Published:Updated:

ஆடி அம்மன் தரிசனம்: கருணை உள்ளம் கொண்டவளாம் காவிரியம்மா - ஆடிப்பெருக்கு தரிசனத்தின் சிறப்புகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆடிப்பெருக்கு - ஆடி அம்மன் தரிசனம்
ஆடிப்பெருக்கு - ஆடி அம்மன் தரிசனம்

புதிதாக திருமணமான ஜோடிகள் திருமணத்தில் தாங்கள் அணிந்திருந்த மாலையைக் கொண்டு வந்து அதை ஆற்றில்விட்டு தங்கள் வம்சம் விளங்க வேண்டிக்கொள்வார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திகள் எல்லாம் சக்தியின் அம்சம் என்றே போற்றும் தேசம் இது. இதில் கங்கைக்கு நிகரான பொன்னி நதிக்கும் பல சிறப்புகள் உண்டு. கரையெங்கும் பூவிரித்து நடந்து செல்லும் காவிரியை அம்மனாகவே வணங்கும் வழக்கம் தமிழருக்கு உண்டு. எது எல்லாம் தங்களை செழிக்க வைக்கிறதோ அது எல்லாம் கருணை கொண்ட தாயின் அம்சம் அல்லவா. ஆண்டாண்டுகளாக தமிழ் தேசத்தை வளமையாக்கி வரும் காவிரியைக் கொண்டாடும் அற்புத விழாவே ஆடிப்பெருக்கு விழா. நாளை (3-8-2021) செவ்வாய்க்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது.

காவிரி அம்மா
காவிரி அம்மா

இந்த நாளில் காவிரி கரை புரண்டோடும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடி காவிரி அம்மாவை வழிபடுவர். இந்த நாளில் நன்னீர் ஓடும் இடங்களில் எல்லாம் காவிரி அம்மா எழுந்தருளுவாள் என்பதும் நம்பிக்கை. ஆடிப் பதினெட்டாம் நாள் சூரியன் பூச நட்சத்திரத்திலிருந்து ஆயில்ய நட்சத்திரத்துக்கு மாறுவார். அதாவது சூரியன் புதனின் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்துக்குச் செல்லும் நாள் ஆடி பதினெட்டு. சூரியனும் புதனும் நட்புக் கிரகம் என்பதால் ஆடிப்பெருக்கு அன்று தொடங்கும் எல்லா செயல்களும் துலங்கும் என்பதும் நம்பிக்கை. ஆடிப்பெருக்கு அன்று விதைத்தால் விளைச்சல் பெருகும் என்பதால் விளைச்சலுக்கு ஆதாரமான நீரை வணங்குவது இந்த நாளின் சிறப்பு.

முளைப்பாரி
முளைப்பாரி

காவிரி ஆற்றை அம்மனாக, தங்கள் தாயாக பாவித்து அவள் நடந்து செல்லும் பாதைகளில் சென்று வரவேற்று வணங்கி ஆசி பெற்றால், எண்ணியவை யாவும் நடக்கும், மங்கல காரியங்கள் தொடரும், செல்வமும் சுபீட்சமும் காவிரியைப்போல அவர்கள் வீட்டிலும் பெருக்கெடுத்து ஓடும் என்பது நம்பிக்கை. இதனாலேயே காவிரிக் கரையில் மக்கள் கூடி மங்கல விழா எடுக்கிறார்கள்.

ஆடி அம்மன் தரிசனம் - மேல்மலையனூர்: அந்தரியே சுந்தரியே ஆபத்தில் காத்தருளும் அங்காள ஈஸ்வரியே!

இந்நாளில் ஆற்றங்கரைப் பகுதிகளில் மக்கள் தங்கள் குடும்பத்தோடு கூடி முளைப்பாரி, சித்திரான்னங்கள், காப்பரிசி, காதோலை, கருகமணி, கண்ணாடி வளையல், மஞ்சள் கயிறு, தாம்பூலம், கண்ணாடி, பூ, பழங்கள், மஞ்சள், குங்குமம், தேங்காய், பால், சிறிய மரச்சப்பரம், அம்மன் படம் எல்லாம் வைத்து தூப தீபம் காட்டி வழிபடுவார்கள். காவிரி அம்மாவுக்கு ஆரத்தி எடுத்து வணங்குவார்கள். திருமண பெண்கள் தங்கள் பழைய தாலிக் கயிறை அப்போது மாற்றி, புதிய சரடை அணிந்து கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகவேண்டி மஞ்சள் நூலை கையில் கட்டுவார்கள்.

ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு
புதிதாக திருமணமான ஜோடிகள் திருமணத்தில் தாங்கள் அணிந்திருந்த மாலையைக் கொண்டு வந்து அதை ஆற்றில்விட்டு தங்கள் வம்சம் விளங்க வேண்டிக்கொள்வார்கள். வீதியெங்கும் அம்மன் படத்தை ஒரு சிறிய சப்பரத்தில் வைத்து சிறுவர் சிறுமியர்கள் ஊர்வலம் அழைத்துச் செல்வார்கள்.

ஆடிப்பெருக்கில் காவிரி அம்மனைக் கொண்டாடினால் அந்த ஆண்டு முழுக்க அன்னை பெருக்கெடுத்து ஓடிவருவாள் என்பது நம்பிக்கை. முளைப்பாரியைச் சுற்றி பெண்கள் வட்டமிட்டு கும்மி அடித்து காவிரி அம்மனை வேண்டி பாட்டுப் படித்து மகிழ்வார்கள். முளைப்பாரியை ஆற்றில் இட்டு, முளைத்து வந்த தானியங்களை நீர்வாழ் உயிர்களுக்கு உணவாக்கிப் படைப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சங்ககாலத்தில் இருந்தே காவிரி அன்னையை 'இந்திர விழா, புனலாடுதல் விழா' என்ற பெயர்களில் கொண்டாடுவது நம் வழக்கம். மஞ்சள் கலந்த காவிரி நீரை மக்கள் தங்கள் வீடுகளிலும் வயல்களிலும் தோட்டங்களிலும் கால்நடைகள் கட்டப்பட்டிருக்கும் இடங்களிலும் தெளிப்பது வழக்கம்.

ஆடிப்பெருக்கு நாளில்தான் ஸ்ரீரங்கநாதர் காவிரி அம்மனுக்கு சீதனம் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. அசுரர்களை வதைத்த தோஷம் நீங்க ஸ்ரீராமபிரான் ஒரு ஆடிப்பெருக்கு நாளில்தான் தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவிரியில் நீராடினார் என்றும் கூறப்படுகிறது. ஆகவே இந்நாளில் காவிரியில் நீராடுவது பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் செயலாகும்.

ஆடி பதினெட்டு விழா
ஆடி பதினெட்டு விழா

புது மழைப் பொழிந்து ஆற்றில் வெள்ளம் பெருகும் காலம் ஆடி. இதில் 18-ம் நாள் மிக மிக விசேஷமானது என்று நம் முன்னோர்கள் கணித்து இந்நாளில் நதி தீரங்களில் புனித நீராடுவது நன்மையை அளிக்கும் இந்த விழாவைக் கொண்டாடி உள்ளார்கள். அகத்தியரின் கமண்டலத்தில் சிக்கிய காவிரி அம்மன், விநாயகப் பெருமான் கருணையால் மீண்டும் ஓடிய நாளும் ஆடி பதினெட்டாம் நாள்தான் என்றும் அதனாலேயே ஆடிப்பெருக்கு என்று அந்நாளைக் கொண்டாடினார்கள் என்றும் ஆன்மிகப் பெரியோர்கள் சொல்வதுண்டு.

ஆடி அம்மன் தரிசனம்: கேட்டதையெல்லாம் கொடுப்பாள் கோட்டை மாரி - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்!
காவிரியம்மன் வழிபாடு
காவிரியம்மன் வழிபாடு

தாமிரபரணி, வைகை, வீராணம் போன்ற நீர் நிலைகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அந்த மண் சார்ந்து பல்வேறு சடங்குகளால் இந்த விழா சிறப்பிக்கப்படுகிறது.

மண்ணையும் இந்த மக்களையும் எந்நாளும் ஓயாமல் ஓடிக் காத்து வரும் காவிரி அம்மனை இந்த நாளில் வணங்கி வளம் பெறுவோம். மாடு மனை விளங்க அந்த மங்கல நாயகியைக் கொண்டாடுவோம்! ஓடிப்பெருக்கும் காவிரி அம்மனை ஆடிப்பெருக்கில் வரவேற்று வணங்குவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு