Published:Updated:

வாழ்வில் இருள் நீக்கி ஒளி சேர்க்கும் தை அமாவாசை மகத்துவங்கள்... கடைப்பிடிப்பது எப்படி?

தை அமாவாசை...
தை அமாவாசை...

நாளை (24.1.2020) மகிமை நிறைந்த தை அமாவாசை தினம். இந்த நாளில் தவறாமல் செய்ய வேண்டியது நீத்தார் கடன். கடன் என்பதற்குக் கடமை என்று பொருள். இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் இந்தக் கடன் உண்டு. இதைக் கடைப்பிடிக்க நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

எல்லோரும் வாழ்வில் துன்பம் இல்லாத வாழ்க்கையையே விரும்புகிறோம். ஆனால், வாழ்க்கை அப்படியில்லை. சிலருக்கு வாழ்க்கை இன்பமயமானதாகவும் ஒரு சிலருக்குத் துன்பமயமானதாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், கடவுளை நம்புகிறவர்கள் நல்வழியில் நடப்பவர்களுக்கும் சில நேரங்களில் காரணமேயின்றித் துன்பங்கள் நிகழும். அவற்றின் மூலம் எதுவென்று ஆராய்ந்தால் அது பித்ரு தோஷமாக இருக்கும். அப்படிப் பட்ட பித்ரு தோஷத்திலிருந்து விடுபட நமக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பே அமாவாசை தின பித்ரு வழிபாடு. அதிலும் உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை மிகவும் அதிக பலன் தரக்கூடியது.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

எவை எவை புண்ணியகாலங்கள்?

ஓர் ஆண்டில் வழிபாடு செய்து பயன்பெறத் தகுந்த புண்ணிய காலங்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டின் தொடக்கமான சித்திரை முதல்நாள், ஆடிமாதப் பிறப்பு, ஐப்பசி மாதப் பிறப்பு, தை மாதப் பிறப்பு மற்றும் அனைத்து அமாவாசை தினங்களும் புண்ணிய காலங்கள். அனைத்து அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம் என்றபோதும் ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசைகள் மிகவும் முக்கியமானவை. ஒருவேளை அனைத்து அமாவாசைகளிலும் வழிபாடு செய்ய இயலாதவர்களாக இருந்தால் தவறாமல் இந்த மூன்று அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாட்டைச் செய்ய வேண்டியது அவசியம். காரணம் இந்த மாதத்தில்தான் பித்ருக்களின் வருகையும் புறப்பாடும் நிகழும்.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதா?

தீராத தொல்லை, காரியங்களில் தடை, சுபநிகழ்ச்சிகளில் தடை என்று கண்ணாலும் அறிவாலும் அறியமுடியாத தடைகள் வாழ்வில் ஏற்படுகிறபோது நாம் நம் ஜாதகங்களோடு ஜோதிடரை அணுகி அதன் காரணங்களை அறிய முயல்வோம். அப்படி அணுகும் பலருக்கும் ஜோதிடர்கள் சொல்லும் பதில் தீர்வு இரண்டாக இருக்கும். ஒன்று. குல தெய்வ வழிபாடு செய்வது மற்றொன்று பித்ரு வழிபாடு செய்வது. ஒரு ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் அதை அறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்ய வேண்டும். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம் என்கிறார்கள். மேலும் ஜாதகத்தில் சூரியனோ, சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும். லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5-ம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். இப்படி ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல இருக்கும் தீர்வு அமாவாசை தினங்களில் செய்ய வேண்டிய பித்ரு வழிபாடு.

அமாவாசை
அமாவாசை

ஏன் தை அமாவாசை முக்கியம்?

தை அமாவாசை அன்றுதான் அன்னை அபிராமி அபிராமிப் பட்டருக்காக வானில் இருள் நீக்கி ஒளி சேர்த்தாள். எனவே, தை அமாவாசை நாளில் அம்பிகையை வழிபட நம் வாழ்வில் சூழ்ந்திருக்கும் துன்ப இருள் நீங்கி இன்ப ஒளி சூழும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் இறைவழிபாட்டோடு பித்ரு வழிபாடும் செய்வது மிகவும் அவசியம். ஆடிமாத அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்துக்குப் புறப்படுகிறார்கள். இரண்டு மாதப் பயணத்தில் புரட்டாசி மாதம் அவர்கள் பூமிக்கு வந்து சேர்கிறார்கள். புரட்டாசிமாதம் முன்னோர்கள் பூமியில் உறையும்காலம். அதனால்தான் அந்த மாதத்தைப் புனிதமான மாதமாகக் கருதிக் கடைப்பிடிக்கிறோம். உத்தராயண புண்ணியகாலமான தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கியிருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்லமுறையில் போற்றி அனுப்புவோமோ அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளைச் செய்து வழிபட்டு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

கடன் பிரச்னைகளைத் தீர்க்கும் நீத்தார் கடன் வழிபாடு

நீத்தார் கடன் செய்வது சிறப்பு வழிபாடு அல்ல. அது கடமை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை. இதைச் செய்தால் பலன்கள் பல கிடைக்கும் என்பது உண்மைதான். நன்றாக வாழ்கிறோம், நமக்கு எதற்கு இவை என்று யாரும் ஒதுக்கித் தள்ளக்கூடாது. காரணம் நாம் இன்று அனுபவிக்கும் நற்பலன்களுக்குக் காரணம் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியம். அதை நாம் நம் பிள்ளைகளும் பெற்றுப் பலனடைய அதைத் தொடர வேண்டும். மரம் வைத்தவன் ஒருவன் பலன் அனுபவிப்பவன் வேறொருவன் என்பதுபோல பெற்றோர்கள் செய்யும் நற்பயன் பிள்ளைகளுக்குக் கட்டாயம் வந்துசேரும். ஒருவேளை எனக்குதான் மரம் இருக்கிறதே என்று புதிதாக மரத்தை நடுவதை நிறுத்திவிட்டால் அடுத்த சந்ததிக்கு மரங்கள் இருக்காது. அதுபோலத்தான் புண்ணிய காரியங்களும்.

தர்ப்பணம்
தர்ப்பணம்

தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்ருகள் நற்கதியை அடைவதும் திருப்தி அடைவதுமட்டுமல்ல... நம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். குறிப்பாக, கடன் பிரச்னைகளிலிருந்து வெளியேறலாம். கடன் என்றால் கடமை என்றும் பொருள். நாம் நம் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடனை அடைத்துவிட்டால் நமக்கு உள்ள கடன்கள் தானாக அடையும். பெரிய பாறைகளையும் சிறிய நெம்புகோல் கொண்டு புரட்டிவிட முடியும் என்பதுபோல பெரிய பிரச்னைகளையும் சிறிய செயல்கள் மூலம் தீர்க்க முடியும் என்பதுவே நம் முன்னோர்களின் நம்பிக்கை.

எளிய எள்... பெரிய பலன்...

முன்னோர்களுக்கான வழிபாடு என்பது செலவுபிடிக்கும் வழிபாடு அல்ல. வசதியானவர்கள் தங்களின் மனதின் விருப்பத்துக்கு ஏற்ப செலவு செய்து அவற்றை நிறைவேற்றலாம். அவ்வாறு இல்லாதவர்கள் குறைந்தபட்சம் எளிய சில வழிபாடுகளைக் கடைப்பிடித்தால் போதும். அவற்றில் ஒன்று எள் கொண்டு திருப்தி செய்வது. எள்ளும் நீரும் இறைத்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தருவதன் மூலம் மிகவும் எளிமையான முறையில் நிறைவாக இந்த சடங்குகளைச் செய்யலாம். துளசி இலைகளைப் பரித்து முன்னோர் படங்களுக்கு சமர்ப்பிக்கலாம். வீட்டில் செய்யும் உணவை நாம் உண்பதற்கு முன்பாக மிகச் சிறிய அளவு எடுத்து அதில் எள் சேர்த்து காகத்துக்கு வைக்கலாம். நம்மைவிட எளியவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்யலாம். பசியிலிருப்பவர்களுக்கு உணவு தர முடிந்தால் மிகவும் விசேஷம். தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமமும் என்பது முன்னோர்கள் வாக்கு என்றாலும் தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள முடிந்தால் அது மிகவும் உயர்ந்தது.

திருச்செந்தூர
திருச்செந்தூர

வழிபாடு செய்ய உகந்த புண்ணியத் தலங்கள்

ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில், கருங்குளம், அகரம், பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம் என்று தமிழகமெங்கும் பல்வேறு திருத்தலங்களில் தை அமாவாசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இங்கு செல்ல இயலாதவர்கள் அருகிலிருக்கும் நீர் நிலைகளுக்குச் சென்று இந்த வழிபாட்டைச் செய்து பயன் பெறலாம்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சியும் நாளை (24.1.2020) நடைபெறுகிறது. சனிபகவானுக்குரிய தானியம் எள். தர்ப்பணம் முதலியவற்றில் எள் பயன்பாடு கட்டாயம் உண்டு. எனவே, இன்று தர்ப்பணம் செய்வதோடு ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து சனிபகவானின் அருளையும் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு