Published:Updated:

5 மணி நேரம், அற்புத அபிஷேகங்கள்... சிதம்பரம் நடராஜருக்கு மாசி சதுர்த்தசி திருவிழா!

சிதம்பரம்
சிதம்பரம்

சைவக் கோயில்களுக்கெல்லாம் தலைமைச் செயலகமாகத் திகழும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சதுர்த்தசி அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒன்று நடராஜ மூர்த்தி. சிவன் அபிஷேகப் பிரியர் என்றாலும் நடராஜ மூர்த்திக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம் நிகழும். அப்படி நிகழும் அபிஷேகங்களில் மாசிமாத வளர்பிறை சதுர்த்தசி அபிஷேகம் சிறப்புவாய்ந்தது. நாளை (8.3.2020) மாசி சதுர்த்தசி அபிஷேகம் நடைபெற இருக்கிறது.

Chithambaram
Chithambaram

சைவக் கோயில்களுக்கெல்லாம் தலைமைச் செயலகமாகத் திகழும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சதுர்த்தசி அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இதுபற்றி சிதம்பரம் கோயில் வேங்கடேச குருக்களிடம் பேசினோம்.

``ஒவ்வோர் ஆண்டும் சிதம்பரம் நடராஜருக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடைபெறும். சித்திரை மாதம் திருவோணம், ஆனி மாதம் உத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி ஆகிய ஆறு தினங்களிலும் அபிஷேகங்கள் சிறப்புற நடைபெறும்.

இந்த 2020-ம் ஆண்டு நடைபெறும் முதல் மகா அபிஷேகம் நாளை 8-ம் தேதி வளர்பிறை சதுர்த்தசியில் நடக்கிறது.

பொதுவாக அபிஷேகம் என்று சொன்னால் 50 லிட்டர் தண்ணீரில் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். மகா அபிஷேகம் என்பது 50,000 லிட்டர் திரவியங்களால் செய்யக்கூடியதாகும்.

Venkatesa Gurukkal
Venkatesa Gurukkal

மகா அபிஷேகத்தின்போது தீர்த்தம் மட்டுமன்றி பால், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர் எனப் பலவித அபிஷேகப் பொருள்களும் வழக்கத்தைவிட அதிக அளவில் அபிஷேகம் நடத்தப்படும்.

சிதம்பரத்தில் நடைபெறும் மகா அபிஷேகம் சுமார் 5 மணி நேரம் நடைபெறும். மாலை 5.30 மணிக்குத் தொடங்கினால் இரவு 11 மணிவரை அபிஷேகம் நடைபெறும்.

சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் `திருச்சிற்றம்பலம்' 'எதிர் அம்பலம்' என்று ஓர் இடம் இருக்கிறது. இதைக் கனக சபை என்று அழைப்பார்கள். அங்குதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்

கனகசபையில் நடைபெறும், இந்த அபிஷேகத்தை `2,000 பக்தர்கள் இருந்து காண்பார்கள். அவர்கள் முன்னிலையில் இந்த அபிஷேகம் சீரும் சிறப்புமாக நாளை மாலை நடைபெற இருக்கிறது. இதற்கென சிறப்பான வழிமுறைகளும் உள்ளன.

Sivan Parvathy
Sivan Parvathy

சிதம்பரம் கோயிலில் மூலவரும் உற்சவரும் நடராஜர் என்பதால் நடராஜரை இப்போது இருக்கும் இடத்தில் இருந்து 5 அடி கீழே இறக்கி, ஒரு பீடத்தில் வைப்பார்கள். இதைத் தொடர்ந்து நடராஜருக்கு லட்சார்ச்சனை நடைபெறும். அங்கு கீழே ஒரு யாகசாலை அமைத்து, 11 கலசங்களில் நீர் வைத்து ருத்ர ஹோமம் செய்வார்கள். ஹோமம் முடிந்ததும் கலச நீரைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.

