 60 ஆண்டுகளின் தன்மையை விளக்கும் வெண்பாக்களைப் பாடியிருக்கிறார். இன்றளவும் அந்த வெண்பாக்களை அடிப்படையாகக் கொண்டே சோதிட வல்லுநர்கள் ஆண்டுப் பலன்களைக் கணிக்கிறார்கள். 15 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த விவேக சிந்தாமணியிலும் தமிழ் ஆண்டுகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

ஆண்டின் தொடக்கத்தை சூரியமானம், சந்திரமானம் என்று வானவியல் சார்ந்து பகுப்பது நம் நாட்டில்  வழக்கமாக உள்ளது. யுகாதி, குடிபாட்வா போன்ற ஆண்டு பிறப்புகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை.  பிரபவ முதலான வருடங்கள், சூரியனை அடிப்படையாகக் கொண்டவை. தமிழகத்திலும், கேரளாவிலும் சூரிய அடிப்படையிலேயே வருடப் பிறப்புகள் அனுசரிக்கப்படுகின்றன. தமிழர்கள், இயற்கை வழிபாடுகளுள் ஒன்றான சூரிய வழிபாட்டை உடையவர்கள் என்பதால் இது பொருத்தமுடையதே. ஆண்டின் பன்னிரு மாதங்களும் சூரியன் பன்னிரு ராசிகளில் பிரவேசிப்பதை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டவை. 

தமிழ் மரபில் இந்தப் பன்னிரு மாதக் காலக் கணக்கு, தமிழ் இலக்கணங்களில் 'பொழுது'களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி ஆகிய ஆறுவகைப் பெரும்பொழுதுகளும், சித்திரையில் இருந்து பங்குனி வரையிலான பன்னிரு மாதங்களின் வரிசைக்குப் பொருந்தி வருவன.   

நம் மரபில் புத்தாண்டை வெறும் கொண்டாட்ட காலமாக மாத்திரம் பார்ப்பதில்லை. அதைப் புண்ணியகாலமாக அனுசரிக்கும் வழக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதப் பிறப்புமே புண்ணிய காலங்களாகக் கருதப்படுகின்றன. ஆண்டின் முதல்நாளைத் தென்புலத்தார் வழிபாட்டோடு தொடங்குவதன் மூலம் அவர்களின் ஆசியினைப் பெற்று வாழ்வில் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. எனவே, இதுபோன்ற புண்ணிய காலங்களில், தந்தை இல்லாதவர்கள் தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.    

புதிய ஆண்டில் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற நாம் இறையருளைப் பெறவேண்டும். எனவே, இந்த நாளில் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் முக்கியமானது. வீட்டிலும் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.  

முன்பெல்லாம் புத்தாண்டு அன்று, மக்கள் கோயில்கள், ஊர் சபைகள் போன்ற இடங்களில்  கூடி பஞ்சாங்கம் வாசிக்கும் வழக்கம் இருந்தது. இப்போது ஒருசில ஆலயங்களில் மட்டும் பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டு பஞ்சாங்கத்திலும் அந்த ஆண்டு எப்படியிருக்கும் என்று ஒரு முன்னோட்டம் தரப்படுகிறது.  

தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று, நம் பழைய தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றியை நோக்கிய முதல் அடியை எடுத்துவைப்போம். இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்ற கவலையை விடுத்து, 'முயற்சித் திருவினையாக்கும்' என்பதை நினைவில் கொள்வோம். 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று சொன்னவன் நம் பாட்டன். அவன் வாக்கை மெய்வாக்காகக் கொண்டு இந்த நாளில் புதிய தொடக்கத்தைக் காண்போம்.