Published:Updated:

80'ஸ் கிட்ஸ் பொங்கல் எப்படியிருந்தது? பொங்கல் நினைவுகள்!

பொங்கல் பானை
பொங்கல் பானை

``பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்புறதெல்லாம் பொங்கலுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னயே தொடங்கிடும்.’’

பொங்கல் வந்துச்சுன்னா, பொங்கல் சமைப்பதும், டிவியில் ஜல்லிக்கட்டு, புதுப்படம் பார்ப்பது மட்டுமே தற்போது அடையாளமாக உள்ளது. அதுவும் இப்பயெல்லாம் யாரும் மண் பானையில பொங்கல் வைக்கிறதில்லை... சில்வர் பானையில பொங்கல் வெச்சுட்டு கொண்டாடுறாங்க.

கோலங்கள்
கோலங்கள்

வண்ணக்கோலம் இல்லாமல் பொங்கலா? மார்கழி மாசம் முழுக்கவே பக்கத்து வீடுகளோட கோலப்போட்டி தினமும் நடக்கும். 20 வருஷத்துக்கு முன்பெல்லாம் எல்லாக் கோலத்துலயும் நடுவுல சாணி வச்சு, பூசணிப்பூ நட்டு இருக்கும். இப்பயெல்லாம் சாணியே கிடைக்கிறது இல்ல, இதுல பூசணிப்பூவுக்கு எங்க போறது!

மார்கழி மாசம் முழுக்க ஒருவித போட்டி மனப்பான்மையா கோலம் போட்டு வந்தவங்க, பொங்கல் அன்னிக்கு ஃபைனல்ஸ்ல மீட் பண்ற தீவிரத்தோட இருப்பாங்க! "வாசல்ல கோலம் போடச் சொன்னால், வீதி முழுக்க அலங்கோலம் போட்டாளாம்"கற கதையா, கோலப்பொடியைத் கைதவறிக் கொட்டுன மாதிரி, வீதியையே அடைச்சு கோலம் போடுவாங்க! கேட்டால் அதுதான் ரங்கோலிம்பாங்க! அவங்க வரையுற கோலத்துல, 'படம் வரைந்து பாகங்களைக் குறி'ங்கிற மாதிரி, பாகம் குறிச்சாத்தான் கரும்பு, மஞ்சள் கிழங்கு எல்லாத்தையும் தனித்தனியாகக் கண்டுபிடிக்கவே முடியும்! இதுல பொங்கல் பானைய மட்டும் நாலஞ்சு தடவை அழிச்சு அழிச்சு வரைஞ்சிருப்பாங்க! அதுக்கு பிறகும் நெளிஞ்ச மாதிரிதான் பொங்கல் பானை இருக்கும்கிறது வேற விஷயம்!

போஸ்ட் பாக்ஸ்
போஸ்ட் பாக்ஸ்

பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்புறதெல்லாம் பொங்கலுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னயே தொடங்கிடும். வழக்கமா பாதி நிறையும் போஸ்ட் பாக்ஸ், பொங்கலையொட்டி மட்டும் முழுசா நிறைஞ்சுட்டதால, போஸ்ட் ஆபீஸ்லயும் சாக்குப்பையை வைத்து பொங்கல் வாழ்த்தட்டைகளை வாங்குவாங்க. பொங்கலையொட்டி இரண்டு வாரத்துக்கு தபால்காரருக்கு பெரிய சுமை இருக்கும்.

"பெரியப்பா வீட்டுலேயிருந்து பொங்கல் வாழ்த்து வந்துடுச்சா, இன்னும் மாமா வீட்டுலேயிருந்து பொங்கல் வாழ்த்து வரலையே, கோபமாத்தான் இருக்காரோ?" என்று யார் யார்கிட்டேயிருந்து என்ன மாதிரி டிசைன்ல பொங்கல் வாழ்த்து வந்திருக்குதுன்னு தினமும் பார்க்கிறது தனி சந்தோஷம்தான். "என்னங்க, உங்க அக்காவுக்கு நீங்கதான் பொங்கல் வாழ்த்தெல்லாம் அனுப்புறீங்க, ஆனால், அவங்ககிட்டேயிருந்து மட்டும் வரவே மாட்டேங்குது. இனி அடுத்த வருஷமெல்லாம் அவங்களுக்கு அனுப்புற வேலை வெச்சுக்காதீங்க!" எனப் பஞ்சாயத்தும் களைகட்டும்.

பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து

பொங்கல்ன்னாலே வீட்டை ஒதுங்க வைக்கிறது பெரிய வேலையா இருக்குது. வீட்டை ஒதுங்க வைக்கிறப்பதான் அலாவுதீனோட அற்புத விளக்கிலிருந்து கிடைக்கிற மாதிரி நாலு வருஷத்துக்கு முன்ன மாத்தாமல் விட்டுட்ட 500 ரூபாய் செல்லாத நோட்டு, 20 வருஷத்துக்கு முன்ன காலேஜ்ல வாங்குன ஆட்டோகிராப் நோட்டு, ரெண்டு நாளைக்கு முன்ன தேடிகிட்டு இருந்த ஜட்டி வரைக்கும் புதையல் மாதிரி கிடைக்கும். ஆட்டோகிராப் நோட்டு கிடைச்சதுமே 20 வருஷத்துக்கு முன்ன மனசு போயிடும். ரம்யா, ரேவதின்னு ஒவ்வொரு பொண்ணா ரீவைண்ட்ல வருவாங்க... "வீட்டை ஒதுங்க வைக்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"ன்னு லாஸ்ட்டா மனைவியோட குரலும் வர்றப்பதான் நிகழ்காலத்துக்கே வருவோம்!

பொங்கலுக்கு புது டிரெஸ் எடுக்குறதுன்னா இப்ப மாதிரி ரெடிமேட் 20 வருஷத்துக்கு முன்பு கிடையாது. சட்டை, பேன்ட் எல்லாத்துக்கும் துணி எடுத்து, அவரவர்க்கு இருக்கும் குடும்ப (!) டெய்லரிடம் தைக்கக்கொடுப்பார்கள். அவரோ, துணியை வாங்கும்போதே "இவ்வளவு லேட்டா குடுக்குறீங்களே, தைக்கிறதுக்கு எவ்வளவு குவிஞ்சிருக்கு பாருங்க!" என்று பிகு பண்ணுவார். தைக்கக் கொடுத்த நாளிலிருந்து தினமும் அவர் கடைப்பக்கமாகப் போகும்போதெல்லாம் தைக்கக்கொடுத்தது குறித்து நினைவுபடுத்தினாலும், பொங்கலுக்கு முதல் நாள்தான் பொதியிலிருந்து நாம் கொடுத்த துணியைத் தேடியெடுப்பார். தைக்கத் தொடங்கும்போதுதான் "என்னது, துணி கம்மியா எடுத்திருக்கீங்க!" எனக் குண்டைத் தூக்கிப்போடுவார். "பரவாயில்ல, இருக்குறத வச்சி அட்ஜஸ்ட் பண்ணி தைச்சுக் கொடுங்க!" என்று அப்பா சமாதானம் பேசுவார். ஒருவழியாக, பொங்கலன்று மதியம்போல தைத்தும் தைக்காமலுமாகக் கொடுப்பார். நாமளும் சந்தோஷமாக அணிந்துகொண்டு திரிவோம். அந்த இனிய அவஸ்தையெல்லாம் இன்றைய ரெடிமேட் உலகில் மிஸ்ஸிங் பாஸ்!

மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல்

மாடு வளர்க்குறவங்க, வீட்டுக்கு வெள்ளையடிச்சதோட மாட்டுக்கொம்புகளுக்கும் பெயின்ட் அடிப்பாங்க. இதுல பலரும் அவங்களுக்குப் பிடிச்ச கட்சிக்கலரைத்தான் அடிப்பாங்க. கட்சி மாறும்போது மாடுங்களும் கட்சி மாறிடும்! என்னையும் ஏன்டா கட்சி மாத்தி இம்சை பண்றீங்கன்னு வாயில்லா ஜீவன் கேள்வி எழுப்பாதுங்கற தைரியம்தான். அப்பயெல்லாம் ஜல்லிக்கட்டை டிவியில பார்க்காமல் நேர்ல பார்க்கத்தான் கூட்டம் அலைமோதும். மாட்டை அடக்குறதை வேடிக்கை பார்க்கிறதைவிட, எந்தப் பொண்ணை ரூட்டுவிட்டு மாட்டுப்பொண்ணா மாத்தலாம்னும் நோட்டம் விடுவாங்க!

இப்ப இருக்குற நடிகர்களான தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிக்குமார்னு அத்தனை பேருக்கும் கிடைக்காத ஒரு விஷயம், 20 வருஷத்துக்கு முன்னயே சினிமாவில் கொடிகட்டிப்பறந்த ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, ராமராஜன், அஜீத், விஜய்க்கெல்லாம் இருந்திருக்கு... அதுதான் பொங்கல் வாழ்த்து அட்டை! இப்பயெல்லாம் ரசிகர்களுக்கு, பொங்கல் ரிலீஸ் படம் மட்டும்தான் எதிர்பார்ப்பு. முன்பெல்லாம், தங்களுக்குப் பிடிச்ச நடிகரோட படம் போட்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி, நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புறதுதான் வழக்கமே! சில பேருக்கு வாழ்த்து அட்டையை வாங்கி இன்னொருத்தனுக்கு அனுப்ப மனசு வராது. வீடு முழுக்க வால் பேப்பர் மாதிரி வாழ்த்து அட்டைகளை ஒட்டி வச்சிடுவாங்க!

நடிகர்கள்
நடிகர்கள்

இப்பெல்லாம் பொங்கல் ரிலீஸுக்கு ஒரேயொரு ரஜினி படம்தான் வருது. அவரோட ரசிகர்களுக்கு மட்டும்தான் பொங்கலாகவே இருக்குது. ஆனால், 20 வருஷத்துக்கு முன்பெல்லாம் பொங்கலுக்கு மட்டுமே 10 படத்துக்கு மேல ரிலீஸ் பண்ணுவாங்க. அத்தனை நடிகர்களோட ரசிகர்களும் ஊருவிட்டு ஊரு போயி ரிலீஸ் படம் பார்த்துட்டு வந்து ஆஹா ஓஹோன்னு கதையளப்பாங்க! இப்ப மாதிரி தமிழ் ராக்கர்ஸோ, ஆன்லைன் திரைப்பட விமர்சனங்களோ இல்லாததால, அவங்க சொல்றதையே வேதவாக்கா கேட்பாங்க! ஏகப்பட்ட டிவி சேனல், ஏகப்பட்ட புதுப்படங்கள் இப்ப வந்தாலும், அவங்கவங்களுக்குப் பிடிச்ச நடிகரோட புதுப்படத்தைப் பார்க்கறதும், எங்க நடிகரோட படம்தான் 100 நாள் ஓடுது, 200 நாள் ஓடுதுன்னு போட்டி போட்டதும்... என்ன இருந்தாலும் அந்தக்காலம் அந்தக்காலம்தான் பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு