Published:Updated:

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை!

இந்த உலகில் எந்த ஊருக்கும் இல்லாத பெருமை மதுரைக்கு உண்டு. அது ஈசனே அந்த ஊரின் மண்ணைச் சுமந்தது. மாணிக்க வாசகர் சொல்கிறார், ‘கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரைமண்சுமந்து கூலிகொண்டு...’ என்று. அந்த அளவுக்கு மதுரை ஈசனின் திருவிளையாடல்களால் நிறைந்த ஊர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்

பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

விண்சுமந்த கீர்த்தி வியன்மண்டலத்து ஈசன்

கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.

- மாணிக்கவாசகர்

சிவபெருமான்
சிவபெருமான்

இந்த உலகில் எந்த ஊருக்கும் இல்லாத பெருமை மதுரைக்கு உண்டு. அது ஈசனே அந்த ஊரின் மண்ணைச் சுமந்தது. மாணிக்க வாசகர் சொல்கிறார், ‘கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரைமண்சுமந்து கூலிகொண்டு...’ என்று. அந்த அளவுக்கு மதுரை ஈசனின் திருவிளையாடல்களால் நிறைந்த ஊர். அதனால்தான் அங்கிருக்கும் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதுமே ஏதேனும் உற்சவங்கள் நடந்த வண்ணம் இருக்கும். அப்படி ஓர் உற்சவமே ஆவணி மூல உற்சவம். ஆவணி மூல உற்சவத்தில் இன்று (19/8/2021) பிட்டுத் திருவிழா நடைபெறுகிறது.

மன்னன் அரிமர்த்தன பாண்டியன் குதிரை வாங்கக் கொடுத்த செல்வங்களையெல்லாம், ஈசனுக்கு ஆலயம் அமைக்கும் பணியில் செலவிட்டார் வாதவூரார். செல்வம் அனைத்தும் தீர்ந்ததும்தான் குதிரை வாங்கக் கொடுத்த செல்வம் முழுவதும் சிவப்பணியில் செலவாகிவிட்டது நினைவுக்கு வந்தது அவருக்கு. சிவனாரைத் துதித்தார். `ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று மன்னனுக்குச் சொல்' என்று அசரீரியாக சிவனாரின் கட்டளை ஒலித்தது.

மாணிக்கவாசகரும் மதுரைக்குத் திரும்பி மன்னனிடம் விவரம் கூறினார். ஆனால், கூறியபடி குதிரைகள் வரவில்லை. மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட மாணிக்கவாசகர், சிவனாரை வேண்டிப் பிரார்த்தித்தார். அவரை ஆட்கொண்டு அருள்புரிய திருவுள்ளம் கொண்ட ஈசன், நரிகளைப் பரிகளாக மாற்றி மதுரைக்கு அனுப்பிவைத்தார். இந்தத் திருவிளையாடலே ஆவணி மூலத் திருவிழாவின் எட்டாவது நாள் காலையில் நடத்தப்படுகிறது. ஈசன் குதிரைகளை ஒப்படைத்த நாளின் இரவே மறுபடியும் நரிகளாக மாறியதுடன், ஏற்கெனவே இருந்த குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டுச் சென்றன.

இதனால் மேலும் சினம்கொண்ட பாண்டியன், மாணிக்கவாசகரை வைகை நதியின் சுடுமணலில் நிற்கவைத்து சித்ரவதை செய்தான். அடியார் பாதம் சுடுவதை ஆண்டவன் சகிப்பானா... சிவபெருமான் வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். பெருக்கெடுத்த வெள்ளம் கரைகளை உடைத்துக்கொண்டு ஊருக்குள் புகுந்தது.

பிட்டுத் திருவிழா - வைகை கரையடைக்கும் நிகழ்வு
பிட்டுத் திருவிழா - வைகை கரையடைக்கும் நிகழ்வு

உடைந்த கரைகளை அடைக்க வீட்டுக்கு ஓர் ஆள் வரவேண்டும் என்று உத்தரவிட்டான் மன்னன். மதுரையில் பிட்டு சுட்டு விற்றுப் பிழைப்புநடத்தும் கிழவி வந்தி. சிவ பக்தியில் சிறப்புற்றவள். அவளுக்குச் சொந்தமென்று சொல்லிக்கொள்ள எவருமில்லை. அவளுக்கு உதவ சோமசுந்தரப் பெருமானே கூலியாளாக வந்தியின் முன் தோன்றுகிறார். முன்னிற்பவரை முழுதுணராத கிழவி, `உதிராதவை எனக்கு, உதிர்ந்த பிட்டு உனக்கு' எனப் பங்கு பிரித்துப் பிட்டளிக்கிறாள், என்ன அதிசயம், அன்று அனைத்துப் பிட்டுகளும் உதிர்ந்தன. சரி, இது இறைவன் சங்கல்பம் என நினைத்து அனைத்தையும் கூலியாளுக்கே வழங்கினாள் வந்தி.

பரமன். வந்தி கொடுத்த பிட்டை உண்டுவிட்டு, வைகைக் கரைக்கு வந்தார். சிறிது நேரம் மண் சுமந்தார். விளையாட்டாக ஏற்கெனவே கட்டியிருந்த கரைகளை உடைத்துவிட்டார். பார்ப்பவர்கள் அவர் பித்தனோ என்று எண்ணுமளவுக்கு விளையாடிவிட்டு விட்டு கரைக்குச் சென்று உறங்கத் தொடங்கினார். பணிகளைப் பார்வையிட வந்த அரிமர்த்தன பாண்டியன் கோபம் கொண்டு, கூலியாளாக வந்த சிவபெருமானின் முதுகில் பிரம்பால் அடித்தான். அந்த அடி உலகத்து அத்தனை உயிர்களிலும் பட்டது. அனைவரும் வந்தவர் யார் என்று கண்டுகொண்டனர். மாணிக்க வாசகரின் புகழ் சரித்திரத்தில் நிலைத்தது.

மதுரையில் ஈசன் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம். அதில் ஒன்று சித்தராக வந்து கல்யானைக்குக் கரும்பூட்டியது. அந்தத் திருவிளையாடலின் தத்துவத்தை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு