Published:Updated:

நஞ்சுண்ட மேலவனை வழிபட உகந்த சுக்ரவார பிரதோஷம்!

நஞ்சுண்ட மேலவனை வழிபட உகந்த சுக்ரவார பிரதோஷம்!
நஞ்சுண்ட மேலவனை வழிபட உகந்த சுக்ரவார பிரதோஷம்!

'சிவனை வழிபடுவதே இந்த வாழ்வின் பயன்' என்பர் சிவனடியார். அதுவும் பிரதோஷ நாளில் சிவனை வணங்குவது மிகவும் சிறப்புமிக்கது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்ததை நினைவூட்டும் பிரதோஷ வழிபாடு, நம் வாழ்வோடு நெருங்கி உணரவேண்டிய  ஒரு வழிபாடு. மரணமில்லாப் பெருவாழ்வினை அடைய, அமிர்தம் வேண்டி தேவர்கள் பாற்கடல் கடைந்தனர். மரணமில்லாப் பெருவாழ்வு அருளும் ஈசனை அவர்கள் அறிந்திருந்தும், மார்க்கண்டேயரைப் போல அவரைச் சரணடைந்து மரணத்தை வென்றிருக்கலாம். ஆனால், அவர்கள் அதை விடுத்து வேறு வழி தேடினர். பேராசையின் விளைவாக ஆலகாலம் பிறந்தது. துன்பம் சூழ்ந்தபோது அவர்கள் ஈசனை நாடினர். ஈசன் ஓடிவந்து அவர்களுக்கு உதவினான். 

நஞ்சுண்ட மேலவனை வழிபட உகந்த சுக்ரவார பிரதோஷம்!

பிரதோஷ வழிபாட்டின் சிறப்பே 'துன்பத்திலிருந்து விடுதலையாவதுதான்.' தேவர்களைப் போலவே நாமும் அன்றாடம் ஆசைகளினால் அல்லல்படுகிறோம். துன்பம் ஒரு விஷம்போல நம்மைச் சூழ்ந்து பயமுறுத்துகிறது. அதிலிருந்து நாம் வெளியேற நமக்குக் கிடைத்திருக்கும் அருமருந்தே பிரதோஷ வழிபாடு.

ஈசன் தயாபரன். அவர் குறித்து திருமூலர், 'மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்' என்பார். தேவர்களுக்காக நஞ்சை உண்ட தேவன் சிறிது நேரம் மயங்கியிருந்தார். உண்ட விஷம் வயிற்றுக்குள் செல்லாதவாறு அன்னை உமையவள் கழுத்தோடு நிறுத்தி, அவரை நீலகண்டர் ஆக்கினாள். இந்தப் பிரபஞ்சத்து உயிர்கள் எல்லாம் ஆலகாலத்திலிருந்து தப்பின. தேவர்கள் மயக்கமுற்ற ஈசனைக் கண்டு வருந்தினர். அவர் மீண்டும் மயக்கம் தெளிந்து எழவேண்டும் என்று உண்ணா நோன்பிருந்தனர். அன்று ஏகாதசி திதியாக இருந்ததால் அவர்களின் விரதம் பலித்தது. மறுநாள் துவாதசி அன்று அவர்கள் பாரணை செய்து விரதம் முடித்தனர். மறுநாள் திரயோதசி. ஈசன் தன் யோக நித்திரை போன்ற மயக்கத்தில் இருந்து மீண்டார். பாற்கடலை மீண்டும் கடைய உத்தரவிட்டார். அஷ்ட ஐஸ்வர்யங்களும் வந்தது. ஈசன் மனம் மகிழ்ந்து, அந்த நாளின் மாலையில் ஆனந்தக் கூத்தாடினார். அதுகண்டு தேவர்கள் அனைவரும் அவரைத் துதித்தனர். அந்த வேளையே பிரதோஷமாக போற்றப்பட்டது.    

நஞ்சுண்ட மேலவனை வழிபட உகந்த சுக்ரவார பிரதோஷம்!

