வேதாரண்யம் திருத்தலத்தின் சிவாலயத்தில் அருளும் சரஸ்வதி வீணை இல்லாமல் காட்சித் தருகிறாள். இந்த தேவியை, 'ஆதி சரஸ்வதி’ எனப் போற்றுகின்றன சிற்ப நூல்கள்.

திருவீழிமிழலை திருத்தலத்தில் சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி ஆகிய மூன்று தேவியரும் தனித்தனியே சிவலிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்தனர். இவர்கள் வழிபட்ட லிங்கத் திருமேனிகள் முறையே சரஸ்வதீஸ்வரர், காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் என வழங்கப்படுகின்றன.

கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் அணுக்கன் வாயிலின் இருபுறமும் திருமகளையும் கலைமகளையும் தரிசிக்கலாம். இந்த கலைமகளை, 'ஞான சரஸ்வதி’ என்று அழைக்கின்றனர்.

குமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் தனிக் கோயிலில் அருள் புரியும் சரஸ்வதிதேவியை கவிச் சக்ரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு.

கலைமகள் தரிசனம்!

பண்டைய காலத்தில் அரசர்களும் புலவர்களும் மொழிவிவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் கொடியும் இணைக்கப்பட்டிருக்குமாம். இதை சாரதா த்வஜம் என்பர். இதில் சரஸ்வதிதேவியின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைக் கோட்டத்தில்... மேலிரு கரங்களில் அட்சமாலை சுவடியும், கீழிரு கரங்களில் அபய, ஊரு முத்திரைகளுமாக நான்கு திருக்கரங்களுடன் காட்சித் தருகிறாள் சரஸ்வதிதேவி.

திருக்கண்டியூர் சிவாலயத்தில் பிரம்மாவுடன் அருளும் கலைவாணியைத் தரிசிக்கலாம்.

காஞ்சி கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சரஸ்வதிக்குத் தனிச் சந்நிதி உண்டு. இவளை லலிதா திரிபுர சுந்தரியின் படைத் தலைவிகளில் ஒருவளான சியாமளா தேவி சொரூபமாக வணங்குகிறார்கள்.

திருமயிலை கபாலீச்சரம், அம்பிகை மயிலாக வந்து இறைவனை வழிபட்ட தலம் என்பது தெரியும். இதே தலத்தில் சரஸ்வதிதேவியும் இந்திராணியும் சிவவழிபாடு செய்துள்ளார்கள். அவர்கள் வழிபட்ட லிங்கத்திருமேனி அருளும் கோயில் காரணீசுவரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு