Published:Updated:

பெருமைமிகு வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை வழிபடுவது எப்படி? #Video

ரங்கநாதர்
ரங்கநாதர்

‘தங்களுக்கு மார்கழிமாத வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்ட வாசலைத் திறந்தருளியதுபோல பெருமாள் கோயில்களில் இந்த நாளில் சொர்க்க வாசலைக் கடக்கிறவர்களுக்கும் வைகுண்ட வாசலைத் திறந்தருள வேண்டும் என்றும் அந்த நாள் ஒரு உற்சவமாகக் கொண்டாடப்பட வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டனர் அசுரர்கள்.

வைகுண்ட ஏகாதசியின் பயன்கள் சொல்லிலடங்காதன. பெருமாள் கோயில்களில் வருடத்தில் ஒருமுறை திறக்கப்படும் பரமபத வாயிலின் படியை நாம் தாண்டிச் சென்று பெருமாளை சேவிக்கிறபோது அன்றுவரை நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வருங்காலத்துக்குத் தேவையான ஆற்றலும் வளமும் கிடைப்பதோடு இந்த உலக வாழ்வுக்குப் பின் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை தரும் வைகுண்டப் பிராப்தியும் கிடைக்கும். இத்தகைய பாக்கியம் நமக்குக் கிடைக்கக் காரணம் மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள். அசுரர்களால் எப்படி இந்த உத்தமமான விரதம் நமக்குக் கிடைத்தது?

ரங்கநாதர்
ரங்கநாதர்

ஏகாதசி தோன்றினாள்

திதிகளில் பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி திதி. வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் ஏகாதசி திதிகள் சிறப்புமிக்கவை. முன்னொருகாலத்தில் வாழ்ந்த முரன் என்னும் அசுரன் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்திவந்தான். தேவர்கள் வேண்டிக்கொண்டதனால் மகாவிஷ்ணு முரனோடும் அவன் படைகளோடும் போரிட்டார். முரனின் படைகள் அனைத்தும் முற்றிலும் அழிந்தன. முரன் திருந்த ஒரு வாய்ப்பை நல்க விரும்பிய பெருமாள் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சென்று ஒரு குகையில் சயனம் கொண்டார்.

ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத முரன் பெருமாளை வீழ்த்த வந்தான். அப்போது சயனித்துக்கொண்டிருந்த பெருமாளிடமிருந்து ஆயுதம் தாங்கிய பெண் தேவதை ஒருத்தி வெளிப்பட்டாள். அவள் முரனை தன் ஹூங்காரத்தினாலேயே சம்ஹாரம் செய்தாள். அப்போது கண்விழித்த பெருமாள் அவளை ஏகாதசி என்று பெயரிட்டு அழைத்தார். அவள் தோன்றிய நாள் தனக்கு உகந்தது என்றும் அன்று தன்னை விரதமிருந்து வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும் என்றும் வரமளித்தார்.

வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி

மது - கைடபர் வேண்டிக்கொண்ட உற்சவம்

பிரம்மாவின் அகங்காரத்தை அழிக்கத் தோன்றிய மது - கைடபர் ஆகிய அசுரர்கள் தேவர்கள், முனிவர்கள் என அனைவருக்கும் தொல்லைகொடுத்தனர். அவர்களை அழிக்க விஷ்ணு ஒருமாதம் தொடர்ந்து போரிட்டார். பின்பு அவர்களை சம்ஹாரம் செய்தார். ஆனால் அவர்கள் விஷ்ணுவிடம் பெற்ற வரத்தின் காரணமாக வைகுண்டப் பதவியை அடைந்தனர். அப்படி அவர்கள் பரம பத வாசலை அடைந்தநாள் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி. அன்று பெருமாள் அவர்களுக்காக வைகுண்ட வாசலைத் திறந்தருளினார். பெருமாளைச் சரணடைந்த அசுரர்கள், ‘தங்களுக்கு மார்கழிமாத வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்ட வாசலைத் திறந்தருளியதுபோல பெருமாள் கோயில்களில் இந்த நாளில் சொர்க்க வாசலைக் கடக்கிறவர்களுக்கும் வைகுண்ட வாசலைத் திறந்தருள வேண்டும் என்றும் அந்த நாள் ஒரு உற்சவமாகக் கொண்டாடப்பட வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டனர். பெருமாளும் அதற்கு இசைந்தார். அந்த ஏகாதசி திதியே வைகுண்ட ஏகாதசி எனப்போற்றப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம் - அறிந்துகொள்ளவேண்டிய அற்புத தகவல்கள் #Spiritual

Posted by Vikatan EMagazine on Saturday, January 4, 2020
ரங்கநாதர்
ரங்கநாதர்
தென்னிந்தியாவின் வைகுண்டம், 1000 ஆண்டு வரலாறு... திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்!

விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு ஏகாதசியுமே சிறப்புவாய்ந்தது. அதிலும் வைகுண்ட ஏகாதசி கூடுதல் நற்பலன்களைத் தரக்கூடியது. இந்த நாளில் கட்டாயம் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். வைகுண்ட ஏகாதசி அன்று இரவு கண்விழித்து அதிகாலையில் பெருமாள் பரமபத வாசலின் வழியாக எழுந்தருள்வதைக் காணவேண்டும். இரவெல்லாம் பெருமாளின் நாம ஜபத்தை சொல்லிக் கொண்டு விழித்திருக்க வேண்டுமே தவிர பிற பொழுதுபோக்குகளில் நேரம் செலவழிக்கக் கூடாது. பொதுவாகவே ஏகாதசி திதி அன்று அரிசி உணவைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முதியவர்கள் தவிர மற்றவர்கள் விரதமிருந்து வழிபட்டால் அடுத்து வரும் ஓராண்டு ஏற்படும் கெடுபலன்களைத் தடுத்து நற்பலன்களை அருள்வார் பெருமாள். பெருமாளுக்கு உகந்த துளசி தீர்த்தத்தை மட்டுமே இந்த நாளில் அருந்தலாம்.

வைகுண்ட ஏகாதசிக்கு ஏன் விரதமிருக்க வேண்டும்... அவற்றின் பலன்கள் என்ன... என்று அனந்தபத்மநாப சுவாமிகளிடம் கேட்டோம்.

"நம்முள் இருக்கும் கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் எனப்படும் இந்திரியங்கள் பத்து. மனதோடு சேர்த்து பதினொன்று. இவை தொடர்ந்து பதினைந்து நாள்கள் இயங்குகின்றன. இந்த 11 விஷயங்களையும் கட்டுப்படுத்தி அவற்றைச் சிந்தனை அளவிலும் உடலளவிலும் ஓய்வு கொடுக்கும் நாளாக திதிகளில் 11 வதாக வரும் ஏகாதசி திதி விளங்குகிறது. அந்தப் பதினோறாவதுநாளிதான் பாபதேவதை முழு அரிசிச் சோற்றில் வந்து அமர்ந்துகொள்கிறாள் என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே இன்று உபவாசம் இருந்து பெருமாளை வேண்டிக்கொள்வது விசேஷம். முடியாதவர்கள் முழு அரிசி உணவை உட்கொள்ளாமல் உடைந்த அரிசியைக் கொண்டு செய்யப்படும் உணவுகள், பலகாரங்களை உண்ணலாம்.

ரங்கநாதர்
ரங்கநாதர்

வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் வடக்கு நோக்கிய பரமபத வாசலின் வழியாக எழுந்தருள்வார். மார்கழிக்கு அடுத்துவரப்போகிற மகர சங்கராந்தி, அதாவது சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் உத்தராயணப் புண்யகாலத்தின் தொடக்கம். எனவே பெருமாள் இந்தப் பரமபத வாசலில் எழுந்தருள்வதை தரிசிக்க நம் பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதிகம்" என்று குறிப்பிட்டார்.

இத்தகைய சிறப்பு மிக்க வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை வழிபட்டு நம் பாவங்கள் நீங்கப் பெறுவதோடு வாழ்வில் பல நலமும் வளமும் பெற்று வாழலாம்.

திருமலை திருப்பதியில் ஜனவரி 6, 7 வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் விவரம்! #Tirupaty
அடுத்த கட்டுரைக்கு