Published:Updated:

நோய்களைத் தீர்க்கும் யோகினி ஏகாதசி விரதம் - ஒரு வழிகாட்டுதல்!

நோய்களைத் தீர்க்கும் யோகினி ஏகாதசி விரதம் - ஒரு வழிகாட்டுதல்!
நோய்களைத் தீர்க்கும் யோகினி ஏகாதசி விரதம் - ஒரு வழிகாட்டுதல்!

றியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞ்ஞானமாய் மிளிர்கின்ற பரம்பொருளின் பேரருளை அடைவதற்குத் துணை நிற்பவையே இறை வழிபாடுகள். யாகம் வளர்த்தல், பூஜை செய்தல், அபிஷேகம் செய்தல், நைவேத்யம் படைத்தல், கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்ளுதல் என்று பல்வேறு இறைவழிபாட்டுச் சடங்குகள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானது உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபடுவதேயாகும். உயிரை இயக்கும் உணவைத் துறந்து கடைப்பிடிக்கும் விரதத்துக்கு எப்போதுமே அதியற்புதப் பலன்கள் உண்டு. அதனால்தான் மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் இத்தகைய விரதங்களை அனுஷ்டித்து இறைவனை வழிபாடு செய்கிறார்கள். மக்கள் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு விரதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருந்தாலும் அவற்றில் முக்கியமானது 'ஏகாதசி விரதம்'. திருமாலின் அருளைப் பெறுவதற்கு எளிய வழி ஏகாதசி விரதமிருத்தல். ஆனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'யோகினி ஏகாதசி' என்று பெயர். இந்த விரதமானது உடல் நோயைத் தீர்க்கும் மகத்துவம் நிறைந்தது என்கிறது ‘ஏகாதசி மகாத்மியம்’ என்னும் நூல். 

அக நோய் மட்டுமல்லாமல் உடல் நோயையும் போக்கும் யோகினி ஏகாதசியின் பெருமையை விளக்கப் பின்வரும் புராண சம்பவம் ஒன்று கூறப்படுகிறது... 

நோய்களைத் தீர்க்கும் யோகினி ஏகாதசி விரதம் - ஒரு வழிகாட்டுதல்!

அழகாபுரியின் மன்னன் குபேரன். இவன் தேவர்களின் கருவூலத்தைக் காப்பவன். தீவிர சிவபக்தன். நாள்தோறும் தவறாமல் சிவபூஜை செய்பவன். குபேரனின் பணியாளனின் பெயர் ஹேமமாலி. குபேரன் தினந்தோறும் செய்யும் சிவ பூஜைக்கான மலர்களை மானசரோவர் ஏரிக்குச் சென்று பறித்து வந்து கொடுக்கும் பணியைச் செய்து வந்தான். 

ஒருநாள் வழக்கம்போல குபேரனிடம், `மலர் பறித்துவருகிறேன்' என்று சொல்லிவிட்டு அழகாபுரியிலிருந்து புறப்பட்டான் ஹேமமாலி. ஆனால், அவன் உரிய நேரத்துக்குத் திரும்பவில்லை. குபேரனும் மலர்களுக்காக நெடுநேரம் காத்திருந்தான். மலர் இல்லாததால் குபேரனால் அன்றைய தினத்தில் சிவபூஜை செய்யமுடியவில்லை.

நோய்களைத் தீர்க்கும் யோகினி ஏகாதசி விரதம் - ஒரு வழிகாட்டுதல்!

சிவ பூஜை தடைப்பட்டுவிட்டதால் கடுங்கோபம் கொண்ட குபேரன், காவலனை அனுப்பி ஹேமமாலியைத் தேடச் சொல்லிக் கட்டளையிட்டான். ஹேமமாலியைத் தேடிச்சென்ற காவலன் திரும்பி வந்து, ``சிவபூஜை செய்வதற்கு மலர்கள் பறித்துக்கொண்டுவருவதை மறந்து, ஹேமமாலி, அவன் மனைவியுடன் மகிழ்ந்திருக்கிறான். அவன் இப்போது திரும்பி வருபவனைப் போன்று தெரியவில்லை” என்று தெரிவித்தான்.

குபேரன் கடும் கோபங்கொண்டு, ``சிவபூஜை தடைப்படக் காரணமாக இருந்த ஹேமமாலியைத் தொழுநோய் தாக்கட்டும். அதனால், அவன் மனைவியை விட்டுப் பிரிவானாக...” என்று சாபமிட்டார். 

குபேரன் சாபமிட்ட அடுத்த கணம், தொழுநோயால் பீடிக்கப்பட்டான் ஹேமமாலி. உடனே அவன் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து காடுகளில் சுற்றித்திரியத் தொடங்கினான். அன்றாட உணவுக்கும் நீருக்குமே அவன் காடுகளில் அவதிப்பட்டான். நோய் மற்றவருக்கும் பரவிவிடும் என்று பயந்து அவனை யாரும் நெருங்கவில்லை. 

நோய்களைத் தீர்க்கும் யோகினி ஏகாதசி விரதம் - ஒரு வழிகாட்டுதல்!

அவன் துயரம் நீண்டுகொண்டேயிருந்தது. இந்தச் சூழலில்தான் ஒருநாள் வனத்தில் அவன் மார்க்கண்டேய முனிவரைக் கண்டான். 
தனது நோய் காரணமாகத் தொலைவிலிருந்தே அவரை வணங்கினான். அனைத்து உயிர்களிடமும் மாறாத அன்பு செலுத்தும் மார்க்கண்டேய முனிவர் அவன் நிலையைக் கண்டு வருந்தினார். ``நீ யார்? உனக்கு எவ்வாறு இது நிகழ்ந்தது?" என்று கேட்டார். 
அதற்கு ஹேமமாலி, எதையும் மறைக்காமல் நடந்ததைக் கூறினான். அதைக் கேட்ட மார்க்கண்டேய முனிவர், ``உன் மனைவியின்மீது கொண்ட அன்பு தவறில்லை. ஆனால், உன் கடமை தவறியதால்தான் நீ இப்படித் துயரத்தை அனுபவிக்கிறாய். நோய்களால் ஏற்படும் துன்பங்களைப் போக்கும் விரதம் ஒன்று உண்டு. அதை நான் உனக்கு உபதேசிக்கிறேன்" என்றார்.

உடனே ஹேமமாலியும் , "என் மீது கருணை கொண்டு நீங்கள் உபதேசிக்கும் விரதத்தை நிச்சயம் பின்பற்றுவேன்" என்று சொன்னான். முனிவரும் ஹேமமாலிக்கு ' யோகினி ஏகாதசி ' விரதத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி அதைக் கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார். 
முனிவரின் வாக்கைத் தெய்வவாக்காக நம்பிய ஹேமமாலி, யோகினி ஏகாதசி நாளில் விரதமிருந்து தன் நோய் நீங்கப் பெற்றான். தன் அழகிய தோற்றத்தையும் திரும்பப் பெற்றான். மீண்டும் அழகாபுரிக்குச் சென்று தன் மனைவியுடன் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தான். 

நோய்களைத் தீர்க்கும் யோகினி ஏகாதசி விரதம் - ஒரு வழிகாட்டுதல்!

நம்பிக்கையுடன் விரதமிருந்து, திருமாலை வழிபட்டால் பாவச் சுமைகளிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், நோய்களிலிருந்தும் விடுபடலாம் என்பதையே ஹேமமாலியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. 

யோகினி ஏகாதசி அன்று நாள் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி மகாவிஷ்ணுவை வழிபட அனைத்து நற்பலன்களையும் அடைவதோடு தீராத நோய்களிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்புகளையுடைய யோகினி ஏகாதசி நாளை (28.6.19) வருகிறது. பக்தர்கள் தவறாமல் இந்த விரதத்தைக் கடைப்பிடித்துப் பயன்பெறலாம்.

Vikatan