நம்பியவருக்கு ஈசன் அருளும் வேளை பிரதோஷ வேளை. தோஷங்கள் யாவும் அண்டும் வேளையில், நாம் ஈசனின் சந்நிதியில் இருக்க வேண்டும் என்பதே இந்த வழிபாட்டின் நோக்கம். ஒரு மாதத்தில் வரும் இரு பிரதோஷ தினங்களிலும், சிவ ஆலயங்களுக்குச் சென்று நந்தி தேவரை முதலில் வழிபட்டு, பின் 'சோம சூக்த பிரதக்ஷணம்' செய்து, பின் நந்தியின் கொம்புகளின் வழி ஈசனை வழிபட வேண்டும். நந்தி, தர்மத்தின் வடிவம். அதனால்தான் ஈசனை வழிபடும்போது தர்மத்தின் பின் நின்றே பேசவேண்டும் என்பது அதன் தத்துவம். 

ஈசனையும் நந்தியையும் அர்ச்சிக்க உகந்தவை வில்வ இலைகள். அந்த வில்வ இலைகளைக் கொண்டு பிரதோஷ நாளில் வழிபட வேண்டும். 'த்ரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்' என்கிறது வில்வாஸ்டகம். அதாவது 'மூன்று ஜன்மங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஒரு வில்வ இலையை பக்தியோடு பரமனுக்குப் படைப்பதன் மூலமே தீர்ந்துவிடும்' என்பது இதன் பொருள். 'ஈசன், வில்வ இலைகளையும் வில்வக் காடுகளையும் விரும்புகிறவன்' என்று புராணங்கள் கூறுகின்றன. 

நஞ்சுண்ட மேலவனை வழிபட உகந்த சுக்ரவார பிரதோஷம்!

வில்வம் அன்னை மகாலட்சுமியின் அம்சம். பாற்கடலில் அன்னை மகாலட்சுமி அவதரித்தபோது, அவரின் திருக்கரங்களில் வில்வ இலை இருந்தது என்று வராக புராணம் சொல்கிறது. வில்வ இலைகள், 'இச்சா சக்தி', 'கிரியா சக்தி', 'ஞான சக்தி' ஆகியவற்றைத் தன்னுள்ளே கொண்டவை. சௌபாக்கிய சஞ்சீவினி என்னும் நூலும், காளிகா புராணமும் மகாலட்சுமித் தாயார் வில்வக் காட்டில் தவம் செய்பவள் என்று சொல்கின்றன. எனவே வில்வத்தில் அன்னை மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்றே நம்பப்படுகிறது. திருவந்திபுரத்திலும், சென்னை ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலும் தாயாருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இத்தகைய மகிமை நிறைந்த வில்வ இலை கொண்டு ஈசனை பிரதோஷ தினத்தில் வழிபடுவது மிகவும் பலன் தரும்.

பிரதோஷம் வரும்  மாதம், கிழமை ஆகியனவற்றைக்கொண்டு அதை வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் ஒரு தனிச் சிறப்பும் பலனும் கூறப்படுகிறது.  இன்று நிகழும் பிரதோஷம், 'சுக்ர வார பிரதோஷம்' என்று போற்றப்படுகிறது. சுக்ரன் என்றால் வெள்ளி. வெள்ளிக்குரிய இந்த நாளில் வரும் பிரதோஷம் ஆதலால் சுக்ரவாரப் பிரதோஷம் எனப்படுகிறது.

நஞ்சுண்ட மேலவனை வழிபட உகந்த சுக்ரவார பிரதோஷம்!

 வெள்ளிக்கிழமைகள், அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாள். பிரதோஷ காலத்தில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி மற்றும் சிவனுக்கு நிகழும் அபிஷேகங்களைக் கண்டு வழிபடுவது சிறப்பாகும். இன்று ஈசனுக்கு, மகாலட்சுமியின் அம்சமான வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்ய, கடன் தொல்லைகள் நீங்கும். செல்வ வளம் சேரும் என்று நம்பப்படுகிறது. இன்று ஈசனுக்கு பால் சாதம், சர்க்கரைப் பொங்கல்  போன்ற நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்க, சகல பாவங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.  

Vikatan
அடுத்த கட்டுரைக்கு