Published:Updated:

வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குப் பக்தர்கள் நடைப்பயணம் செல்வது ஏன்?

VELANKANNI
VELANKANNI

வேளாங்கண்ணியில் தேர்த்திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (7.9.2019) நடைபெறுகிறது.

இஸ்ரேல் தேசத்தில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தர் சுவக்கீன். இவரின் மனைவி அன்னம்மாள். இந்தத் தம்பதி மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தபோதும் அவர்களுக்குள் ஒரு குறை இருந்துவந்தது. அது, மணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை எதுவும் பிறக்கவில்லையே என்பதுதான். நாள்கள் செல்லச் செல்ல அவர்களுக்குள் இந்தக் குறை பெரும் மனவருத்தத்தைக் கொண்டுவந்தது. குழந்தைப்பேறு வேண்டி ஜெருசலேமில் உள்ள கோயிலுக்குச் சென்று மனமுருகி ஜெபம் செய்தார்கள்.

Velankanni
Velankanni

உள்ளத்தில் சமாதானம் அடையாத சுவக்கீன், தான் கடவுளிடம் சென்று தனிமையில் மன்றாடப்போகிறேன் என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வீட்டைவிட்டுச் சென்றார். ஆனால், அவர் உடனடியாகத் திரும்பவில்லை. காலம் அன்னம்மாளின் மன உறுதியைக் கலங்கடித்தது. பிள்ளையும் இல்லை; கணவரும் இல்லை. கைவிடப்பட்ட கலம்போல கரைகாணாது வாழ்க்கைக் கடலில் சிக்கியிருப்பதை எண்ணித் தவித்தாள். 20 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

அதேபோல், பாலைவனத்தில் மன்றாடிக்கொண்டிருந்த சுவக்கீனிடம் ஒரு தேவதூதர் சென்று, `உன் மனைவி அன்னம்மாள் பாவ மாசு இல்லாத ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள்' என்று கூறிவிட்டுச் சென்றார். தேவதூதரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு சுவக்கீன் தன் மனைவியை நாடி வந்தார்.

VELANKANNI
VELANKANNI

தேவதூதரின் வாக்குப்படி 10-வது மாதத்தில் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 'மரியா' என்று பெயரிடப்பட்டதாகப் பாரம்பர்யமாகத் திருச்சபையில் சொல்லப்படுகிறது.

'மரியா' என்றால் 'கடலின் நட்சத்திரம்' என்று பொருள். மரியாவுக்கு மூன்று வயதானதும் அவரை அவரின் பெற்றோர் ஜெருசலேம் ஆலயத்துக்கு அர்ப்பணித்தனர். அங்குள்ள கல்விச்சாலையில் மரியா எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். மேலும், மறை நூல்களைப் படித்து அவற்றிலுள்ள இறைவாக்குகளின் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். அத்துடன் பாடல்களைப் பாடுவதிலும் ஜெபம் செய்வதிலும் சிறந்து விளங்கினார்.

MARY
MARY

இயேசுகிறிஸ்து பாவ மாசற்றவராகப் பிறக்க வேண்டும் என்பதால் அவரைப் பெற்றெடுக்கும் தாயும் பாவ மாசற்றவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரைக் கடவுள் தேர்ந்தெடுத்துத் தனிப்பட்ட விதத்தில் அருள் பொழிந்தார். திருச்சபையில் பொதுவாக பிறப்பு விழா மட்டுமே கொண்டாடப்படுவது வழக்கம். இயேசு, திருமுழுக்கு யோவான் மற்றும் மரியாள் ஆகியோருக்கு மட்டுமே பிறப்பு விழாவும் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்ட விழாவும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இயேசு தன் வாழ்நாளில் காடு, மேடுகள் மட்டுமன்றி பாலைவனப்பகுதிகளுக்கும் சென்று அருள் பணி செய்தார். இப்படி அவர் செல்லுமிடங்களில் ஆபத்து நேரங்களில் அவருடன் இருந்த சீடர்கள் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோதும் மரியாள் உடனிருந்தார். ஒரு அன்னை செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் உடனிருந்து கவனித்துக் கொண்டார். பல மைல் தூரத்துக்கு நடைப்பயணமாக இயேசுவுடன் மரியாளும் நடந்து சென்றிருக்கிறார். இதை நினைவுகூரும் விதமாகவே வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, இயேசுவின் பாடுகளை நினைத்தும் அவருடன் சென்ற அவரின் தாய் மரியாளை நினைத்தும் இந்த நடைப்பயணத்தை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.

YATRA
YATRA

தமிழகத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் பல இருந்தாலும் வேளாங்கண்ணியில் அமைந்திருக்கும் மாதா கோயில் மிகவும் சிறப்பு மிக்கது. மாதா இங்கு தன் பக்தர்களுக்குக் காட்சி கொடுத்த தலமாகக் கருதப்படும் வேளாங்கண்ணியில் சாதி, மத பேதமின்றி பக்தர்கள் வந்து மாதாவை வணங்கிச் செல்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 29-ம் தேதி திருவிழா தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடுமுழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்துவருகின்றனர்.

Vikatan

தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வதுண்டு. வழிநெடுக அவர்களுக்கு எல்லா மதத்தவர்களும் உண்ண உணவும் இருக்க இடமும் தந்து சேவை செய்வர். இதனால் இந்தப் பாதயாத்திரை மிகவும் சிறப்புமிக்கதாகவும் கருதப்படுகிறது. பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை மாதாவிடம் வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அது நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக நடந்துவந்து தரிசனம் செய்கின்றனர். ஒரு முறை அவ்வாறு பாதயாத்திரை வந்து தரிசனம் செய்தவர்கள் அதன் மூலம் கிடைக்கும் புத்துணர்ச்சியை அனுபவித்துவிட்டால் தவறாமல் ஆண்டுதோறும் வந்து செல்வர் என்று சொல்கிறார்கள்.

YATHRA
YATHRA

கத்தோலிக்கத் திருச்சபையில் ஒறுத்தல் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுண்டு. இத்தகைய ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ளவே இந்த நடைப்பயணம் என்று சொல்லப்படுகிறது. இறைமக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறவும் இந்த நடைப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.

தற்போது நடைபெற்றுவரும் திருவிழாவின் ஒருபகுதியாக, நாளை வேளாங்கண்ணியில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு