
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கும்பகோணம், பாலக்கரை காமராஜர் நகரில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வேதபாடசாலை துவங்கப்பட்டதாம். அப்போது பாடசாலை மாணவர்களின் வழிபாட்டுக்காக, ஒரேயரு விநாயகர் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.
விநாயகரை தினமும் அபிஷேகிப்பதற்கு தண்ணீர் வேண்டுமே என்பதால், கோயிலுக்கு அருகில் கிணறு வெட்டினார்களாம். அப்போது, தோண்டிய இடத்தில் இருந்து அழகே உருவெனக் கொண்டு, காட்சி அளித்தார் ஒரு விநாயகர். அந்த விக்கிரகத்தையும் மூலவருக்கு அருகில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்களாம்.

'பதமலரைப் பணிவோரின் பலவினைகள் பறந்துவிடும்; சதமெனவே சரணடைந்தால் சஞ்சலமும் மறைந்துவிடும்: ஈரெட்டுச் செல்வமும் இன்பமும் தந்தருளும் ஈடில்லா இரட்டை விநாயகன் இட அடிகளே...’ எனும் துதியைப் பாடி இரட்டை விநாயகரை வணங்கினால், 16 வகையான ஷோடஸப் பலன்கள் மற்றும் ஷோடஸ கணபதியை வழிபட்டால் கிடைக்கக் கூடிய பலன்களும் கிடைக்கப்பெற்று, நிம்மதி பொங்க வாழலாம் என்பது ஐதீகம்! கோயிலில், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஜெயதுர்கை, ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
தொடர்ந்து, ஆறு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் இங்கு வந்து இரட்டை விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும்; நோய் நொடியின்றி வாழலாம்; வியாபாரம் செழிக்கும்; இல்லறம் சிறக்கும்; கல்யாண வரம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்!
விநாயக சதுர்த்தியன்று, லட்சுமி சம்பூஜித மகா குபேர கணபதி யாகம் சிறப்புற நடை பெறும். இதில் கலந்து கொண்டு வழிபட, சகல செல்வங்களும் ஸித்திக்கும்.
- ந.வசந்தகுமார்
படங்கள்: இ.ராஜவிபீஷிகா