Published:Updated:

தீபாவளி தினத்தில் புத்தாடை எதற்கு? தீபம், பலகாரம், பட்டாசு - தீபாவளி தாத்பரியங்கள்!

தீபாவளி

அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்.

தீபாவளி தினத்தில் புத்தாடை எதற்கு? தீபம், பலகாரம், பட்டாசு - தீபாவளி தாத்பரியங்கள்!

அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்.

Published:Updated:
தீபாவளி
தீபாவளியன்று அவசியம் புத்தாடை உடுத்தியே ஆகவேண்டுமா? அன்று எண்ணெய்க் குளியல் செய்வது ஏன், பலகாரங்கள் படைப்பதும் பட்டாசு வெடிப்பது எதற்காக? இதற்கெல்லாம் புராணங்கள் சொல்லும் காரணம் என்ன, தாத்பரியங்கள் என்ன தெரிந்துகொள்வோமா?

எண்ணெய் தேய்த்து நீராடுவது ஏன் தெரியுமா?

நல்லெண்ணெய்யில், மகாலட்சுமி சிறந்து திகழ்கிறாள்; நீராடப் பயன்படுத்துகிற வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் என்கின்றன சாஸ்திரங்கள்.

அன்னபூரணி
அன்னபூரணி

‘ஜலே கங்கா, தைலே லக்ஷ்மீ’ என்பார்கள். அதனால்தான், தீபாவளி நாளில், "கங்கா ஸ்நானம் ஆச்சா?’’ என்று விசாரித்துக் கொள்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடலில் இருக்கிற மாசு களைகிறது. உள்ளத்து மாசுகளையும் களைய இறை வனைப் பிரார்த்திக்கிறோம். இதனை சம்ஸ்கிருதத்தில் ‘தோஷ அபநயநம்’ என்பார்கள். அதாவது, குறைகளை நீக்குவது என்று அர்த்தம்.

புத்தாடை எதற்காக?

குறைகளைத் தள்ளி, நற்குணங்களைப் பெறுவதே புத்தாடை அணிவதன் நோக்கம்.

ஷட்தோஷா: புருஷேநேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா

நித்ரா தந்த்ரா பயம் க்ரோத: ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா

புத்தாடை
புத்தாடை

அதாவது, ‘மேன்மையை விரும்பும் மனிதனால் கைவிடப்பட வேண்டிய குணங்கள் (குறைகள்) ஆறு. அவை... உறக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல், காலந் தாழ்த்திச் செயல்படுதல்’ என்கிறது இந்த ஸ்லோகம். இந்தத் தீய குணங்களைத் தள்ளி நற்குணங்களைக் கொள்வதை மனதில் கொண்டு புத்தாடை உடுத்தி, அவரவர்களுக்குரிய சமயச் சின்னங்களை அணிவது அவசியம். நற்குணங்களை வளர்க்க, இதன் மூலம் சங்கல்பம் செய்கிறோம்.

ஏன் பட்டாசு வெடிக்கிறோம்?

பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தார். ‘என்னுடைய இறந்தநாளை அனைவரும் கொண்டாட வேண்டும்’ என நரகாசுரன், கிருஷ்ணரிடம் வேண்டினான் என்கின்றன புராணங்கள். அதனால்தான் பட்டாசு வெடித்து, தீபாவளி கொண்டாடுகிறோம்.

பட்டாசு
பட்டாசு

பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை ஆகிய தீய குணங்கள், அரக்கர்களுக்கு இணையானவை. பட்டாசைப் போல் இவை பொசுங்கி, நாம் நற்குணங்களுடன் திகழவேண்டும் என்கிற தத்துவமும் இதில் அடங்கியிருக்கிறது.

பெரியோரை வணங்குதல் அவசியம். ஏன் தெரியுமா?

தீபாவளித் திருநாளில் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, இறைவனையும் பெரியோர்களை வணங்குகிறோம். `விடிகாலையில் எழுந்து, தான் அன்று செய்ய வேண்டிய நல்லறப் பணிகளையும். ஒப்புயர்வற்ற பரம்பொருளையும் சிந்தித்து, தாய் தந்தையைத் தவறாமல் தொழ வேண்டும் என்பதே சான்றோர்கள் கண்ட வாழ்வியல் கோட்பாடு’ என்கிறது ஆசாரக் கோவை.

மகாலட்சுமி
மகாலட்சுமி

பெரியோர்களைப் பணிந்து, சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது என்பது, நம் ஆணவ - அகங்காரத்தை போக்கும்; நம்மைச் செம்மைப்படுத்தும்; ஆனந்தம் தரும்.

தீப வழிபாடு ஏன்?

ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர்.

நரகாசுரனை அழிக்க கண்ணன் சென்ற போது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர்.

அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி! இதன் காரணமாகவே தீபாவளியன்று தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம்.

தீப வழிபாடு
தீப வழிபாடு

விளக்கேற்றி வழிபடுவது இதற்காகத்தான். தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை! முற்காலங்களில், தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அப்படி வழிபடுவதே உத்தமம்!

அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம். இதன் அடிப்படையில் தீபாவளித் திருநாளில் விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடவேண்டும்.

இனிப்பு வழங்குதல் ஏன்?

தீபாவளி வழிபாடு
தீபாவளி வழிபாடு
subodhsathe

இனிப்புகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் வழங்குகிறோம். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; ஆனந்தமாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடு இது! இந்த உலகில், நாம் அழுவதற்காகப் பிறக்கவில்லை. எல்லோரும் இன்புற்று வாழ் வதற்கே பிறந்திருக்கிறோம். இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தவே, இனிப்பு வழங்குகிறோம். இந்தச் செயலால், அன்பு நிறைந்ததாக மாறிவிடும் இந்த உலகம்!