Published:Updated:

''தும்பிக்'கை’யான் தந்த நம்பிக்'கை’!''

என் கடன் இறைப்பணி... இ.லோகேஸ்வரி

''தும்பிக்'கை’யான் தந்த நம்பிக்'கை’!''

என் கடன் இறைப்பணி... இ.லோகேஸ்வரி

Published:Updated:

தோ விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டது. அதையொட்டி ஒய்யாரமாக ஊர்வலம் வர, அழகுப் பிள்ளையார் சிலைகளும் ஊருக்கு ஊர் விதவிதமாய் தயாராகிவருகின்றன. எனினும், மானாமதுரை பிள்ளையார் சிலைகளுக்கு மவுசு அதிகம். காரணம், அந்தப் பகுதியில் கிடைக்கும் களி மண்ணின் தன்மை அப்படி என்கிறார்கள். இங்கு தயாராகும் பிள்ளையார் சிலைகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மானாமதுரை பிள்ளையாரைப் போலவே, மானாமதுரையில் பிள்ளையார் சிலைகளைச் செய்வதையே தன் இறைப்பணியாகக் கொண்டிருக்கும் பாண்டிராஜனும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார்.

யார் இந்தப் பாண்டிராஜன்? அவர் அப்படி என்னதான் செய்கிறார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மானாமதுரையில் தலைமுறை தலைமுறையாக களிமண்ணால் சிலைகள் செய்து வரும் குடும்பத்தில் வந்தவர்தான் பாண்டிராஜன். அதனால் சிலைகள் செய்யும் திறமை அவருக்கு இயல்பிலேயே இருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான்.

''தும்பிக்'கை’யான் தந்த நம்பிக்'கை’!''

ஆனால், பாண்டிராஜ் ஒரு மாற்றுத் திறனாளி! ஆம்... பிறவியிலேயே ஒரு கை மட்டும்தான் அவருக்கு! 'பிறகெப்படி கலைநுணுக்கத்துடன் அவரால் பிள்ளையார் சிலைகளைச் செய்யமுடிகிறது?’ என்று கேட்டால், ''எல்லாம் தும்பிக்கையான் தந்த நம்பிக்கைதான் காரணம்!'' என்று கூறிப் புன்னகைக்கிறார். இதோ... தமது 12 வயதில் துவங்கிய இந்தப் பணி குறித்து, அவரே விவரிக்கிறார்.

''எங்க குடும்பத்துல நான்தான் கடைசி பையன். எங்க அப்பா தட்சிணா மூர்த்தியும் என்னோட அண்ணன்களும் இதே தொழிலைத்தான் செஞ்சுக்கிட்டு வர்றாங்க. ஆனா, ஆரம்பத்துல என்னாலதான் சிலை செய்ய முடியலை. அவங்க சிலை செய்யறதை பார்த்துக்கிட்டே இருப்பேன். மற்ற நேரங்கள்ல மண் எடுக்கறது, காயவைக்கறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா நானும் சிலை செய்ய முயற்சி பண்ணினேன். சிலை செய்யறதைப் பார்க்கறதுக்கு சுலபமா தெரிஞ்சாலும், அதைச் செய்யும்போதுதான் அதுல இருக்கிற கஷ்டங்கள் எனக்குத் தெரிய வந்துச்சு. அதுலயும் ஒரு கையால சிலை செய்யறதுக்கு ரொம்பவே சிரமப்பட்டேன்.

ஒருகட்டத்துல, திகைச்சு நின்னுட்டேன். வாழ்க்கையை  நெனச்சு ரொம்ப பயந்தேன். அப்ப, எங்க வீட்ல எல்லாரும் எனக்கு ஆதரவாவும் உதவியாவும் இருந்தாங்க. என்னை உற்சாகப்படுத்தினாங்க. நான் செய்யப்போறது விநாயகர் சிலைங்கறதால அவரை வணங்கிட்டு, அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு விநாயகர் சிலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். இதோ... 12 வருஷம் ஓடிப்போயிடிச்சு. எல்லாத்துக்கும் காரணம் பிள்ளையாரோட திருவருள்தான்!

இடது கை இல்லையேன்னு என்னிக்கும் வருத்தப்பட்டது இல்லை. ஆனா, சில நேரம் களி மண்ணை எடுத்துப் பிள்ளையார் செய்யும்போது எரிச்சல் ஏற்படும். காரணமே தெரியாது. அப்பெல்லாம் 'நாம் செய்யும் சிலையைப் பல பேர் பூஜை அறையில் வச்சு வணங்குவாங்களே! நல்லபடியா செய்து தரணுமே’ன்னு நெனைச்சுப்பேன் எரிச்சல், கஷ்டம் எல்லாம் மறைஞ்சுடும்.  ஆரம்பத்துல, பிள்ளையாரைப் பத்தி எனக்குப் பெரிசா ஒண்ணும் தெரியாது. ஆனா, பிள்ளையார் சிலையைச் செய்ய ஆரம்பிச்ச பிறகு, விநாயகரைப் பத்திப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்கிற பாண்டிராஜன் அந்த விஷயங்களை நம்மோடும் பகிர்ந்துகொண்டார்.

''தும்பிக்'கை’யான் தந்த நம்பிக்'கை’!''

''விநாயகர் சதுர்த்திக்குக் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வழிபடறதுதான் விசேஷம்! விநாயகர் பஞ்சபூதத்துக்கும் அதிபதிங்கறதால அவருடைய சிலையைக் களிமண்ணால செஞ்சு வணங்கி வழிபட்டுட்டு, குளத்துல, கிணத்துல, கடல்லன்னு நீர்நிலைகள்ல கரைச்சிடறதுதான் முறை.

மானாமதுரையில செய்யற விநாயகர் சிலைங்களுக்கு தனி விசேஷம் இருக்கு. காரணம், மானாமதுரையில் மண் வளம் நல்லா இருக்கறதோடு, இரும்புச் சத்தும் இருக்கிறதால மண்ணுக்குப் பிடிப்புத் தன்மை அதிகமா இருக்கும். அதனால சிலை செய்யறதுக்கும் சுலபமா இருக்கும். இங்க செய்யற சிலைங்க எல்லாம் 'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ போன்ற கெமிக்கல் எதுவும் கலக்காம இயற்கையான முறையில்தான் செய்யறோம்'' என்றவர் தொடர்ந்து, தன்னுடைய சிலை தயாரிப்புப் பணி பற்றியும் விளக்கினார்.

''ஒரு நல்ல நாளில், விநாயகருக்கு பூஜைகள் செய்த பின்னர்தான், சிலைகள் செய்ய ஆரம்பிப்பேன். ஆறு அடி உள்ள  சிலையைச் செய்ய, குறைஞ்சது 15 நாள் ஆகும். முதல்ல சுத்தமான களி மண்ணை எடுத்துட்டு வருவோம்.அதை சிலை செய்யறதுக்கு வசதியா பல நிலைகள்ல பக்குவப்படுத்துவோம். அப்பத்தான் அந்த மண், சிலை செய்யறத்துக்கு ஏதுவா இருக்கும். விநாயகர் சதுர்த்திக்கு 50 நாளுக்கு முன்னாடியே சிலை செய்ய ஆரம்பிச்சுடுவோம். சிலை செய்யறதுல பல நுணுக்கமான விஷயங்கள் உண்டு. அதை யெல்லாம் சரியா, கவனமா பார்த்துச் செய்யணும்னா ரெண்டு கைகளும் நல்லா

''தும்பிக்'கை’யான் தந்த நம்பிக்'கை’!''

இருந்தாத்தான் முடியும். அப்பெல்லாம் ஒரு கையையும், மற்றொரு முட்டியையும் வைத்துதான் செய்வேன். மத்தவங்க ஒரு நாள்ல முடிக்கிற வேலையை முடிக்க எனக்கு ரெண்டு நாள் ஆகும். அதனால காலைல நாலு மணிக்கே சிலை செய்ய வந்துடுவேன். வந்ததில் இருந்து சிலை தவிர வேற நெனைப்பே இருக்காது. முழுசா முடிச்சுட்டுத்தான் கிளம்பணும்கற நெனைப்பிலேயே இருப்பேன். எப்படியும்  வீடு திரும்ப இரவு 10 மணி ஆயிடும். ஆனா, எப்பவும் சோர்ந்து போனதில்லை. சிலையைச் செஞ்சதும் காய வச்சு, மட்டிவெள்ளை சுண்ணாம்பு அடிப்போம். அப்புறமாத்தான் ஓலைச்சாயம் கொண்டு வண்ணம் பூசுவோம்'' என்று தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட பாண்டிராஜன் இதுவரை பல ஆயிரம் சிலைகளைச் செய்திருக்கிறாராம். எனினும், ஒரு டன் எடையில் 9 அடி உயரத்துக்கு ஒரு பிள்ளையார் சிலையை தனியொரு ஆளாகச் செய்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பல்வேறு தோற்றங்களில் விநாயகர் சிலைகள் இருந்தாலும், பெரும்பாலும் பாண்டிராஜன் செய்வது அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் சிலைகளைத்தான்.

விநாயகர் சிலைகள் மட்டுமின்றி, கார்த்திகை தீபத்துக்கான அகல் விளக்குகள், மண் சிலைகள், கோயில்களுக்குக் குதிரை சிலைகள் எனத் தன் பணிகளையே ஆன்மிகம் சார்ந்ததாக அமைத்துக் கொண்டிருக்கும் பாண்டிராஜனின் மனமெல்லாம் அந்த விநாயகப் பெருமானே வியாபித்து இருக்கிறார்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், சிலை செய்கிறபோது தன்னையே மறந்து இறைவனுக்குத் தொண்டு செய்கிறோம் என்கிற ஒரே நினைப்போடு ஆத்மார்த்தமாகச் செய்யும் பாண்டிராஜனின் இறைப்பணி பாராட்டுதலுக்கு உரியது என்பதில் சந்தேகம் என்ன?!

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism