நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த மூன்றுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழ்பவர் கணபதி. ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன.

ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் அன்பர்கள் வழிபடுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
* தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியில் மலையின் உச்சியில் ஸ்ரீஉச்சிப்பிள்ளையாராக அவர் கோயில் கொண்டுள்ளார்.
* கும்பகோணத்திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை அமைப்பு ஒன்றை உண்டாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இவரும் உச்சிப்பிள்ளையார் எனப் போற்றப்படுகிறார்.
* சிதம்பரம் திருத்தலத்தில் உள்ள திருமுறை காட்டிய விநாயகரும் உயரமான இடத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் ஆவார்.
* திருநல்லூர் என்னும் தலத்தில் கட்டுமலை மீது, மலைப் பிள்ளையார் எனும் பெயரில் அவர் அருள்பாலிக்கிறார்.
* சில தலங்களில், மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருப்பவராகவும் விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த நிலையில், பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரைத் தரிசிக்க வேண்டும். இவரை ஆழத்துப் பிள்ளையார், பாதாள பிள்ளையார் என்ற பெயர்களில் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
காளஹஸ்தி சிவாலயத்திலும், விருத்தாசலம் திருக்கோயிலிலும் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன. விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஆழத்துப் பிள்ளையார் ஆலயம் பெரியதாகவும் புராதனச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது.
- பூசை. அருண வசந்தன்