விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

நல்ல வழி காட்டும் வழிகாட்டி விநாயகர்!

தொந்தி கணபதி துணை வருவார்!

நல்ல வழி காட்டும் வழிகாட்டி விநாயகர்!
##~##
'தி
க்கு திசை தெரியாம தவிக்கிற மக்களுக்கு வழிகாட்டியா இருந்து பக்கத் துணையாவும் வந்து அருள் புரிபவர் ஸ்ரீவழிகாட்டி விநாயகர்’ என்று சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில், நேருஜி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீவழிகாட்டி விநாயகர் திருக்கோயில். ஒற்றைக் கொம்பும் ஆனைமுகமும் பெருவயிறும் குறும்புப் பார்வையும் கொண்டு காட்சி தரும் இந்தப் பிள்ளையாரைக் காணக் கண் கோடி வேண்டும் என்கின்றனர்.

'கல்யாண வயது வந்துவிட்டது; ஆனால், வரன் தகையவில்லை’ என வருந்துவோரும், 'கல்யாணமாகிப் பல வருடங்களாகிவிட்டன. இன்னும் ஒரு குழந்தை வரம் கிடைக்கவில்லையே!’ எனக் கலங்குவோரும் இங்கு வந்து ஸ்ரீவழிகாட்டி விநாயகரைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் போதும்... விரைவில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்!

'நல்ல படிப்பு படித்து என்ன பயன்? கைநிறையச் சம்பளம் கிடைக்கும்படியாக ஒரு நல்ல வேலை அமையவில்லையே!’ எனக் கண்ணீர் விடும் இளைஞர்கள், சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிகாட்டி விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால்... விரைவில் நல்ல உத்தியோகம் வீடு தேடி வரும் என்று பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். அதேபோன்று, தொழிலில் தொடர்ந்து நஷ்டம் என்று புலம்பும் அன்பர்கள், சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிகாட்டி விநாயகருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபட்டால்... வியாபாரம் செழிக்குமாம்.

நல்ல வழி காட்டும் வழிகாட்டி விநாயகர்!

ஒருகாலத்தில், இங்கே அரச மரம் மட்டும் இருந்ததாம். அந்த மரத்தடியில் முனிசிபல் சாமியார் என்பவர் நெடுங்காலமாக இருந்து வந்தார். அந்த வழியே செல்லும் அன்பர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, அவர்கள் தரும் உணவைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தார். இவர் முக்தி அடைந்த பிறகு, இந்த மரத்தடியில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் அந்தப் பகுதி மக்கள். அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் முனிசிபல் சாமியாரின் சமாதி அமைந்துள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கிச் செல்லும் அன்பர்கள் மற்றும் இந்த வழியே செல்லும் வெளியூர்க்காரர்கள் வழிகாட்டி விநாயகரை வணங்காமல் அந்தப் பகுதியைக் கடப்பதில்லை. வாகனத்தை நிறுத்தி, விநாயகரை வணங்கிச் சென்றால், வழியில் விபத்து ஏதும் நேராமல் நம்மைக் காத்தருள்வார் என்பது வாகன ஓட்டிகளின் நம்பிக்கை!

ஆலயத்தில், ஸ்ரீசந்தானகோபால கிருஷ்ணர், ஸ்ரீபால சுப்ரமணியர், ஸ்ரீவீர ஆஞ்சநேயர், ஸ்ரீவிஷ்ணு துர்கை ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

விழா நாட்களில் விநாயகப்பெருமானுக்கு நடைபெறும் 108 சங்காபிஷேகம் இங்கு விசேஷம். நவராத்திரி நாட்களில், ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்திரைப் பிறப்பு நாளில், வழிகாட்டி விநாயகருக்கு காலையில் துவங்கி மாலை வரை... அபிஷேகம் நடந்தவண்ணம் இருக்குமாம்.

எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும், ஸ்ரீவழிகாட்டி விநாயகரை வழிபட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். வழிகாட்டி விநாயகரை வணங்குங்கள்; உங்களுக்கும் நல்ல வழி காட்டுவார், ஆனைமுகத்தான்!

- க.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்