Published:Updated:

பாரதக் களமாக மாறும் கூவாகம்... கிருஷ்ணனாக மாறும் திருநங்கைகள்..!- இன்று தாலி கட்டும் சடங்கு!

தமிழகத்தில் திருநங்கைகளுக்கென்று கொண்டாடப்படும் ஒரே திருவிழா கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாதான். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏராளமான கூத்தாண்டவர் கோயில்கள் காணப்பட்டாலும் அவற்றில் முதன்மையானது கூவாகம்.

பாரதக் களமாக மாறும் கூவாகம்... கிருஷ்ணனாக மாறும் திருநங்கைகள்..!- இன்று தாலி கட்டும் சடங்கு!
பாரதக் களமாக மாறும் கூவாகம்... கிருஷ்ணனாக மாறும் திருநங்கைகள்..!- இன்று தாலி கட்டும் சடங்கு!

மிழகத்தில் திருநங்கைகளுக்கென்று கொண்டாடப்படும் ஒரே திருவிழா கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாதான். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏராளமான கூத்தாண்டவர் கோயில்கள் காணப்பட்டாலும் அவற்றில் முதன்மையானது கூவாகம், கூத்தாண்டவர் கோயில். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் வந்து இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் என அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சந்தித்து மகிழும் திருவிழாவாகவும் இந்தத் திருவிழா அமைந்திருக்கிறது.

கூவாகம் திருவிழா என்றாலே திருநங்கைகள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் கொண்டாடும் திருவிழா என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால், அது அவர்களின் வாழ்வியல் வேதனைகளை வெளிப்படுத்தும் நிகழ்வு. கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகளின் நாயகன் அரவான். அரவான், கூத்தாண்டவர் கோயில்களில் மட்டுமல்லாமல் திரௌபதி அம்மன் கோயில்களிலும் முக்கிய வழிபாட்டுக் கடவுளாகத் திகழ்கிறார்.

`மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், சகல லட்சணங்களும் பொருந்திய வீரனைப் பலி கொடுக்க வேண்டும்’ என்று ஆரூடம் கூறுவான் சகாதேவன். பாண்டவர்கள் தரப்பில் சகல லட்சணங்களும் பொருந்தியவர்கள் மூவர்தான். அர்ச்சுனன், அவனது மகன் அரவான் மற்றும் கிருஷ்ணன். அர்ச்சுனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்தவன்தான் அரவான். பாரதப் போருக்கு அர்ச்சுனனும், கிருஷ்ணரும் முக்கியமானவர்கள், இருவரையும் பலிகொடுக்க முடியாது. அதனால் அரவானைத் தேர்வு செய்து களபலிக்கு ஆயத்தப்படுத்தினார்கள். 

திருமணம் ஆகாத நிலையிலிருந்த அரவான், முதலில் தன்னை களபலியிட ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு, பாண்டவர்களின் வெற்றியை மனதில் கொண்டு சம்மதித்தான். ஆனாலும் அவன், ``எனக்குத் திருமணம் நடத்தி வைக்கவேண்டும். அவளுடன் ஒருநாள் இல்லற வாழ்க்கையை வாழ்ந்த பிறகு பலியாகிறேன்” என்றான். அன்றே, அரவானுக்குப் பெண் தேடத்தொடங்கினார்கள். அரச குலம் முதற்கொண்டு சாதாரண குடிகள் வரைத்தேடினார்கள். 

ஒரு நாள் மட்டுமே வாழப்போகும் மனிதனுக்கு யார்தான் பெண் கொடுப்பார்கள்? யாருமே சம்மதிக்கவில்லை. அதன்பிறகு, கிருஷ்ணரே மோகினி வடிவம் கொண்டு அரவானை மணக்கிறார். அரவான் மோகினியுடன் இரவை மகிழ்ச்சியுடன் கழித்துவிட்டு பலிகளம் புகுந்தான். மோகினி கணவனை இழந்தாள். இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டதே திருநங்கைகளின் திருநாள். திருநங்கைகள் அனைவரும் அரவானைக் கணவனாக எண்ணி, அவனுடன் ஒருநாள் வாழ்ந்து மறுநாள் விதவைக் கோலம் பூணுவதே அங்கு நிகழும் சடங்கின் தாத்பர்யம். 

ஒவ்வொரு திருநங்கையும் கூவாகம், கூத்தாண்டவர் சித்திரைத் திருவிழாவுக்குச் சென்று வழிபடுவதைக் கடமையாகக் கருதுகிறார்கள். முன் இரவு கூத்தாண்டவர் கோயில் பூசாரியின் கைகளால் தாலி கட்டிக்கொண்டு, விடிய விடிய ஆடல் பாடல் என்று மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள். விடிந்ததும் அரவான் சூறைவிடுதலுக்குப் பிறகு தாலி அறுத்து, ஒப்பாரி வைத்து, கதறியழுது, அரவானின் பிரிவு மட்டுமல்லாமல், திருநங்கைகளாகப் பிறந்ததால் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட சோகங்கள் அனைத்தையும் கண்ணீராக வெளிப்படுத்திவிட்டுத் திரும்புவார்கள்.  

கூவாகம் சித்திரைத் திருவிழாவில், திருநங்கைகள் மட்டுமல்லாமல் ஆண், பெண், குழந்தைகள் என்று எல்லாத் தரப்பினரும் பங்குகொள்கிறார்கள். கூவாகத்தைச் சுற்றியிருக்கும் ஏழு கிராம மக்களும் தங்கள் வீடுகளில் கூழ் செய்து வந்து கோயிலில் படையலிட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்கள். 

திருநங்கைகளின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரேஸ் பானு, கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

``இருபது வருடங்களுக்கு முன்புவரை திருநங்கைகள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழல் இருந்தது. ஏனெனில், அவர்கள் அனுபவித்த கொடுமை அப்படிப்பட்டது. சாலைகளில் நடந்து சென்றால் கல்லால் அடிக்கும் கொடுமைகள்கூட நடந்திருக்கின்றன. இது மாதிரியான கொடுமைகளைக் கடந்துதான் திருநங்கைகள் வந்திருக்கிறார்கள். அப்படி வருபவர்களை உலகத்தினர் கவனிக்க வைப்பதற்கான இடமாகத்தான் கூவாகம், கூத்தாண்டவர் கோயில் இருக்கிறது. திருநங்கைகள் வெளியே வந்தால் அவர்களுக்கான அடையாளத்தை இப்போது இந்தச் சமூகம் வழங்கியிருக்கிறது. அந்த மாதிரியான ஓர் இடம்தான் விழுப்புரம் மாவட்டம் கூவாகம், கூத்தாண்டவர் கோயில். 

நேற்று (15.4.19) தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் மிஸ்.கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத, தனது சுய அடையாளத்துடன் வாழ முடியாத திருநங்கைகள்கூடக் கலந்து கொள்ளும் விழா இது. இதைத் தொடர்ந்து இன்று (16.4.19) அரவான் தாலி கட்டும் வைபவம் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் தாலி அறுக்கும் நிகழ்வு.

 `எங்களது படைப்பு இப்படி ஆகிவிட்டதே, எங்களை யாரும் அங்கீகரிக்கவில்லையே’ என்று தனது வாழ்வியல் துயரங்களையும் வலியையும் ஒப்பாரிப் பாடல்களாக வெளிப்படுத்தி கண்ணீர் வடிப்பார்கள் திருநங்கைகள். திருநங்கைகள் மட்டுமல்லாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வேண்டுதலுக்காகக் கோயிலுக்கு வந்து தாலி கட்டிக்கொள்கிறார்கள்.

இந்த வருடம் தேர்தல் நடைபெறுவதால் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்கொண்டிருக்கிறோம். இதனால் இந்த வருடம் கோயில் திருவிழா சற்றே களை இழந்திருக்கிறது. பலரால் வரமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. கோயில் நிர்வாகத்தினர் திருநங்கைகளுக்கான கழிப்பறை வசதிகளை முறையாகச் செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார் கிரேஸ் பானு.

கிருஷ்ணரின் அம்சமாகக் கருதப்படும் திருநங்கைகள் வருடத்துக்கு ஒருமுறை கொண்டாடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டியது கோயில் நிர்வாகம் மற்றும் அரசின் கடமையாகும்.