Published:Updated:

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

ஒரு யாழில் நாணை இறுக்கமாகக் கட்டி வேகமாக மீட்டினால் நாண் அறுந்து போய்விடும். நாண் அறுந்துவிடுமே என்று தளர்வாகக் கட்டி மீட்டினால் இசை எழாது. அதே போன்றதுதான் வாழ்க்கையும் என்பதை உணர்த்தியவர் கௌதம புத்தர்...

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

ஒரு யாழில் நாணை இறுக்கமாகக் கட்டி வேகமாக மீட்டினால் நாண் அறுந்து போய்விடும். நாண் அறுந்துவிடுமே என்று தளர்வாகக் கட்டி மீட்டினால் இசை எழாது. அதே போன்றதுதான் வாழ்க்கையும் என்பதை உணர்த்தியவர் கௌதம புத்தர்...

Published:Updated:
`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

கத நாட்டின் தலைநகரான பாடலிபுத்திரத்துக்கு அருகில் காணப்பட்ட அடர்ந்த வனம் அது. அங்கு, திருடன் ஒருவன் வசித்துவந்தான். அந்த வனத்தைக் கடப்பவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டவன் அவன். அதனால், அந்த வனத்துக்குள் நுழையவே மக்கள் அஞ்சி, நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, கையில் திருவோடு, கிழிந்த துணி, மெலிந்த தேகம், ஊன்றி நடக்கச் சிறு கோல் ஆகியவற்றை உடைமைகளாகக் கொண்டு, அந்த வனத்துக்குள் நுழைந்தார் துறவி ஒருவர். 

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

``இந்த வனத்துக்குள் வசிக்கும் திருடன் பொல்லாதவன். ஆயிரம் பேரைக் கொல்வேன் என்று வெஞ்சினம் உரைத்துக் கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறான். 999 பேரைக் கொன்று அவர்களின் கட்டைவிரல்களை அறுத்து மாலையாக அணிந்து தனது 1000 - வது இரைக்காகக் காத்திருக்கிறான். தயவு செய்து அங்குப் போகாதீர்கள்” என்று துறவியிடம் வேண்டினர் மக்கள்.
துறவி, சிறிதுநேரம் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். பிறகு, ``அவன் எனக்காகத்தான் காத்திருக்கிறான். அவன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆயிரமாவது இரை நான்தான்” என்று கூறிவிட்டு, விறுவிறுவென்று வனத்துக்குள் சென்றார்.

யாரும் வரத் தயங்கும் அந்தக் காட்டு வழியில் வரும் மனிதனைக் கண்டதும் மகிழ்வடைந்தான் அந்தத் திருடன். ஆனால் அடுத்த கணம், வந்தவரின் முக தீட்சண்யத்தைக் கண்டதும் சற்று மனம் தடுமாறினான். களங்கமற்ற முழுமதியைப் போன்ற அந்த முகத்தைக் கண்டதும் கல்லிலிருந்து நீர் சுரப்பதுபோல ஈரமற்ற அவன் மனதிலும் இரக்கம் பிறந்தது. அவன் துறவியை நோக்கி,``ஐயா, தங்களைக்கண்டால் சாதுவாகத் தெரிகிறது. உயிர்ப் பிச்சை அளிக்கிறேன். இங்கிருந்து ஓடிவிடுங்கள்” என்றான்.

துறவியோ புன்னகைத்தார். 

``என்னைக் கொல்லும் அளவுக்கு வலிமையிருந்தால் முயற்சி செய்து பார்” என்றார் துறவி. 

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

இரக்கம் என்பதை அறியாத தானே இரக்கம் கொண்டும், இந்தத் துறவி இப்படி அகங்காரம் கொண்டு பேசுகிறாரே என்று வெகுண்டான்.
``என்னால் முடியாதது எதுவும் கிடையாது. உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கோபத்துடன் தனது ஆயுதத்தை உயர்த்தினான் அந்தக் கொடியவன். அப்போது துறவி, எதிரில் இருந்த மரத்தைச் சுட்டிக்காட்டி, ``உன்னால் எதையும் செய்ய முடியுமென்றால், என்னைக் கொல்வதற்கு முன்பு இந்த மரத்தில் இருக்கும் இலைகள் அனைத்தையும் பறி” என்றார்.

அவன் அவர் சொன்னதைச் செய்திருக்கவே வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியும் ஒரு வேலையாள்போல அதைச் செய்தான். அந்த மரத்தில் இருந்த இலைகளை எல்லாம் பறித்துப் போட்டான். செயற்கரிய செயலைச் செய்தது போன்ற பெருமிதத்துடன், `பார்த்தீர்களா, என் பராக்கிரமத்தை' என்பதைப்போலப் பார்த்தான். 

இப்போதும் புன்னகை மாறாத அந்தத் துறவி, ``நீ பறித்த இலைகளை மீண்டும் மரத்திலேயே ஒட்டவை” என்றார்.
அதுவரை அந்தக் கொடியவன் முகத்தில் இருந்த பெருமிதம் ஒரு கணத்தில் அழிந்தது. என்ன பதில் அளிப்பதென்று தெரியாமல் நிலை தடுமாறினான். 

இப்போது துறவி தலைகவிழ்ந்து நிற்கும் அவனைப் பார்த்து, ``உன்னால்தான் முடியாத செயல் என்று எதுவுமே கிடையாதே?” என்று கேட்டார்.

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

கொடியவன் அமைதியாக நின்றான். 

``நீ செய்யும் காரியங்களை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். ஆனால், உயிர்களைக் காத்து அவர்களை நேசிக்க, ஒரு சிலரால் மட்டுமே முடியும். உயிர்களை அழிப்பது அல்ல வீரம்; காப்பதே வீரம்” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

இதைக் கேட்ட அந்தக் கொடியவன், அந்தத் துறவியின் பாதங்களில் சரணடைந்து, அவருக்கு அடியவரானான். அந்தக் கொடியவன் பெயர் அங்குலிமால். அவனை நல்வழிப்படுத்திய துறவி புத்தர்.

***

போதிவனத்தில் அதிகாலைப் பனி விலகியிருக்கவில்லை. புத்தர் கண்களை மூடித் தவம் செய்துகொண்டிருந்தார். அவரது முகத்தில் கருணை நிரம்பி வழிந்தது. அதைப் பார்த்தபடியே அவருக்கு முன் இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவனது பெயர் அபிநந்தன். 

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

புத்தர் விழிகளைத் திறந்ததும் அவர் பாதங்களில் பணிந்து வணங்கிய அபிநந்தன், ``என்னால் இல்லற பாரத்தைச் சுமக்க முடியவில்லை. மிகவும் வறுமையில் உழல்கிறேன். என் மனைவி, நான்கு குழந்தைகள் என்று இதற்கு மேலும் என்னால் வாழ்க்கையைத் துயரத்தில் கழிக்க முடியாது. இந்த உலகத் துயரங்களிலிருந்து எனக்கு விடுதலை அளியுங்கள்” என்றான்.

புத்தர் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். சிறு வயதிலேயே அவன் இல்லறச் சுமையைச் சுமக்க நேர்ந்ததால்தான் இப்படி அல்லலுறுகிறான் என்று புரிந்துகொண்டார். பிறகு, ``குழந்தாய்... மரத்தைப் பார்” என்றார்.

அவனும் மரத்தைப் பார்த்தான். புத்தர், ``மரம் காற்றில் அசைந்துகொண்டிருப்பதைப் பார். மரம் அமைதியாக இருக்க நினைத்தாலும் காற்று விடாது. அது போலத்தான் மனித வாழ்க்கையும். புற உலகப் பற்று மனதின் மீது எப்போதும் மோதிக்கொண்டே இருக்கிறது. இது இயற்கை” என்றார்.

``இனி என்னை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது. உறுதியாக எதிர்த்து நிற்பேன். உலக வாழ்விலிருந்து என்னை விடுவித்து விடுதலை அளியுங்கள்” என்று அவன் விடாப்பிடியாகத் துறவறத்தை வேண்ட, புத்தர் தனது ஆசிரமத்தில் அவனைத் தங்கவைத்தார். சில காலம் அவன் தனித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான். ஒரு நாள் அவனது நாய்க்குட்டி அவனைத் தேடி வந்தது. அதைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். பிறிதொரு நாள், நாயைப் பிரிய முடியாத அபிநந்தனின் குழந்தைகளுள் ஒருவன் தேடி வந்தான். அவனையும் தன்னுடன் தங்கவைத்துக் கொண்டான். குழந்தையைப் பிரிய முடியாத மனைவியும் ஒரு நாள் அங்கு வந்து சேர்ந்தாள். அதற்கடுத்து மற்ற குழந்தைகளும் அவனைத் தேடி வர அனைவரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். 

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

காலம் வேகமாக ஓடியது. போதி வனத்திலேயே தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான் அபிநந்தன். ஒரு நாள் அங்கு வந்த புத்தர், ``குழந்தாய்... இதுதான் வாழ்க்கை. உலகம் பற்றுகளால் நிறைந்தது. உன்னைப் பிரிந்து நாயால் இருக்க முடியவில்லை. நாயைப் பிரிந்து உன் குழந்தைகளால் இருக்க முடியவில்லை. அவர்களைப் பிரிந்து உன் மனைவியால் இருக்கமுடியவில்லை. நீயே வேண்டாம் என்று உதறினாலும் உலகப் பற்றினால்தான் நீ இயங்குகிறாய் என்பதைப் புரிந்துகொள். உன் கிராமத்தில் உன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாத உன்னால், இங்கு மட்டும் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று கேள்வியெழுப்பி அவனது மனதுக்குள் பீடித்திருந்த துயரத்தை விலக்கி அறிவுரை வழங்கிக் குடும்பத்துடன் வாழவைத்தார்.

***

ஒரு யாழில் நாணை இறுக்கமாகக் கட்டி வேகமாக மீட்டினால் நாண் அறுந்து போய்விடும். நாண் அறுந்துவிடுமே என்று தளர்வாகக் கட்டி மீட்டினால் இசை எழாது. அதே போன்றதுதான் வாழ்க்கையும் என்பதை உணர்த்தியவர் கௌதம புத்தர். தன் வாழ்நாளில் கடுமையான நெறிகளைப் போதிக்காமல், அதே நேரம் அதீத சுதந்திரமும் இல்லாமல் நடுநிலையான வாழ்க்கை முறையை மக்களுக்குப் போதித்தார் புத்தர். 

புத்தர் வாழ்ந்த காலத்தில் ஒரு பக்கம், எங்கும் எதிலும் ஆடம்பரச் சடங்கு சம்பிரதாயங்கள் நிறைந்திருக்க, மறுபக்கம் குற்றச் செயல்களும் வறுமையும் நிறைந்திருந்த காலம் அது. மக்களை நல்வழிப்படுத்தவும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எது அவசியமோ அதை உபதேசித்தவர் புத்தர்.

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

மக்களின் துயரத்தைப் போக்குவதற்காகவே அவதரித்த புத்தர் சித்தார்த்தனாக லும்பினியில் அவதரித்தது; கயாவில் போதிமரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றது; பிறகு அதே புத்தகயாவில் பரிநிர்வாணம் அடைந்தது என்று அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நிகழ்ந்தது வைகாசி மாதப் பௌர்ணமியின்போதுதான். அதனால்தான், பௌத்தர்களுக்கு வைகாசி முழுநிலவு மிகவும் சிறப்பு வாய்ந்த தினம். பௌத்த மக்கள் `வைசாகம்' என்றும் `புத்த பூர்ணிமா' என்றும் இந்தப் புனித தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

புத்தர் அவதரித்த, ஞானம் பெற்ற, பரிநிர்வாணம் அடைந்த வைசாகத்தின் போது புத்தரைப் போற்றி அவரது பாதம் பணிவோம்..!  

புத்தம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
தர்மம் சரணம் கச்சாமி..!