Published:Updated:

கிராமக்கோயில் திருவிழாக்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

திருவிழா
திருவிழா

திருவிழாக்களை நடத்துவதில் சமீபகாலமாகக் கட்டுப்பாடுகள் என்னும் பெயரில் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் கோயில் சார்ந்தவர்கள்.

பலநூற்றாண்டுப் பாரம்பர்யம் மிக்கவை, நம் கிராமத்துக் கோயில்களும் அதன் திருவிழாக்களும். கோயில்களில் ஆண்டு முழுவதும் பூசைகள் நடைபெற்றாலும் அல்லது பூட்டியே கிடந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறையோ, இருமுறையோ கொடைவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக வெளியூர் போயிருந்தாலும் கோயில் கொடைக்குக் கண்டிப்பாக வந்துவிடுவர். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திருவிழாக்களை நடத்துவதில் சமீபகாலமாகக் கட்டுப்பாடுகள் என்னும் பெயரில் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் கோயில் சார்ந்தவர்கள்.

கூட்டம்
கூட்டம்
Vikatan

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் தன் பேட்டி ஒன்றில் திருவிழாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்னும் கோரிக்கையும் விடுத்திருக்கிறார். கிராமக் கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? திருவிழா நடத்த பொதுவாக வாங்க வேண்டிய அனுமதிகள் என்னென்ன என்று விசாரித்தோம்.

திருவிழா நெருங்குவதற்கு முன்பாக, எத்தனை நாள்கள் திருவிழா என்று குறிப்பிட்டு ஊர் எல்லைக்குட்பட்ட காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஒளி, ஒலி அமைப்புக்கான காவல்துறை அனுமதியைக் கோரும்போதே கலைநிகழ்ச்சி, சாமி ஊர்வலம், பாதுகாப்பு, அன்னதானம் அவற்றுக்கான இடம், நேரம் என அனைத்துக்கும் காவல்துறையிடம் அனுமதி வாங்கியே ஆகவேண்டும். காவல்துறை அனுமதிக்காகக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவது இல்லை. விழாவில் உணவு விருந்து நடைபெறும் என்றால் அதற்காக உணவுப் பாதுகாப்புத் துறையிடம் ரூ.15,000 ரூபாய் கட்டணம் கட்டி அனுமதி பெறவேண்டும்.

களிமண் பொம்மைகள், கரும்புத் தொட்டில்கள்... களைகட்டிய திண்டுக்கல் அகரம் முத்தாளம்மன் கோயில் திருவிழா!

கீற்றுக்கொட்டகைகள் அமைக்கக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் தீயணைப்புத் துறையிடம் தடையின்மைச் சான்றிதழ் (Non Objection Certificate) வாங்கவேண்டும். தீயணைப்பு வாகனங்களை நிறுத்துவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். ஊர்வலப்பாதைகளுக்கு வரைபடம் கொடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பாதைகளுக்கு மாற்றுப்பாதை காவல்துறை கேட்டால் அதையும் குறித்துக் கொடுத்தால்தான் அனுமதி கிடைக்கும். குறிப்பிட்ட அளவுக்குமேல் பயன்படுத்தினால் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் மின்சாரத்துக்கு ஜெனரேட்டர் வைத்துக்கொள்ளலாம். இத்தனை நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டியவை. ஆனால், இவையெல்லாம் சாத்தியமா... இவற்றால் என்னென்ன பாதிப்புகள் நிகழும்... நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன என்பதுகுறித்து கிராம பூசாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சோமசுந்தரத்திடம் பேசினோம்.

"கிராமக் கோயில்களுக்குத் திருவிழா நடைபெற்றால்தான் கிராமம் சுபிட்சமாக இருக்கும் என்பது காலங்காலமாக இருக்கும் நம்பிக்கை. கொடை நடைபெற்றால்தான் முறையாக மழை பெறமுடியும் என்று உறுதியாக நம்புகிறோம். பெரும்பாலான கிராமத் திருவிழாக்கள் இரவில்தான் தொடங்கும். விடிய விடிய அவை நடைபெறும். குறிப்பாக மகா சிவராத்திரியைத் தொடர்ந்து மூன்றாம் நாள் மயானக் கொள்ளை எனப்படுகிற விழா நடக்கும். அது இரவு 10 மணிக்குத் தொடங்கி விடியும்வரைகூட நடக்கும்

பூசாரிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம்
பூசாரிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம்

ஆனால், இரவு 10 மணிக்கு மேல் ஸ்பீக்கர் ஒலிக்க அனுமதி இல்லை. வழக்கமான பொதுக் கூட்டங்களுக்கும் கலைநிகழ்ச்சிகளுக்கும் இருக்கின்ற விதிகளைக் கோயில் திருவிழா போன்ற சமயத் தொடர்புடைய நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இவை, காலங்காலமாக நடந்து வரும் பாரம்பர்யம் மிக்க நிகழ்ச்சிகள். இந்த கிராமக் கொடை விழாக்கள் போன்றவை யாரும் தனிப்பட்டு நடத்துவது கிடையாது. கிராம மக்கள் அனைவரும் இணைந்து தங்களிடமுள்ள பணத்தையோ பொருளையோ கொடுத்துக் கூட்டு வழிபாடாகவே இதை நிகழ்த்துகின்றனர்.

காஞ்சி பரமாசார்யர்கூட அவருடைய குலதெய்வமான திருவொற்றியூர் ராஜகாளி அம்மன் கோயிலுக்குச் செல்லும்போதும் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்ய முடியாது. கோயில் முறைக்கு மீனவ கிராமத்தைச் சார்ந்தவர் பூசாரியாக இருப்பார். அவர்தான் பூசித்து பிரசாதம் வழங்குவார். அப்படிப் பாரம்பர்யக் கட்டுப்பாடுகள் உள்ள இந்த கிராமக் கோயில்களின் கொடைகளுக்குப் புதுப்புது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

சாமி
சாமி

முதல்நாள் சிவராத்திரி. அதற்கடுத்த நாள் அமாவாசை. அடுத்த மூன்றாம் நாள் பாரிவேட்டை பூஜை நடைபெறும். பெண் தெய்வத்தை பூஜித்து சந்நிதியை மூடிவிட்டு ஆண் தெய்வத்தை வழிபடும் வழக்கம். முற்காலங்களில் மதுவைப் படைத்து வழிபடுவர். இப்போது குறைந்து வருகிறது. நள்ளிரவு 12 மணிக்குமேல் 40, 50 ஆடுகளைக்கூடப் பலியிடுவார்கள். அத்தனை பேருக்கும் விடிய விடிய விருந்து நடைபெறும். சேலம் பகுதிகளில் மயானக்கொள்ளை சடங்குகள் எல்லாம் இரவுகளில்தான் நடக்கின்றன. இந்த நேரத்தில் எல்லாம் மக்களுக்கு அப்போதைய நிகழ்வுகளைத் தெரிவித்து அழைப்புவிடுக்க மைக் செட்டுகள் தேவை. ஆனால், அதைப் பயன்படுத்த அனுமதியில்லை.

விழாவுக்கு 15 நாள்கள் முன்பாகவே காப்புக்கட்டி கிராம கமிட்டியினரும் விழா நடத்துவோரும் விரதம் இருப்பார்கள். கோயிலிலேயே தங்கிச் சுத்தம்செய்து வர்ணம் தீட்டி அழகுபடுத்தித் தயார் செய்வார்கள். பொங்கல் வைத்தல், பலிகொடுத்தல், விருந்து அளித்தல் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இவற்றுக்கென வழிவழியாக இருக்கும் நிலங்களும் பாதைகளும் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதனால், இந்தச் சடங்குகளுக்கு வேறு இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலும் நேர்கிறது.

திருவிழா
திருவிழா
அரசியல் நிகழ்வுகள் பலவற்றுக்குத் திருட்டுத்தனமாக மின்சாரம் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், கோயில் திருவிழாக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் நிறைய கட்டுப்பாடுகள்.
பூசாரிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம்

கிராமக் கோயில் திருவிழாக்களுக்கு யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கின்றனர். அதைக் குறைத்திட வேண்டும். தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பர்யத்தையும் வழிபாட்டையும் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றிருப்பது கிராமத்துக் கோயில்கள்தாம். இதை நம்பியே பூசாரிகளின் வாழ்வாதாரம் உள்ளது. எனவே, திருவிழாக்களுக்கு அனுமதி வழங்குவதில் அரசு அதிகாரிகள் கெடுபிடி காட்டக்கூடாது.

கருணாநிதி முதல்வராக இருந்த சமயம் 2001-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டுக்கு வந்திருந்தார். பூசாரிகள் நலவாரியம் ஒன்றை ஏற்படுத்தினார். இப்போது அந்த வாரியம் செயல்படாத நிலையில் இருக்கிறது.

Vikatan

கிராமக் கோயில்களுக்கு வருமானமும் வெகு குறைவுதான். கொடை விழாக்களின் போது வசூலிக்கின்றனர். இவற்றைத்தவிர வேறு எந்த வருமானமும் இல்லை. பல கோயில்களில் பூசாரிகள் கூலிவேலைக்குப் போய் அதில் வரும் வருமானத்தை வைத்துதான் கோயிலில் விளக்குகேற்றுகிறார்கள். அந்தளவுக்குக் கிராமத்துக் கோயில்கள் நலிவடைந்த நிலையில் இருக்கின்றன. இந்தச் சூழலில் கிராமத்துத் திருவிழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது அவையும் நலிவடையும் அபாயம் ஏற்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு