Published:Updated:

ரம்ஜான் அன்று `ஃபித்ரா’ தர்மத்தை எந்த அளவீட்டின்படி வழங்கவேண்டும் தெரியுமா?

ரம்ஜான் அன்று `ஃபித்ரா’ தர்மத்தை எந்த அளவீட்டின்படி வழங்கவேண்டும் தெரியுமா?
ரம்ஜான் அன்று `ஃபித்ரா’ தர்மத்தை எந்த அளவீட்டின்படி வழங்கவேண்டும் தெரியுமா?

`ரம்ஜான்’ என்பது பொதுவாகச் சொல்லப்படும் பெயர். இந்தப் பண்டிகையின் சரியான பெயர், ஈகைத் திருநாள், ஈகைப் பெருநாள் அல்லது ஈதுல் ஃபித்ர். 

பண்டிகையின் பெயரே அதன் நோக்கத்தைச் சொல்லிவிடும். ஈகை என்றால் கொடுத்து மகிழ்வது. பிறருக்குக் கொடுத்து மகிழும் இந்த நன்னாளில் சிறப்புத் தொழுகைக்குச் செல்வதற்குமுன் வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் `ஃபித்ரா’ எனும் தர்மத்தைக் கட்டாயம் ஏழைகளுக்குச் செய்யவேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் அறிவுறுத்துகிறது.

ரம்ஜான் அன்று `ஃபித்ரா’ தர்மத்தை எந்த அளவீட்டின்படி வழங்கவேண்டும் தெரியுமா?

ஏன் வழங்க வேண்டும்? 

இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, ரமலான் மாதத்தில் நோன்பிருந்தபோது ஏதேனும் குறைகள், தவறுகள் ஏற்பட்டிருந்தால் அவற்றுக்குப் பரிகாரமாக இந்த தர்மம் அமையும். இரண்டு, ஏழை எளிய மக்கள் யாரும் பண்டிகை நாளன்று பசியோடும் பட்டினியோடும் இருக்கக் கூடாது. அவர்களும் மகிழ்ச்சியில் பங்குகொள்ளவேண்டும், அவர்களும் பண்டிகையைக் கவலையின்றிக் கொண்டாடவேண்டும். 

`யார், ஃபித்ரா எனும் தர்மத்தை வழங்கவில்லையோ அவருடைய நோன்பு வானத்துக்கு உயர்ந்து செல்லாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்' என்கிறார் நபிகள் நாயகம் (ஸல்). 

ரம்ஜான் அன்று `ஃபித்ரா’ தர்மத்தை எந்த அளவீட்டின்படி வழங்கவேண்டும் தெரியுமா?

ஃபித்ரா எனும் தர்மத்தை எந்த அளவு கொடுக்கவேண்டும் என்றால், குடும்பத்தினரின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு தலா இரண்டரை கிலோ அரிசி அல்லது அதற்குரிய விலையைத் தானமாகக் கொடுக்கவேண்டும். அதாவது, குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால், 10 கிலோ அரிசி அல்லது அதற்குரிய விலையை ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டும். நம் குடும்பத்தில் சாப்பிடுவதற்காக எவ்வளவு விலையில் அரிசி வாங்குகிறோமோ அந்த விலையைக் கணக்கில் கொண்டு ஃபித்ரா தர்மமாக வழங்கவேண்டும். நாம் சாப்பிடுவது நல்ல தரமான அரிசியாக இருக்கும்போது, தானமாகக் கொடுப்பது மட்டமான அரிசியாக இருந்தால், அந்த தர்மம் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ஃபித்ரா தர்மத்தை ஒருநாள் முன்பாகவே கொடுத்துவிட அனுமதி உண்டு. நாளைக்கு ரம்ஜான் என்றால் இன்றே அந்த தர்மத்தை வழங்கிவிடலாம். இப்படி ஈந்து உவக்கும் நாளாக இருப்பதால்தான் இந்தப் பண்டிகை `ஈகைத் திருநாள்' என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இது இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாளும் ஆகும்.

ரம்ஜான் அன்று `ஃபித்ரா’ தர்மத்தை எந்த அளவீட்டின்படி வழங்கவேண்டும் தெரியுமா?

ரமலான் மாதத்தில்தான் குர்ஆன் எனும் இறுதிவேதம் அருளப்பட்டது. மனிதகுலத்துக்கு முழுமையான வழிகாட்டியாகத் திகழும் இந்த வேதத்தை அருளியதற்காகவே முஸ்லிம்கள் 30 நாள்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடுகிறார்கள். ரமலான் மாதம் நிறைவுபெற்று அடுத்த ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் அதைப் பண்டிகையாகக் கொண்டாடி இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள்.
இறைவன் திருமறையில் என்ன கூறுகிறான் என்பதைப் பார்ப்போம்.

`நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், இறைவன் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே இந்த வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது' (குர்ஆன் 2:185)

ரம்ஜான் அன்று `ஃபித்ரா’ தர்மத்தை எந்த அளவீட்டின்படி வழங்கவேண்டும் தெரியுமா?

பண்டிகை நாளன்று புத்தாடை அணிவது, ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் கூறி வாழ்த்துகளைத் தெரிவிப்பது, இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வது, நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து பிரியாணி விருந்து அளிப்பது இவற்றுக்கெல்லாம் அனுமதி உண்டு. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் மது அருந்துவது, மது விருந்துக்கு ஏற்பாடு செய்வது, அதில் கலந்துகொள்வது, ஆட்டம் பாட்டம் இரைச்சல்கள், நண்பர்களுடன் சேர்ந்து தலைதெறிக்க பைக் ஓட்டுவது, மக்களுக்கு இடையூறு செய்வது போன்ற எந்தக் காரியத்துக்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை. இவ்வாறு செய்வோமேயானால் ரமலானில் நாம் வைத்த நோன்புக்கும் நிறைவேற்றிய வழிபாடுகளுக்கும் அர்த்தமில்லாமல் போய்விடும். பண்டிகைக் கொண்டாட்டம் என்பது கண்ணியத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும்.
இனிய ஈகைத் திருநாளில், ஏக இறைவனை வணங்கி வாழ்வோம். ஏழைகளுக்கு வழங்கி மகிழ்வோம். அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

- சிராஜுல்ஹஸன்

Vikatan
அடுத்த கட்டுரைக்கு