Published:Updated:

ராமநாதபுரத்தில் ஊரடங்கினால் முடங்கிய ஆடித் திருவிழாக்கள்... கவலையில் மும்மத பக்தர்கள்!

திருச்சி சாலை - ராமநாதபுரம்
திருச்சி சாலை - ராமநாதபுரம்

பல நூற்றாண்டு காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடந்து வந்த இந்த ஆடித் திருக்கல்யாண உற்சவம் இந்தாண்டு பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வந்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மத கோயில்களின் திருவிழாக்கள் கொரோனா தாக்கத்தின் விளைவாக மக்கள் பங்கேற்பின்றி நடைபெற இருப்பது மும்மத பக்தர்களையும் வேதனை அடையச் செய்துள்ளது.
ஆடி திருக்கல்யாண திருவிழா
ஆடி திருக்கல்யாண திருவிழா
உ.பாண்டி (File Photo)

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி திருக்கோயில் ஆன்மிக நம்பிக்கை கொண்ட இந்துக்களின் பிரசித்திபெற்ற புனித தலங்களில் ஒன்றாகும். இலங்கை மன்னன் பராக்கிரமபாகு என்பவரால் சிறிய அளவில் உருவான இக்கோயில் முகவையை ஆண்ட சேதுபதி மன்னர்களால் மிகப் பெரிய பிராகாரங்களுடன் உலகப் பிரசித்திபெற்ற கோயிலாக உருவாக்கப்பட்டது. இலங்கையில் ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தைப் போக்க ராமன் சிவனை வழிபட்ட தலம் என்ற இதிகாச சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.

ஆடித் திருக்கல்யாண உற்சவம்

ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களான ஆடித் திருக்கல்யாண உற்சவம், மாசி மகா சிவராத்திரித் திருவிழா ஆகியன சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாவின்போது பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம், அம்மன் தபசு, சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி சுவாமி-அம்பாளை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இத் திருவிழாவின் ஒரு பகுதியாக வரும் ஆடி அமாவாசை தினத்தன்று மாநிலம் முழுவதிலும் இருந்து வரும் இந்துக்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, மறைந்த தங்கள் முன்னோர்கள் நினைவாக திதி கொடுப்பதும் வழக்கம்.

ஆடி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்!
ஆடி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்!
உ.பாண்டி (File Photo)

பல நூற்றாண்டு காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடந்து வந்த இந்த ஆடி திருக்கல்யாண திருவிழா இந்தாண்டு பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ராமநாதசுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பூஜைகள் மட்டும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 20-ம் தேதி ஆடி அமாவாசையும், 25-ம் தேதி ஆடித் தபசும் மறுநாள் சுவாமி - அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகள் அனைத்தும் பக்தர்கள் பங்கேற்பின்றி கோயிலின் மூன்றாம் பிராகாரத்தில் நடத்தப்பட உள்ளன. திருக்கல்யாண உற்சவம் மட்டும் சமூக வலைதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தனக்கூடு

இதே போல் இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குவது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தர்ஹா. தமிழகம் மட்டுமின்றி தென்மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபட வருவது வழக்கம். கொரோனாவினால் இங்கும் பக்தர்கள் அனுமதிக்கபடவில்லை. இந்நிலையில் ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்ஹாவில் அனைத்து சமய மக்களும் இணைந்து நடத்தும் 846-வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா ஜூலை 2-ம் தேதி துவங்கியது.

ஏர்வாடி தர்ஹா
ஏர்வாடி தர்ஹா
உ.பாண்டி (File Photo)

ஜூலை 15-ல் நடக்க இருந்த முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் ரத்துசெய்யப்பட்டு, அன்று அதிகாலை தர்ஹாவில் உள்ள மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்வு மட்டும் எளிமையான முறையில் நடக்கிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதால் இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து சமயத்தினரும் வருத்தம் அடைந்துள்ளனர்.

சந்தியாகப்பர் திருவிழா

இதைப் போலவே மீனவ மக்களின் பாதுகாவலர் எனப் போற்றப்படும் புனித சந்தியாகப்பர் திருத்தலம் தங்கச்சிமடத்தில் அமைந்துள்ளது. கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி இந்து மற்றும் இஸ்லாமிய மக்களும் இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வாரம்தோறும் வியாழக்கிழமையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தாக்கத்தினால் அதிக அளவிலான பக்தர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ஆடித் திருவிழா ஜூலை 16-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடப்பது வழக்கம். ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் இந்த திருவிழாவில் அனைத்து சமய மக்களும் பாகுபாடின்றி பங்கேற்று பிரார்த்தனை செய்து வந்தனர்.

சந்தியாகப்பர் திருவிழா
சந்தியாகப்பர் திருவிழா
உ.பாண்டி (File Photo)

இந்நிலையில் 478-வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான திருவிழாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் திருவிழா கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் சந்தியாகப்பர் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களும் கவலையடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு