Published:Updated:

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி... விரத முறைகள், வழிபாடுகள்!

மூலிகை லிங்கம்
மூலிகை லிங்கம்

சிவராத்திரி இரவில்தான் இந்தப் பிரபஞ்சமே லிங்க வடிவம் கொண்ட தோற்றமாய் உணரமுடியும். அந்தப் பிரபஞ்சப் பெருவெளிக்குள் நாமும் இருக்கிறோம் என்கிற நினைப்பே சிவனோடு கலந்திருக்கிறோம் என்கிற பேருணர்வை நமக்கு உண்டாக்கும்.

திரயோதசி, சதுர்த்தசி ஆகிய இரண்டு திதிகளுமே விசேஷமானவை. திரயோதசி, அன்னை பார்வதியின் வடிவம். சதுர்த்தசி, சிவபெருமானின் வடிவம் என்கின்றன புராணங்கள். மகாபிரளய காலத்துக்குப் பின் சிவபெருமானுள் அன்னை உமாதேவி ஒடுங்கி நின்ற தினமே மகாசிவராத்திரி. அன்னை, இந்தப் பிரபஞ்சத்தின் சக்தி. ஐயன், இந்தப் பிரபஞ்சப் பெருவெளி. இரண்டும் இணைந்து அருளிய தினம் என்பதே சிவராத்திரியின் பொருள். சிவமும் சக்தியும் இணைந்து அருளும் தினம் என்பதாலேயே, இந்த தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் வழிபடுவதன்மூலம் வேண்டும் வரங்களைப் பெற முடியும். இதற்கு புராணங்களில் பல்வேறு நிகழ்வுகள் சான்றுகளாகக் கூறப்படுகின்றன.

சிவபெருமான்
சிவபெருமான்

வேதத்தின் மையம்

வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை என்றாலும், அவை இறை வடிவங்களே என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வேதத்துக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. நான்கு வேதங்களில் நடுநாயகமாகத் திகழும் வேத பாகம், யஜுர்வேத ஶ்ரீ ருத்ரம். அந்த ஶ்ரீ ருத்ரத்திலும் மத்தியில் இருக்கும் சொல், 'சிவ' என்பது. இந்த சிவ என்னும் வார்த்தையைச் சொல்ல, சகல வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். எளிதில் அனைவராலும் சொல்ல முடிகிற மந்திரம், சிவ மந்திரம். அந்த சிவ மந்திரத்தைத் தவறாமல் உச்சரிக்கவேண்டிய தினம், சிவராத்திரி.

இந்த உலகில் நன்மை தீமைகளைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஒரே பலன்தான். தெரியாமல் செய்ததனால் நமக்கு வரவேண்டிய நன்மை தீமைகள் வராமல் போகாது. அதுதான் சிவராத்திரி மகிமை நமக்குச் சொல்லும் பாடம். 

குரங்கு ஒன்று வில்வ மரத்தின் மீதமர்ந்து இரவு முழுவதும் இலைகளைப் பிய்த்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. இலைகள் விழுந்த இடத்தில் இறைவனின் லிங்கத் திருமேனி. அன்றைய இரவு மகாசிவராத்திரி. விடியும் வேளையில் அறியாமல் செய்த வில்வார்ச்சனைக்கு இறைவன், குரங்கை மறுபிறவியில் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார். சக்கரவர்த்தியாய் பிறந்தவரே முசுகுந்த சக்கரவர்த்தி.

மாசி மாத சிவராத்திரி
மாசி மாத சிவராத்திரி

தனக்கு வாய்த்த வரத்தை அறிந்ததும் முசுகுந்தர் வேண்டிக்கொண்டது என்ன தெரியுமா... அறியாமல் சிவபூஜை செய்த குரங்குக்கே இறைவன் இவ்வளவு பெரிய பதவியை அருள்வார் என்றால், அறிந்தே சிவபூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் எவ்வளவு இருக்கும் என்று இந்த உலகம் அறிந்துகொள்ள, "சக்கரவர்த்தியாய் பிறந்தாலும் தன் குரங்குமுகம் மாறக்கூடாது" என்று வேண்டிக்கொண்டார்.

அதனால்தான், நன்மைகளை அறியாமல் செய்தால்கூட நன்மையே உண்டாகும் என்கின்றனர் பெரியோர்கள். சிவராத்திரி நாளை அறியாமல், உயிருக்குப் பயந்து மரத்திலேறிய வேடன், கீழே விழுந்துவிடக்கூடாது என்று இரவெல்லாம் விழித்திருந்து இலைகளைப் பறித்துப் போடுகிறான். அதுவே சிவார்ச்சனை ஆனது. அதன் பலனாக, அவன் மறுபிறவியில் ராமனையே தோழனாகக்கொள்ளும் குகப் பதவியை அடைந்தான்.

மாத ராசிபலன்

இவையெல்லாம் நமக்குத் தெரிவிக்கும் செய்திகள் இரண்டு. 

ஒன்று: இரவெல்லாம் விழித்திருப்பது               

இரண்டு: இறைவனை வழிபடுவது.

விரத முறைகள்

சிவராத்திரி அன்று, காலை முதலே சிவ நாம ஜபம் செய்ய வேண்டும். குளித்து முடித்து, ஆலயம் சென்று இறைவனை வழிபட வேண்டும். வீடு திரும்பி அன்றாடப் பணிகளை முடித்து, மாலை மீண்டும் குளித்து வழிபடத் தயாராக வேண்டும். அன்றைய நாளில், நான்கு காலமும் பூஜைகளைச் செய்ய வேண்டும். தனியாக வீட்டில் ஷணிக (தற்காலிக) லிங்கம் கொண்டு வழிபாடு செய்ய இயலாதவர்கள், ஆலயத்துக்குச் சென்று நான்கு கால பூஜைகளையும் கண்டு வணங்கலாம்.

ஒவ்வொரு காலத்துக்கும் வழிபடவேண்டிய மூர்த்தங்கள், பூஜைப் பொருள்கள், நைவேத்தியங்கள் ஆகியனவற்றை ஆகமங்களில் வகுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலத்துக்கான பூஜை தரிசனத்துக்கும் ஒவ்வொரு விசேஷித்த பலன் உண்டு.

மகாசிவராத்திரி நான்கு கால பூஜை - மூர்த்தம் முதல் பத்ரம்வரை அறிந்துகொள்ள... 

ருத்ர பாராயணமும் சிவ புராணமும்

சிவராத்திரி இரவில் ருத்ர ஜபம் செய்யவேண்டியது அவசியம். ருத்ர ஜபம் சிவனுக்குரிய பிரத்யேக ஜபம். சிவபெருமானின் கல்யாண குணங்களை விளக்கும் ஸ்லோகம். தினமும் வேத பாராயணம் செய்யும் கடமை உள்ளவர்கள், குறைந்தபட்சம் ருத்ர ஜபமாவது செய்ய வேண்டும் என்பது விதி. வேத பாராயணம் செய்யும் விதி இல்லாதவர்கள், சிவபுராணம் சொல்லலாம். 'நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என்று தொடங்கும் சிவபுராணம், வேதத்தின் சுருக்கமாகக் கூறப்படுகிறது.

இந்த உலகில் உள்ள சகலவிதமான உயிரினங்களாகவும் பிறக்கும் ஜீவாத்மா, இறைவனை அடையும் பரிணாம வளர்ச்சியைச் சொல்லி, பிறவியின் பெரும் துயரைச் சொல்லி, 'இறைவா உன் திருவடி கண்டதால், நான் இப்போது வீடுபேறு உற்றேன்' என்னும் சிவபுராண வரிகளை நாம் மனம் உணர்ந்து பாடும்போது, உண்மையிலேயே சிவனருளும் சிவதரிசனமும் பரிபூரணமாகக் கிடைக்கும்.    

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

சிவராத்திரி தரிசன அனுபவம்

 மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும். மாசிமாதம் பனிக்காலத்தின் முடிவிலும் வெயில்காலத்தின் வாசலிலும் நிற்கும் காலம். இரவில்தான் இந்தப் பிரபஞ்சமே லிங்க வடிவம் கொண்ட தோற்றத்தை உணரமுடியும். அந்தப் பிரபஞ்சப் பெருவெளிக்குள் நாமும் இருக்கிறோம் என்கிற நினைப்பே சிவனோடு கலந்திருக்கிறோம் என்கிற பேருணர்வை நமக்கு உண்டாக்கும். மேலும், மற்ற நாள்களின் இரவில் உணவு, உறக்கம், இன்பம் என்று களிக்கும் மனித மனம், இந்த நாளில் சிவ சிந்தனையிலேயே செலவிடும். சிவபெருமானுக்கு நிகழும் அபிஷேகங்களைக் காணும்போது மனம் மகிழ்ச்சியில் துள்ளும். இந்த மகிழ்ச்சி, அடுத்த ஓராண்டு முழுவதும் மனமெல்லாம் நிறைந்திருக்கும். நாலு கால பூஜைகளிலும் கலந்துகொண்டு இறைவனை வணங்க வேண்டும். அப்போது, வேண்டும் வரம் கட்டாயம் கிடைக்கும் என்பது அடியவர்களின் வாக்கு.

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

கட்டாயம் செய்ய வேண்டியவை:

சிவ தரிசனம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வில்வ இலைகளையாவது சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கண்விழித்து சிவ நாம ஜபம் செய்ய வேண்டும். தவறாமல் நான்கு காலமும் சிவபுராணம் படிக்க வேண்டும். இவை நான்கையும் செய்ய, வேண்டிய வரங்கள் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நான்கு கால பூஜைகளுக்குரிய அபிஷேக திரவியங்களைக் கொஞ்சமேனும் வழங்கினால் வறுமை அகலும். வஸ்திரம் வழங்கினால், கேட்கும் வரம் கிடைக்கும். தூப தீப கைங்கரியத்துக்கு உதவினால், சகல விதமான செல்வங்களும் சேரும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு