Published:Updated:

25 ஆண்டுகளாக கள்ளழகருக்கு விசிறும் இளைஞர்!

25 ஆண்டுகளாக கள்ளழகருக்கு விசிறும் இளைஞர்!
25 ஆண்டுகளாக கள்ளழகருக்கு விசிறும் இளைஞர்!

கள்ளழகர் இன்று அழகர் கோயிலிலிருந்து மதுரை நோக்கிப் புறப்பட்டு வருகிறார். வரும் வழியில் அழகருக்கு வியர்க்கக் கூடாதென மூலிகை விசிறி கொண்டு விசிறும் கைங்கர்யம் செய்ய இருக்கிறார் ஆச்சர்ய இளைஞர் சதீஸ்குமார். தனது 6 வயதிலிருந்தே இந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டுவரும் சதீஸ்குமார், கடந்த 25 ஆண்டுகளாக இந்தச் சேவையைச் செய்துவருகிறார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலைபார்க்கும் சதீஸ்குமார், சித்திரைத் திருவிழாவையொட்டி இந்தத் திருப்பணியில் ஈடுபடுகிறார். திருவிழாவுக்குச் சில நாள்களுக்கு முன்பாகவே மயில் தோகைகளை வாங்கிச் சேகரித்து வைத்து திருவிழாவுக்கு நாள் நெருங்கியதும் விசிறி கட்டத் தொடங்குகிறார். மூங்கில்தடி, மரச்சட்டம், துணி, நூல், பசை, சாமிபடம் ஆகிய மூலப் பொருள்கள் கொண்டு விசிறி தயார் செய்கிறார். விசிறியால் விசிறும் போதும் மூலிகைப் பொடிகளின் வாசனை கமகமக்கிறது. அதுகுறித்து அவரிடம் கேட்டபோது...

``தோகைகளை வாங்கி வந்ததுமே தீர்த்தப்பொடி, ஸ்தானப்பொடி என்கிற மூலிகை மருந்துகளை அதுல போட்டு வச்சிருவோம். ரொம்ப நாளைக்கு அப்படியே இருக்கும்" என்கிறார். இந்த மூலிகை, ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரும்" என்கிறார்.
விசிறி வீசுகின்ற இந்தத் திருப்பணியை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வழிவழியாகச் செய்து வருவதாகச் சொல்லிப் பெருமைப்படும் சதீஸ்குமாரிடம் விளையாட்டாக, ``கள்ளழகருக்கு எதுக்கு, விசிறி?" என்று கேட்டோம்.

அதற்குப் பதிலளிக்கும்விதமாக, ``ஒரு தருணத்தில், வெள்ளைக்காரன் அழகர் கோயிலுக்கு வந்து அழகர் சிலையைக் காட்டி, இந்தச் சிலைல சாமி இருக்கிறதை நிரூபிச்சிக் காட்டமுடியுமான்னு கேட்டானாம். உடனே, நம்ம ஆள்கள், பஞ்சுகட்டின துணியை கள்ளழகர்மேல இறுக்கிக் கட்டினாங்களாம். கொஞ்சநேரத்துல துணியைக் கழட்டி பிழிஞ்சப்போ, தண்ணி சொட்டிக்கிட்டே இருந்துச்சாம். அதைப் பார்த்த வெள்ளைக்காரன் அசந்துபோய் தன் தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டானாம். அன்னைல இருந்து அழகருக்கும் வியர்க்கும்னு தெரிஞ்சிகிட்டு, அவர் வெளில வர்றப்போ நாங்க தலைமுறை தலைமுறையா விசிறி வீசிவிடுறோம் " என்று சொல்லி விழி விரிகிறார். 

அடுத்த மூன்று நாள்களும் சதீஸ்குமார் தனது மகனோடும், தம்பியோடும் அழகருக்கு விசிறி வீசிக்கொண்டேயிருப்பார்கள்.