இதையடுத்து விபூதி அபிஷேகம் செய்வார்கள். அடுத்து பாலாபிஷேகம் நடைபெறும். அபிஷேக நீரை வெள்ளிக்குடங்களில் எடுத்து அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாள்களில் நடப்பதுபோல் சிறிய அளவிலான செம்பால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. குடம் குடமாக அபிஷேகம் செய்வார்கள் என்பதுதான் இங்கு உள்ள விசேஷம்.

Chidambaram
Chidambaram

அதிக அளவில் பால், தயிர், தேனாபிஷேகம் நடைபெறும். தேனாபிஷேகம் முடிந்ததும் நாட்டுச்சர்க்கரை அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும். இதைத் தொடர்ந்து இளநீர் அபிஷேகம் நடைபெறும். 2,000 இளநீர்கள் இதற்காகப் பயன்படுத்தப்படும்.

இதைத்தொடர்ந்து சந்தன அபிஷேகம் பன்னீர் மற்றும் வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

இந்த அபிஷேகங்கள் முடிய ஏறக்குறைய 5 மணி நேரம் ஆகும். சிதம்பரத்தில் பாரம்பர்யமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி என்பதால், மாலை நான்கு மணிக்குக் கோயில் திறந்ததும் பக்தர்கள் எல்லோரும் முன்பாகவே வந்து அமர்ந்துவிடுவார்கள்.

Natarajar
Natarajar

5 மணிக்கு யாகங்களும் பூஜையும் தொடங்கும் 6.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். இதன் பிறகு 11 மணிக்கு மேல், சம்யுக்த அபிஷேகம் நடைபெறும்.

இந்த அபிஷேகங்களைத் தரிசித்தாலே புண்ணியம் கிடைக்கும். ஒவ்வோர் அபிஷேகத்தைத் தரிசிப்பதற்கும் விசேஷித்த பலன்கள் உண்டு.

விபூதி அபிஷேகம் - ஞானம் கிடைக்கும்.

பாலாபிஷேகம் - ஆயுள் விருத்தி அடையும்.

தயிர் அபிஷேகம் - சந்ததி விருத்தி உண்டாகும்

தேன் அபிஷேகம் - நல்ல குரல் வளம் உண்டாகும்

சந்தன அபிஷேகம் - நல்ல பிறவி கிடைக்கும்

பஞ்சாமிர்த அபிஷேகம் - எதிரிகள் இருக்க மாட்டார்கள்.

நாட்டுச் சர்க்கரை அபிஷேகம் - நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

இளநீர் அபிஷேகம் - சௌக்கியமான வாழ்வை வழங்கும்.

பன்னீர் அபிஷேகம் - வாழ்க்கையில் மணம் உள்ளதாக ஆக்கும்.

பெரும்பாலும் மாசிமகமும் பௌர்ணமியும் ஒரே நாளில் வரும். இந்த முறை மாசிமகம் முதல்நாளிலும் பௌர்ணமி மறுநாளும் வருவதால் சிதம்பரத்தை தவிர, பிற இடங்களில் நாளை மாசிமகமும் தீர்த்தவாரியும் நடைபெறும்.

Natarajar
Natarajar

பக்தர்கள் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூதாதையர்களை வணங்கி பூஜைகள் செய்வார்கள். சிதம்பரத்தில் மட்டும் நாளை மறுநாள் (9.3.2020) தீர்த்தவாரி நடைபெறும். சிதம்பரத்தில் மூலவரும் உற்சவரும் ஒருவரே என்பதால் உற்சவருக்கு உற்சவராக இருக்கும் உற்சவரை எடுத்துச் சென்று தீர்த்தவாரி நிகழ்த்தி விழாவைப் பூர்த்தி செய்வார்கள். சிதம்பரத்துக்கு அருகே கிள்ளை என்னும் இடத்திலிருக்கும் கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நாளை மறுதினம் காலை நடைபெறும்.

அடுத்த கட்டுரைக்கு