Published:Updated:

தைப்பொங்கல் முதல் மகர சங்கராநதிவரை... அருள் தரும் வழிபாடுகளும் அற்புதப் பலன்களும்!

தைப்பொங்கல்
தைப்பொங்கல்

உத்தராயன காலத்தைப் புண்ணியகாலம் என்பர். தேவர்களின் பகல்பொழுது இந்த உத்தராயனகாலம். இந்தக் காலத்தில் செய்யும் செயல்கள் அனைத்தும் பலன்தரும். எனவேதான் இந்த நாளில் பொங்கலிட்டு வழிபடும் வழக்கம் இந்தியா முழுவதும் உள்ளது.

தமிழர் திருநாள்களில் தனித்துவமானது பொங்கல். இந்தத் திருநாளுக்கு சாதி, இன, மொழி பேதங்கள் இல்லை. உழவுக்குடிகளின் சமூகம் இருக்கும் அனைத்து நிலங்களிலும் இத்தகைய அறுவடைத் திருநாள் கொண்டாடப்படும். பொதுவாக பிற விழாக்களுக்குத் தீட்டு உண்டு என்பர். ஆனால், பொங்கலுக்கு பிறப்பு, இறப்புத் தீட்டுகள் கணக்கில்லை என்கின்றனர் சமூகவியல் ஆய்வாளர்கள். தற்காலத்திலும் நெல்லை மாவட்டத்தில், காலையில் வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால்கூட பகல்பொழுதுக்குள் அதை முடித்துவிட்டு மாலையில் பொங்கல்வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது என்கிறார் நாட்டுப்புற ஆய்வாளர் தொ.பரமசிவன்.

அறுவடைத் திருநாள்
அறுவடைத் திருநாள்

ஏன் பொங்கலுக்கு இவ்வளவு முக்கியத்துவம்? பிற திருவிழாக்களில் எல்லாம் நாம் வேண்டுதல்களை முன்வைப்போம். இந்தத் திருவிழாவோ வேண்டுதல்களுக்கானது அல்ல, நன்றி சொல்வதற்கானது. அதுவும் உலகுக்கு உணவை வழங்கி அது உயிரோடு இயங்கக் காரணமான சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாள். எனவேதான் மக்கள் இந்த விழாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர்.

நவகிரகங்களில் ஒருவராகப் போற்றப்படும் சூரிய பகவான், சிவனின் வடிவமாகவும் போற்றப்படுபவர். தினமும் நம் கண்ணால் காணமுடிகிற இறைவன் சூரியன். சூரியன் குறித்த பல்வேறு தகவல்களை நம் மரபின் சாஸ்திரங்களும் வேதங்களும் புராணங்களும் தெரிவிக்கின்றன. ஜோதிடத்தின்படி சூரியன் மாதம் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்வார். அவர் ஒருமுறை 12 ராசிகளிலும் சஞ்சாரம் செய்துமுடித்தால் அதுவே ஓர் ஆண்டு என்கின்றனர். அப்படி அவர் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கும் நாளே தைத்திருநாள். அதனால் இந்த மாதத்துக்கும் மகர மாதம் என்றே பெயராயிற்று.

சூரிய வழிபாடு
சூரிய வழிபாடு
மகாராஷ்டிரத்தில் பொங்கலன்று, இரு நபர்கள் சந்தித்தால், பரஸ்பரம் வண்ண தானியங்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.

சூரியன் சிவபெருமானின் வடிவம் ஆதலால் அவரை வழிபட தை முதல்நாள் உகந்தது என்கின்றனர். இந்த நாளுக்கு மகர சங்கராந்தி என்று பெயர். இந்த நாளில் இந்தியா முழுவதும் உள்ள புண்ணிய நதிகளில் நீராடும் மரபு நெடுங்காலமாக உள்ளது. அவ்வாறு நீராடினால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இந்த தை முதல்நாள் முதல் சூரியன் தட்சிணாயனம் என்னும் தன் தென்திசைப் பயணத்தை முடித்துக்கொண்டு உத்தராயனம் என்னும் வடதிசைப் பயணத்தைத் தொடங்குகிறார். உத்திராயன காலத்தைப் புண்ணியகாலம் என்பர். தேவர்களின் பகல்பொழுது இந்த உத்தராயனகாலம். இந்தக் காலத்தில் செய்யும் செயல்கள் அனைத்தும் பலன்தரும். எனவேதான் இந்த நாளில் பொங்கலிட்டு வழிபடும் வழக்கம் இந்தியா முழுவதும் உள்ளது.

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல்

அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ‘போகாலி பிஹு’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருவோருக்கு கரும்புத் துண்டுகள் மற்றும் வெற்றிலை பாக்கை ஒரு தட்டில் வைத்துக்கொடுத்து ஆசீர்வதிப்பர்.

மகாராஷ்டிரத்தில் பொங்கலன்று, இரு நபர்கள் சந்தித்தால், பரஸ்பரம் வண்ண தானியங்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.

சிவனும் தைப்பொங்கலும்
சிவனும் தைப்பொங்கலும்

மராட்டியர்களும் நம்மைப் போலவே பொங்கல் திருநாளை மூன்று நாள்கள் கொண்டாடுகிறார்கள். அப்போது மராட்டியர்கள் எள்ளுருண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். `பவுஷ்' எனப்படும் தை மாதம் குளிராக இருக்கும். அதனால் உடலுக்குச் சூடு அளிக்கும் எள்ளைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.

முதல் நாள் : போகிப் பண்டிகை அன்று மராட்டியர்கள் எள் சேர்த்து கேப்பை மாவில் ரொட்டியுடன் காய்கறிக் கூட்டும் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்த பின் சாப்பிடுகிறார்கள்.

இரண்டாம் நாள்: சங்கராந்தி அன்று வெல்லம் சேர்த்து எள்ளுருண்டை செய்கிறார்கள். கூடவே ஏதாவது ஓர் இனிப்பும் செய்து பழம், கரும்பு ஆகியவற்றைப் படைக்கிறார்கள். எல்லோருக்கும் எள்ளுருண்டை கொடுக்கிறார்கள். மனிதர்கள் சமாதானமாக இருக்க உறுதி எடுக்கிறார்கள்.

மூன்றாம் நாள்: கிங்கராந்தி அன்று வடை செய்து நிவேதனம் செய்கிறார்கள். மராட்டிய மக்கள் பொங்கலின்போது பெண்களுக்கு குங்குமம் மற்றும் எள்ளுருண்டை வழங்குவது வழக்கம். அப்போது `தித்திப்பாகப் பேசு, சண்டை போடாதே!’ என்று வயதுமுதிர்ந்த பெண்கள் இளம்பெண்களுக்கு உபதேசம் செய்வார்கள்.

பொங்கி வழியும் பால் எந்தப் பக்கம் வழிந்தது என்பதை வைத்து அந்த ஆண்டு எப்படியிருக்கும் என்று சொல்வதுண்டு. குறிப்பாக கிழக்கு அல்லது வடக்குப் பக்கம் பால் பொங்கினால் வரும் நாள்கள் மிகவும் உற்சாகமாகவும் செல்வச் செழிப்போடும் இருக்கும் என்பது ஐதிகம்.
சூரிய பகவான்
சூரிய பகவான்

ஜப்பானில் பொங்கலோ பொங்கல்

நம் நாட்டில் மட்டுமல்ல, ஆசியாவின் பல நாடுகளிலும் இந்த வழக்கம் இருக்கிறது. உதாரணமாக ஜப்பானில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாம், `பொங்கலோ பொங்கல்!’ என்பதுபோல், ஜப்பானியர் `ஹங்கரோ ஹங்கரோ’ என்று குரல் எழுப்புவர் என்கிறார்கள். நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதுபோல ஜப்பானில் `குதிரைப் பொங்கல்’ கொண்டாடுகிறார்கள். அன்று குதிரையை அலங்கரித்து, மலர் மாலைகள் சூட்டி, இனிப்பு கொடுத்து போற்றுகிறார்கள். பொங்கலுக்கு முதல்நாள், கடந்த ஆண்டின் அதிர்ஷ்ட சீட்டைக் கொளுத்தும் திருவிழாவான டோண்டோ யாகி (Dondo Yaki) என்னும் போகி போன்ற ஒரு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு வாசல் மூட மறுவாசல் திறக்கும் உத்தராயனம்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் மொழி. மார்கழி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் செய்யும் வழக்கம் இல்லை. மாறாக தை மாதம் தொடங்கியதும் முகூர்த்த தினங்களும் வரத் தொடங்கிவிடும். அதை அறிவிக்கும்விதமாக கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறும்.

ஒரு சில ஆலயங்களில் கருவறைக்கு இரு வாசல்கள் உண்டு. தேர்போன்ற அமைப்பில் அமைந்த கருவறைகளில் இருக்கும் இரண்டு வாசல்களில் ஒன்று உத்தராயன வாசல் என்றும் மற்றொன்றை தட்சிணாயன வாசல் என்று அழைப்பர். தை முதல்நாள் தட்சிணாயன வாசலை மூடி உத்தராயன வாசலைத் திறந்துவைப்பர். இந்த வைபவம் கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயிலிலும் திருவெள்ளறை புண்டரீகாக்ஷப் பெருமாள் (செந்தாமரைக் கண்ணன்) கோயிலிலும் விமரிசையாக நடைபெறும். இந்த நாளில் பெருமாளை சேவிக்க துன்பங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

சூரியன்
சூரியன்
பொங்கலுக்கு பிறப்பு, இறப்புத் தீட்டுகள் கணக்கில்லை. தற்காலத்திலும் நெல்லைமாவட்டத்தில், காலையில் வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால்கூட பகல்பொழுதுக்குள் அதை முடித்துவிட்டு மாலையில் பொங்கல்வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.''
நாட்டுப்புற ஆய்வாளர் தொ.பரமசிவன்.

மகர சங்கராந்தி நாளில் சங்கரனை வழிபடுவது எப்படி?

இந்த நாளில் புதுப் பானையை அலங்கரித்து மங்கலத்தின் அடையாளமான மஞ்சள்கொத்துகளைக் கட்டி அதில் பால்விட்டு வைக்க வேண்டும். பால் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று சொல்லி அதை சிறிது வழிய விட வேண்டும். பொங்கி வழியும் பால் எந்தப் பக்கம் வழிந்தது என்பதை வைத்து அந்த ஆண்டு எப்படியிருக்கும் என்று சொல்வதுண்டு. குறிப்பாக கிழக்கு அல்லது வடக்குப் பக்கம் பால் பொங்கினால் வரும் நாள்கள் மிகவும் உற்சாகமாகவும் செல்வச் செழிப்போடும் இருக்கும் என்பது ஐதிகம். பால் பொங்கியதும் அதில் அரிசியிட்டுப் பொங்கல் வைக்க வேண்டும்.

பொங்கல், கரும்பு, பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியனவற்றை சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். கற்பூர ஆரத்தி எடுத்து சூரியனுக்குக் காட்டி வணங்க வேண்டும்.

மகாசங்கராந்தி நாளில் நெய்யில் வறுத்த எள்ளால் தீபமேற்றி, சிவபெருமானை வழிபடும் வழக்கமும் உண்டு. இதற்கு ‘மகா தீப விரதம்’ என்று பெயர். இதை மேற்கொள்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் மற்றுமொரு விரதம், மகாவர்த்தி விரதம். இந்த விரதத்தின்போது விளக்கில் பசு நெய் நிரப்பி சிவபெருமானுக்கு தீப வழிபாடு செய்ய வேண்டும்.

மகர சங்கராந்தியின் அதிகாலையில், `இந்திரோபேந்திர சகித சூரிய நாராயணாம் பூஜயாமி’ என்று சூரியனை பூஜிக்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். `சூரியனுக்கு உரிய காயத்ரி மந்திர விழாவே மகர சங்கராந்தி' என்பது பீஷ்மர் வாக்கு. இத்தகைய சிறப்புகளையுடைய இந்தப் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு