Published:Updated:

7 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த திருப்பதி பிரம்மோற்சவம்... சில சுவாரஸ்யத் தகவல்கள்!

கருடசேவைக்கு வந்தது போலவே பக்தர்களின் கூட்டம் திருமலைத் தேரோட்டத்தின்போதும் பெரிய அளவில் கூடியிருந்தது. நான்கு மாட வீதிகளிலும் ஜனத்திரள் சமுத்திரமாக விரிந்திருந்தது.

திருப்பதி
திருப்பதி

திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி வைகாநஸ ஆகம விதிமுறைகளின்படி, வேங்கடேசப் பெருமாளுக்குத் தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இன்று சக்கரஸ்நான நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Tirupati
Tirupati

பிரம்மோற்சவத்தின் இறுதிநாள் நிகழ்ச்சியான இந்த விழா திருமலையில் கோயிலுக்கு அருகே இருக்கும் சுவாமி புஷ்கரணியில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கியமான ஹைலைட்ஸ்:

* ஒன்பது நாள்கள் நடைபெற்ற பிரமோற்சவ நிகழ்ச்சியில் 7 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருமலை முழுவதும் பூலோக வைகுண்டம்போல் காட்சி அளித்தது. வண்ண மலர்கள், வண்ணக் கோலங்கள், வண்ண விளக்குகள் என ஒளிவெள்ளமும் உற்சாகத்துள்ளலுமாய் நிகழ்ந்து முடிந்தது.

Tirupati
Tirupati

* பிரமோற்சவம் நடைபெறும் நாள்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுவதற்கு முன்பாகப் பல்வேறு கலை நிகழ்ச்சிக் குழுக்கள், புராண இதிகாச கால நிகழ்ச்சிகளைப் பாடிக்கொண்டே நடனமாடினார்கள். இது பக்தர்களின் கண்களுக்கும் மனதுக்கும் பெரிய விருந்தாக அமைந்திருந்தது.

* கருடசேவை நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர், மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், அஸ்ஸாம், ஒடிசா உட்பட 18 மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

* நடனம் நாட்டியம் மாறுவேட நிகழ்ச்சிகள் என இவற்றில் 677 கலைஞர்கள் பங்கேற்று விழாவுக்குக் கூடுதல் சிறப்பு சேர்த்தனர். இவர்களில் 110 கலைஞர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

* பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சாம்பார் சாதம் பொங்கல், உப்புமா, கேசரி ஆகிய உணவு வகைகளும் பால், நீர் மோர் போன்ற பானங்களும் வழங்கப்பட்டன. பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது அன்னதானம் வழங்குவதற்காக 1.3 லட்சம் கிலோ காய்கறிகள் பயன்படுத்தப்பட்டன.

Tirupati
Tirupati
பெருமாளுக்கு எந்த நாள், எந்த வாகனம், என்ன பலன்? - களைகட்டுகிறது திருப்பதி பிரம்மோற்சவம்!

* கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்ற ஒருநாளில் மட்டும் 2 லட்சம் புளியோதரை உணவுப் பொட்டலங்களும் ஒன்றரை லட்சம் தக்காளி சாதம், சாம்பார் சாதம் உணவுப் பொட்டலங்களும் 8,000 ரவா உப்புமா பொட்டலங்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

உணவு வகைகளைத் தயாரிக்க அன்று மட்டும் (4-ம் தேதி) 32,500 கிலோ அரிசியும் 20,000 கிலோ காய்கறிகளும் பயன்படுத்தப்பட்டன. 20,000 லிட்டர் பால் காய்ச்சப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

* 1,500 ஶ்ரீவாரி சேவகர்கள் பக்தர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் சிறப்பாகச் செய்தனர். 935 ஶ்ரீவாரி சேவகர்கள் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவு வகைகள் ஆகியற்றை இரவு பகல் பாராமல் வழங்கினர். 610 சேவகர்கள் பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து தந்தனர்.

Tirupati
Tirupati

* 1,500 ஶ்ரீவாரி சேவகர்கள் திருமலையின் முக்கிய பகுதிகளான சி.ஆர்.ஓ ஆபீஸ், லெபாக்ஸி, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பாலாஜி பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு உதவிகரமாக இருந்து பல உதவிகளைச் செய்தனர்.

* சனிக்கிழமையன்று தங்கரதத்தில் மலைப்பசுவாமி ஶ்ரீதேவி பூதேவி சமேதகராகப் பவனி வந்தது காண்போர் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணமிருந்தது. 32 அடி உயரமும் 29 டன் எடையுமுள்ள தங்கரதம் மாலை வானத்தின் சூரிய ஒளியில் தகதகவென ஜொலித்தது.

Tirupati
Tirupati

* கருடசேவைக்கு வந்தது போலவே பக்தர்களின் கூட்டம் திருமலைத் தேரோட்டத்தின்போதும் பெரிய அளவில் கூடியிருந்தது. நான்கு மாட வீதிகளிலும் ஜனத்திரள் சமுத்திரமாக விரிந்திருந்தது

* பிரம்மோற்சவத்தின்போது 9 நாள்களில் 16 வகையான வாகனங்களில் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் பவனி வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

பிரம்மோற்சவ நிகழ்ச்சிக்காக 50,000 வகையான வண்ண மலர்களை டன் கணக்கில் 34 நன்கொடையாளர்கள் பொறுப்பேற்று காணிக்கையாக வழங்கினர்.

Tirupati
Tirupati

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் யாவற்றையும் எஸ்.வி.பி.சி சேனல் 32 கேமராக்களின் உதவியுடன் நேரடியாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பியது.