Published:Updated:

``தீபாவளி லேகியம் கேக்குறா கீர்த்தி சுரேஷ்!’’ - மேனகா சுரேஷ்

`அம்மா காலத்துலேயும் தீபாவளி கொண்டாட்டம் இருந்துச்சு. ஆனா, பாட்டி காலத்துல இருந்த அளவுக்கு இல்லை.’

மேனகா சுரேஷ் தன் அம்மாவுடன்
மேனகா சுரேஷ் தன் அம்மாவுடன்

அம்மம்மா, அப்பத்தாக்களின் காலத்தில், அதிரசம் தட்ட பச்சரியை தண்ணீரில் ஊறவைத்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, மாவு இடிப்பதில் ஆரம்பிக்கும் தீபாவளி. அம்மாக்களின் காலத்தில், அரவை மெஷின்கள் அதிரசத்துக்கு மாவு அரைக்கிற வேலையைப் பார்த்துக்கொண்டன. மற்றபடி, நோன்பெடுக்க, வீட்டுப் பொண்ணுங்களுக்குச் சீர் அனுப்ப, நாத்தனாருக்குக் கொடுத்தனுப்ப, அக்கம் பக்கம் பகிர்ந்துகொள்ள எனப் பலகாரம் சுடுவதற்காக இரவெல்லாம் கண் விழித்து அடுப்படியில் கிடப்பார்கள் அம்மாக்கள்.

சுட்ட பலகாரங்களை நோன்பெடுப்பதற்காக வீட்டுப் பொடிசுகள் கண்ணிலும், எலிகளின் கண்ணிலும் படாமல் பரணையில் வைத்து பாதுகாத்துவிட்டு, விறகடுப்பிலோ பாய்லரிலோ வெந்நீர் வைப்பார்கள். அடுத்து என்ன... குடும்பத்தாரை எழுப்பி கங்கா ஸ்நானம் முடித்து, லேகிய உருண்டையைச் சாப்பிடக் கொடுக்கிற நேரம்... சூரியன் குட்மார்னிங் சொல்லிவிடுவார்.

Actor keerthy suresh with her family
Actor keerthy suresh with her family

பிள்ளைகளுக்குத்தான் தீபாவளி என்றால் பலகாரங்களும் பட்டாசும். அம்மாக்களுக்கென்னவோ தீபாவளி என்பது உறக்கம் தொலைக்கும் பண்டிகைதான். தற்போது, தீபாவளி லேகியத்தில் ஆரம்பித்து அதிரசம் வரைக்கும் பிராண்டட் தயாரிப்பில் கிடைக்க ஆரம்பித்ததிலிருந்து, நமக்கெல்லாம் பொழுது விடிந்த பிறகுதான் தீபாவளி என்றாகிவிட்டது; அம்மாவின் கைமணமும் மறந்துவிட்டது.

அம்மாக்கள் உறங்காத அந்தக் கால தீபாவளி அனுபவம்பற்றி, கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா சுரேஷ் பகிர்ந்தார்.

Menaka suresh with her family
Menaka suresh with her family

''எங்க ஊரு திருநெல்வேலி மாவட்டத்துல இருக்கிற திருக்குறுங்குடி. ரொம்ப சின்ன வயசுல, திருக்குறுங்குடியிலயிருக்கிற எங்க அம்மாவைப் பெத்த பாட்டி வீட்டுல தீபாவளி கொண்டாடினது இப்பவும் எனக்கு நினைவிருக்கு. பிள்ளைங்க எல்லாம் தூங்கப்போற நேரத்துல வடாம், வத்தல் போடறதுக்குத் துணியை எல்லாம் ரெடி பண்ணுவாங்களே, அந்த மாதிரி, துணியை விரிச்சுப்போட்டு பாட்டி, சின்னப்பாட்டி, அத்தைங்க எல்லாரும் முறுக்குச் சுத்த ஆரம்பிப்பாங்க. அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். காலையில் கண்ணு முழிச்சிப் பார்த்தா மைசூர்பாகு, லட்டு, பூந்தி, தித்திப்புச் சீடை, எள்ளுருண்டை, தேன்குழல்னு பெரிய பெரிய பாத்திரங்கள்ல செஞ்சு வெச்சிருப்பாங்க.

சுட்ட தீபாவளி பலகாரங்களைச் சொந்தக்காரங்க வீடுகளுக்குக் கொண்டுபோய் கொடுக்கிறது என் வேலை. `பெரிய தாத்தா ஆத்துல கொடுத்துட்டு வா', `சின்ன மாமா ஆத்துல கொடுத்துட்டு வா'ன்னு பெரிய பெரிய தூக்குல பலகாரங்களை வெச்சுக் கொடுப்பாங்க பாட்டி. இதை எப்படா பாட்டி சொல்லுவாங்கன்னு நான் காத்துக்கிட்டிருப்பேன். இதைக் கேட்டவுடனே, சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறதுக்கு எனக்கு ரொம்ப ஆவல்னு நினைச்சிடாதீங்க. அதுக்குக் காரணம் வேற...'' என்று சிரித்தவர், தொடர்ந்தார்.

`தீபாவளிக்குத் துணியெடுக்க பொண்டுகள்லாம் இந்த நேரத்துக்கு வந்துடுங்கோ'ன்னு பாட்டி சொல்லிடுவாங்க. தீபாவளி ஷாப்பிங்கே பெரிய விழா மாதிரி இருக்கும் எங்க வீட்டுல''
மேனகா சுரேஷ்

``பானையில விறகடுப்புல வெந்நீர் வைச்சிருப்பாங்க பாட்டி. தீபாவளி ஸ்நானம் முடிச்சு, முடி உலர்ந்தவுடனே அம்மா எனக்கு தலையை வாரி, தாழம்பூ பின்னல் போடுவாங்க. கீழே உருண்டைக் குஞ்சம், ராக்குடி, நெத்திச்சுட்டி எல்லாம் வெச்சு அலங்காரம் பண்ணிவிடுவாங்க. இந்த அலங்காரத்தோடு பட்டுப் பாவாடையும் கட்டிக்கிட்டு பலகாரங்களை எடுத்துட்டுப் போவேன். இந்த அலங்காரங்களை மத்தவங்களுக்குக் காட்டணுமில்ல, அதுக்குத்தான் அவ்வளவு ஆவலா காத்துக்கிட்டிருப்பேன். ஆங்... சொல்ல மறந்துட்டேனே, எங்க பாட்டி வீட்டுல சொந்தமா மாட்டு வண்டி இருக்கும். 'தீபாவளிக்கு துணியெடுக்க பொண்டுகள்லாம் இந்த நேரத்துக்கு வந்துடுங்கோ'ன்னு பாட்டி சொல்லிடுவாங்க. தீபாவளி ஷாப்பிங்கே பெரிய விழா மாதிரி இருக்கும்.

பிள்ளைகளுக்குத்தான் தீபாவளி என்றால் பலகாரங்களும் பட்டாசும். அம்மாக்களுக்கென்னவோ தீபாவளி என்பது உறக்கம் தொலைக்கும் பண்டிகைதான் அந்தக் காலத்தில்!
Menaka suresh
Menaka suresh

அம்மா காலத்துலேயும் தீபாவளி கொண்டாட்டம் இருந்துச்சு. ஆனா, பாட்டி காலத்துல இருந்த அளவுக்கு இல்லை. அம்மா லேகியம் ஸ்பெஷலிஸ்ட். தீபாவளிக்கு மொத நாளே லேகியம் செய்யுறதுக்கான அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை, திப்பிலின்னு தண்ணில ஊறப்போட்டுடுவாங்க அம்மா. நானும் தம்பியும், அம்மா அதையெல்லாம் எப்போ அரைச்சுக் கிண்டுவாங்கன்னு எதிர்பார்த்துட்டே இருப்போம். தீபாவளிக்கு மொத நாள் ராத்திரி பலகாரம் சுட்டு முடிச்சுட்டு, நாலு மணிக்கு பாய்லர்ல தண்ணியை ஊத்திட்டு, லேகியத்துக்கு ஊறப்போட்ட சாமான்களை கைப்பாகமா மொரமொரன்னு அரைப்பாங்க. நாங்க குளிச்சு முடிச்சு வர்றப்போ லேகியம் கிண்டி முடிச்சிருப்பாங்க.

நோன்பெடுக்க, வீட்டுப் பொண்ணுங்களுக்கு சீர் அனுப்ப, நாத்தனாருக்குக் கொடுத்தனுப்ப, அக்கம் பக்கம் பகிர்ந்துகொள்ள எனப் பலகாரம் சுடுவதற்காக இரவெல்லாம் கண் விழித்து அடுப்படியில் கிடப்பார்கள் அம்மாக்கள்.
மேனகா சுரேஷ்
மேனகா சுரேஷ்

ஆளுக்கு மூணு ஸ்பூன் லேகியத்தைக் கையில விடுவாங்க பாருங்க... ஸ்... ப்பா... அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் அம்மா கைப்பக்குவம். அந்த லேகியத்துக்காகவே தீபாவளிக்கு ஏங்கியிருக்கேன். இப்போ அஞ்சாறு வருஷங்களா அம்மாவால லேகியம் செய்ய முடியலை. நான் இன்னமும் கத்துக்கலை. என் பொண்ணுங்களும் இப்போ லேகியத்துக்கு ஏங்க ஆரம்பிச்சிருக்காங்க. 'எப்பம்மா லேகியம் செய்ய கத்துக்கப்போறே...'னு கேட்டுட்டே இருப்பா கீர்த்தி. 'இந்த தீபாவளிக்கு சொல்லிக் கொடும்மா, நான் கிண்டறேன்'னு எங்கம்மாகிட்ட கேட்டிருக்கேன்!''

மேனகா சுரேஷின் வார்த்தைகள் நமக்கும், நம் பாட்டி காலத்து, அம்மா காலத்து தீபாவளிகளை நினைவுபடுத்திவிட்டன!

`தீபாவளி சிறப்புக்காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்!'-`ஸ்ட்ரிக்ட்' கடம்பூர் ராஜு