Election bannerElection banner
Published:Updated:

தீபத் திருநாளில் அவசியம் படிக்கவேண்டிய அற்புதப் பதிகங்கள்!

மலை மீது ஏற்றபட்ட மகா தீபம்
மலை மீது ஏற்றபட்ட மகா தீபம்

தீபத் திருநாளில் அவசியம் படிக்கவேண்டிய அற்புதப் பதிகங்கள்!

ஒளி வடிவாக எழுந்த ஈசனை தீபமேற்றி வழிபடும் திருநாளே கார்த்திகை தீபத் திருவிழா. இந்நாளில் புற இருள் அகற்றும் தீபங்களை மட்டுமின்றி அக இருள் அகற்றும் பஞ்சாட்சர மந்திரங்களையும் உச்சரித்து அருள் பெறுவது அவசியம். பஞ்சாட்சரத்தை விடவும் மேலான புண்ணியம் தரும் நமது திருமுறை பதிகங்களைப் பாடுவது சாலச் சிறந்தது. அதில் தீபத்தின் பெருமை சொல்லும் 3 பதிகங்களில் ஒவ்வொரு பாடலை மட்டுமே இங்கு பொருளோடு கவனிப்போம். குறைந்த பட்சம் இந்த 3 பாடல்களை மட்டுமாவது தீப நாளில் படித்தோ பாடியோ ஈசனை வழிபட்டால் நிச்சயம் உங்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள இருள் யாவும் விலகும் என்பது நிச்சயம்.

திருவண்ணாமலை பதிகம் திருஞானசம்பந்தர் அருளியது.

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

உண்ணாமுலை எனும் உமையம்மையாரோடு எழுந்தருளியவரும், தம் இடது பாகம் முழுவதும் பெண்ணுருவாகி நம் ஈசனது மலை முழுதும் அழகிய மணிகள் சுடர்விட, மலையிருந்து வீழும் அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும். இத்தனை சிறப்புமிக்க திருவண்ணாமலையைத் தொழுவார் வினைகள் தவறாமல் அறும் என்கிறார் சம்பந்தர் பெருமான்.

நமசிவாய பதிகம் திருநாவுக்கரசர் அருளியது.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

இல்லத்தினுள் ஏற்றும் விளக்கானது இருளைக் கெடுப்பது, அதாவது ஒளி கொடுப்பது. சொல்லினுள் உள்ள நல்ல கருத்தான விளக்கானது ஜோதி வடிவில் வழி கொடுப்பது. பல்லோரும் காணக்கூடிய வானக விளக்கானது காட்சியைக் கொடுப்பது. இந்த மூன்று விளக்குகளையும் விட சிறப்பான 'நமசிவாய' எனும் மந்திர விளக்கே ஈசனை அடைய உதவுவது. எனவே நமசிவாய என்று நாளும் பொழுதும் ஓதச் சொல்கிறார் அப்பர் பெருமான்.

திருவிசைப்பா திருமாளிகைத் தேவர் அருளியது.

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

விளக்கமே சொல்ல வேண்டாதவாறு எளிமையாக ஈசனைப் போற்றும் இந்த பாடலில், ஈசன் ஒளி மிக்க விளக்காகவும், திரள் மணிக் குன்றாகவும், தேனாகவும், ஆனந்தக் தனியாகவும் விளங்குகின்றான். அவனை வியந்து போற்றும்படியான அறிவை அறிவாகிய நீயே அருள்வாய் என்கிறார் மாளிகைத் தேவர்.

மிகச் சிறப்பான இந்த பாடல்களை பாபநாசம் சகோதரிகள் நெக்குருகிப் பாடுகிறார்கள்...கேட்டு மகிழுங்கள்!பாடகிகளின் விவரங்கள் - இசையும் நாட்டியமும் இறைவனைத் தொழுவதற்கான மகிழ்ச்சியான முறை என்று வாழும் இருவரில் மூத்தவர் பெயர் சிவஜெகதீஸ்வரி; இளையவர் பெயர் சிவஸ்ரீலக்ஷிதா; இவர்களின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பாபநாசம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு