Published:Updated:

``பிரேயர் பண்ணும்போது ஆண்டவரிடம் பிறருக்காக வேண்டுங்கள்!" - ரமேஷ் கண்ணாவின் கிறிஸ்துமஸ் மெசேஜ்

`சேத்துப்பட்டு பாலம் ஏறியபோது, அப்படியே போய் பாலத்தை உடைத்துக்கொண்டு விழுந்துவிடலாமா என்று தோன்றியது.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நான் கிறிஸ்டியன். என் மனைவி ஷோபா இந்து. அவங்களோட மத உணர்வுகளுக்கு நான் மரியாதை கொடுப்பேன், என்னோட மத உணர்வுகளுக்கு அவங்க மரியாதை கொடுப்பாங்க. உண்மையில் நான் தீபாவளி, பொங்கல்னு எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவேன். திருவேற்காட்டிலிருந்து திருப்பதிவரை எல்லா இந்துக் கோயில்களுக்கும் போவேன். அதேமாதிரி, அவங்க கிறிஸ்துமஸ், நியூ இயர்னு எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவாங்க. இப்போ நீங்க பார்க்கிற கிறிஸ்துமஸ் ட்ரீ, என் மனைவியும் மருமகளும் வாங்கினது. டான் பாஸ்கோ ஸ்கூல்கிட்ட உள்ள ஒரு கடையில வாங்கிட்டு வந்தாங்க.

Rameshkanna
Rameshkanna

நான் கிறிஸ்துவப் பள்ளிகள்ல படிச்சு வளர்ந்தவன். அதனால, எனக்கு பைபிள் வாசிக்கும் பழக்கம் சின்ன வயசிலிருந்தே உண்டு. பைபிளில் எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம்னா 'கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், தீங்கு உன்னை இனி அணுகாது' என்பதுதான். இந்த வாக்கியம் என்னை மிகவும் பாதித்த வாக்கியம். எனக்குத் துன்பம் வரும்போதெல்லாம் இதை நான் எண்ணிக்கொள்வேன்.

பள்ளிக்கூடத்தில் படிக்கிற நாள்களில் பைபிள் கிளாஸ்களுக்குச் செல்வேன். ஞாயிற்றுக்கிழமைகளில் இப்போதுவரை சர்ச்சுக்குச் செல்கிறேன். பள்ளிக்கூடத்தில் படிக்கிற நாள்களிலிருந்து நான் நாடகங்களில் நடித்து வருகிறேன். சினிமாவுக்கு வந்து, உதவி இயக்குநராகி, படத்தை இயக்கும் அளவுக்கு வந்தேன். பிறகு `நடிகர் ரமேஷ் கண்ணா' என்று அறியப்படும் அளவுக்கு வந்திருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் காரணம் என்று, நான் இயேசு கிறிஸ்துவைத்தான் நினைப்பேன். காரணம், அவர் மட்டும்தான் `உன்னை நேசிப்பதைப் போல் மற்றவர்களையும் நேசி' என்றார். இதேபோல் அநேக நல்ல விஷயங்களை தனது வசனங்களின் மூலம் நமக்குச் சொல்லியிருப்பார்.

Rameshkanna
Rameshkanna

`தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவதுபோல் நான் உங்களுக்கு மனம் இரங்குவேன்' என்கிறார் இயேசு பெருமான். தன்னுடைய பிள்ளைகள் என்ன தவறு செய்திருந்தாலும், எப்படியாவது அவர்கள் மாறிவிடுவார்கள் என்றுதான் ஒவ்வொரு தகப்பனும் ஆசைப்படுவான். அதற்குத்தான் எல்லாவற்றையும் செய்வான். அப்படித்தான் ஆண்டவரும் நாம் எல்லோரும் தீயவற்றிலிருந்து விலகி, நல்ல பாதையில் வருவோம் என்று ஆசைப்படுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இ.எஸ்.ஐ சர்ச்சில் நான், சாலமன், இமானுவல் எல்லாம் கேரல் ரவுண்ட்ஸ் போவோம். இரவு 10 மணிக்குத் தொடங்கி, காலையில் எட்டு மணி வரைக்கும் கிறிஸ்துமஸ் கீதங்களைப் பாடிக்கொண்டே செல்வோம். அப்படிப் போகும்போது சினிமா பாட்டு ட்யூன்களில் கிறிஸ்துவப் பாடல்களைப் பாடுவோம். அதைக் கேட்டுவிட்டு சர்ச் பாஸ்டர் கூப்பிட்டு, `ஏம்பா சினிமா ட்யூன்ல பாடுறீங்க... கேட்கிறவங்க என்னை நினைப்பாங்க' என்று சொல்லுவார். `அதெல்லாம் வேண்டாம்ப்பா, நீங்களா இசையமைச்சுப் பாடுங்க' என்று வலியுறுத்துவார்.

Christmas Tree
Christmas Tree

நாங்கள் எங்கு போய் இசை அமைப்பது? மலையாளப் பாடல்கள், இந்திப் பாடல்கள் ட்யூன்களை எல்லாம் எடுத்து அதற்கேற்ப லிரிக்ஸ் எழுதிப் பாடுவோம். பாடிக்கொண்டே போகும்போது சில இடங்களில் கேக் கொடுப்பார்கள், சில இடங்களில் சாப்பாடு போடுவார்கள், சில இடங்களில் டீ கொடுப்பார்கள். அந்த விருந்து உபசாரம் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். காரணம், குடும்பத்தில் அப்போதிருந்த வறுமை. இரவு முழுவதும் சுற்றித் திரிவோம். கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு மட்டுமல்ல; இந்துக்கள் வீடுகளிலும் எங்களை அழைத்துப் பாடச்சொல்வார்கள். அந்த இரவு மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அந்த நாள்கள் இனி வராது.

அதேபோல, ஈஸ்டருக்கு முன் வரும் லெந்து நாள்களில் 42 நாள்கள் காலையிலிருந்து இரவு வரை சாப்பிடாமல் விரதம் இருந்துவிட்டு இரவுதான் சாப்பிடுவோம். இந்த மாதிரி ஐந்து வருடங்கள் நான் விரதமிருந்திருக்கிறேன். அதற்கு ஆண்டவர் கொடுத்த பரிசுதான் இப்போது நான் வாழும் வாழ்க்கை. உண்மையான விசுவாசத்துடன் கடவுளிடம் நீங்கள் என்ன கேட்டாலும் அவர் கொடுப்பார். அதனால்தான் 'கேளுங்கள் உங்களுக்குத் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்' என்று சொன்னார்.

Rameshkanna
Rameshkanna

என் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான விஷயத்துக்கு, நானே சாட்சியாகிச் சொல்கிறேன். எனக்கு இதயத்தில் பிரச்னை வந்தது. முதலில் இரண்டு ஸ்டென்ட் வைத்தார்கள். 2018-ல் மீண்டும் இரண்டு ஸ்டென்ட் வைத்தார்கள். ஒருநாள் நெஞ்சில் வலி வந்தது. டாக்டரிடம் செக் பண்ணினேன். `நல்லாதான் இருக்கு, எந்தப் பிரச்னையும் இல்லை' என்று சொல்லிவிட்டு ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். `வெள்ளையணுக்களின் எண்ணிக்கை உங்களுக்கு உடம்பில் இயல்பைவிட அதிகமா, 200% எண்ணிக்கையில் இருக்கு. இது ஒரு விபரீதமான ஆபத்துல கொண்டுபோய் விட்டுடும்' என்றார் டாக்டர்.

`என்னடா இது, இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு இப்போதான் நல்லா வந்திருக்கோம். இப்போ போய் இப்படி ஒண்ணு வருதுன்னு சொன்னா எப்படி?' என்று என் மனசுக்குத் தாங்கவில்லை. வெறுத்துப்போய் காரை எடுத்துக்கொண்டு வேகமாகப் போய்க்கொண்டிருந்தேன். சேத்துப்பட்டு பாலம் ஏறியபோது, அப்படியே போய் பாலத்தை உடைத்துக்கொண்டு விழுந்துவிடலாமா என்று தோன்றியது. அந்நேரத்தில் ஒரு ஆட்டோ சர்ரென்று குறுக்கே போனது.

Jesus
Jesus

மிகவும் கடுப்பாகி, அந்த ஆட்டோவைப் பார்த்தேன். ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம், அந்த இக்கட்டான நிமிடத்தில் என்னை ஆற்றுப்படுத்தியது.

கிறிஸ்துமஸ் நன்னாளில் எல்லோரும் இறைமகனாய் உயர்வது எப்படி?

`கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், தீங்கு உன்னை அணுகாது' - இதுதான் அந்த வாசகம். அப்படியே ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். ஒரு நம்பிக்கை கிடைக்கப்பெற்று, அப்படியே வீடு திரும்பிவிட்டேன். என் உடல்நலப் பிரச்னையும் குணமானது. ஒரு நாளில் காலையிலும் மாலையிலும் என இரண்டு முறை, 40 நிமிடங்கள் நான் பிரார்த்தனை செய்வேன். அந்தப் பிரார்த்தனையில் என் வாழ்க்கையை மாற்றிய அனைத்து நண்பர்களின் பெயரையும் சொல்லி, அவர்களின் நலனுக்காக வேண்டுவேன். அதுதான் என்னை இன்றுவரை நன்றாக வைத்திருக்கிறது.

கடவுளிடம் எப்போது பிரேயர் பண்ணினாலும், நீங்கள் உங்களுக்காக வேண்டிக்கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களின் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றுவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு