Published:Updated:

சக்தி விகடன் சார்பில் திருவடிசூலத்தில் குரு பெயர்ச்சிப் பரிகார சிறப்பு ஹோமம்!

குரு பகவான்
குரு பகவான்

ஸ்ரீவாரு வேங்கடாசலபதி திருக்கோயிலில் அமைந்துள்ள ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் சந்நிதியில் குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம் நடைபெறவிருக்கிறது.

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி 11-ம் தேதி - திங்கட்கிழமை, 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திர தினத்தில், குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறார்.

Gurupeyarchi homam
Gurupeyarchi homam

கிரகங்களில் முழு சுபகிரகமான குரு பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் ஒரு வருட காலத்தில் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் உரிய பரிகார வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். இதன் மூலம், இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் தடைகள் மற்றும் சிரமங்களைத் தவிர்த்து முன்னேற்றம் காணலாம். மற்ற ராசிக்காரர்களும் குரு பகவானுக்கான சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு வழிபட்டால், அவரது பரிபூரண அருளைப் பெற்று சிறக்கலாம்.

அந்த வகையில் வாசகர்களின் நன்மைக்காக சக்தி விகடன் சார்பில், குருப்பெயர்ச்சி தினத்தில் (29.10.19 செவ்வாய்), பரிகார மகா ஹோமம் சாஸ்திரோக்தமான முறையில் மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

திருவடிசூலம் அருள்மிகு சப்தசைலஜ ஸ்ரீவாரு வேங்கடாசலபதி கோயில்
திருவடிசூலம் அருள்மிகு சப்தசைலஜ ஸ்ரீவாரு வேங்கடாசலபதி கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம், திருவடிசூலம் என்ற தலத்தில் அமைந்திருக்கும், அருள்மிகு சப்தசைலஜ ஸ்ரீவாரு வேங்கடாசலபதி கோயிலின் அருகிலுள்ள, ஆதிபரமேஸ்வரிதேவி ஸ்ரீகருமாரியம்மன் திருக்கோயிலில் இந்தச் சிறப்புப் பரிகார ஹோமம் நடைபெறவிருக்கிறது.

நவகிரக நாயகி அம்பாளின் க்ஷேத்திரத்தில் நடைபெறும் இந்தப் பரிகார ஹோமம், சிறப்பான பலன்களைப் பெற்றுத்தரும். மேலும், குரு பகவானின் அதிதேவதை பிரம்மா. அவர், திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியவர்.

Ambal karumariyamman
Ambal karumariyamman

ஆக, அன்றைய தினம் திருமால் தரிசனமும் வழிபாடும் பன்மடங்கு பலன்களைப் பெற்றுத் தரும். அந்த வகையில் 108 திவ்ய தேச பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பும், சிறப்பு வழிபாடும் வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன.

ஆம்! திருவடி சூலத்தில் 108 திவ்ய தேச சந்நிதிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது, ஸ்ரீவாரு வேங்கடாசலபதி திருக்கோயில்.

ஸ்ரீவாரு வேங்கடாசலபதி
ஸ்ரீவாரு வேங்கடாசலபதி

திருநெல்வேலியில் அமைந்த திவ்யதேசமான ஆழ்வார் திருநகரியை குரு பகவானுக்கு உரிய பரிகார க்ஷேத்திரமாகப் போற்றுகின்றன ஞான நூல்கள். அந்த வகையில், ஸ்ரீவாரு வேங்கடாசலபதி திருக்கோயிலில் அமைந்துள்ள ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் சந்நிதியில் குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம் நடைபெறவிருக்கிறது. இந்தப் பரிகார ஹோமத்தில் கலந்துகொள்ளும் வாசகர்களுக்காகச் சிறப்பு சங்கல்பமும் விசேஷ ஆராதனையும் நடைபெறவுள்ளன.

ஆலயச் சிறப்புகள் :

பகவான் நாராயணன், அர்ச்சாவதாரக் கோலத்தில் எழுந்தருளி இருக்கும் எண்ணற்ற திருத்தலங்களில், ஆழ்வார்களால் பாடப்பட்ட திருத்தலங்கள், திவ்யதேசங்கள் என்று பிரசித்திபெற்று விளங்குகின்றன. அவை அனைத்தையும் ஒருங்கேகொண்டு திகழ்கிறது, செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள திருவடிசூலம் எனும் க்ஷேத்திரத்தில் சப்தசைலஜ ஸ்ரீவாரு வேங்கடாசலபதி திருக்கோயில்.

இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே ஞானசம்பந்தர் பாடி, வணங்கிய மிகப் பழைமையான திருஇடைச்சுரநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

`பலம் சேர்ப்பாரா குரு பகவான்?’

பசுமைமிகு மலைகள் சூழ, மிகவும் விசாலமான பரப்பளவில் அமைந்திருக்கிறது, வேங்கடவனின் திருக்கோயில். ஆலய முகப்பில் மிகப் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறார் தசாவதார மூர்த்தி. உள்ளே இரு புறங்களிலும் கருடனும் ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டுள்ளார்கள்.

சோழநாட்டுத் திருப்பதிகள், பாண்டிய நாட்டுத் திருப்பதிகள், நடுநாடு, தொண்டநாடு, மலைநாடு மற்றும் வடநாட்டுத் திருப்பதிகளுடன், நிலவுலகில் தரிசிக்க முடியாத திருப்பாற்கடல், திருவைகுண்டம் ஆகிய சந்நிதிகளும் 108 திவ்யதேச சந்நிதிகள் கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ளன.

திருமலையில் ஏழுமலைகளின் நாயகனாக அருளும் திருவேங்கடவனே இந்த க்ஷேத்திரத்தின் நாயகனுமாய்த் திகழ்கிறார்.

Gurupeyarchi homam
Gurupeyarchi homam

இந்தக் கோயிலின் அருகிலேயே, அண்ணனின் ஆலயத்துக்கு இணையான எழிலோடு திகழ்கிறது, மாயோனின் சகோதரியாம் ஆதிபரமேஸ்வரிதேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயில். கேட்ட வரத்தை கேட்டபடி அருளும் வரப் பிரசாதியாய் அருள்கிறாள் அம்பிகை.

நீங்களும், குருப்பெயர்ச்சி பரிகார ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். குருபகவானின் அதிதேவதையாம் பிரம்மனுக்குத் தந்தையான திருமாலின் - ஸ்ரீவாரு வேங்கடேச பெருமாளின் திருவருளால், திருமலை `திருப்பதி தரிசன' புண்ணியத்தையும், நவகிரக நாயகியாம் ஆதிபரமேஸ்வரிதேவி ஸ்ரீகருமாரியம்மனின் திருவருளையும், குரு பகவானின் கடாட்சத்தையும் பெற்றுச் செல்லுங்கள்.

Gurupeyarchi homam
Gurupeyarchi homam

எப்படிச் செல்வது?

செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் வழியில் 6 கி.மீ தொலைவில் உள்ளது திருவடிசூலம். இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் ஸ்ரீவாரு வேங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீகருமாரியம்மன் கோயில்களுக்குச் செல்ல ஷேர் ஆட்டோ வசதி உண்டு. செங்கல்பட்டு மற்றும் திருப்போரூரிலிருந்து திருவடிசூலத்துக்கு பேருந்து வசதி உண்டு.

அடுத்த கட்டுரைக்கு