Published:Updated:

`கேட்ட வரம் அளிக்கும் முத்தாரம்மன்!'- வேடமணிந்த பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கும் குலசை

காளி வேடமணிந்த பக்தர்
காளி வேடமணிந்த பக்தர்

உலகப் புகழ் பெற்ற குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து வேடமணிந்து குலசையில் குவிந்து வருகிறார்கள். இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 8-ம் தேதி நள்ளிரவு கடற்கரையில் நடைபெற உள்ளது. வேடமணிந்த பக்தர்களின் வருகையால் குலுங்குகிறது குலசை.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. `நவராத்திரி' என்றாலே தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு `குலசை’தான் நினைவுக்கு வரும். தூத்துக்குடி மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களில் உள்ள மக்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி 10 நாள்கள் விரதமிருந்தும், வேடமணிந்தும் தசராவில் கலந்துகொள்வார்கள்.

ஆக்ரோஷத்தில் கருங்காளி வேடமிட்ட பக்தர்
ஆக்ரோஷத்தில் கருங்காளி வேடமிட்ட பக்தர்

இத்திருவிழாவின் 10-ம் நாள் திருவிழாவான மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண மாநிலம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் குலசையில் குவிந்துவிடுவார்கள். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசேகரன்பட்டினம். இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.

Vikatan

பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் `குலசேகரன்பட்டினம்’ என அழைக்கப்பட்டது. மக்களுக்கு முத்து (அம்மை) போட்டதை ஆற்றி (இறக்கி) எடுத்து காப்பாற்றியதால் `முத்து+ஆற்று+ அம்மன்' என்றாகி, `முத்தாரம்மன்’ என பெயர் ஆனது. சாதாரண ஒரு தெருக் கோயிலாக இருந்து, இன்று பிரசித்தி பெற்ற திருக்கோயிலாக சிறப்பு பெற்று வளர்ச்சி பெற்றுள்ளதற்கு காரணம் அம்பாளின் மீதுள்ள பக்தர்களின் நம்பிக்கைதான்.

காளி வேடமணிந்த பக்தர்கள்
காளி வேடமணிந்த பக்தர்கள்

அம்மை இறங்குவதற்காக மட்டும் இந்த முத்தாரம்மை அருள் புரியவில்லை. கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்னை… என சகல துன்பங்களையும் நீக்கி வரமருள்வதால்தான் விரதமிருந்து வேடமணிந்து அம்பிகையின் அருளைப் பெற வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

56 ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்து காளி வேடமிடும் உடன்குடியைச் சேர்ந்த பக்தர் வேல்காளியிடம் பேசினோம், `` எனக்குச் சொந்த ஊரே உடன்குடிதான். இப்போ 72 வயசு ஆகுது. 8 வயசா இருக்கும்போது எங்க அம்மா எனக்கு ராஜா வேடம் போட்டு குலசைக்கு கூட்டிட்டு வந்தாங்க. 12 வயசு வரைக்கும் ராஜா வேடம்தான் போட்டு கோயிலுக்கு வந்தேன். 13வது வயசுல எனக்கு அம்மை போட்டு, அம்மையோட அதிக காய்ச்சலும் வந்து உடல்நிலை ரொம்ப மோசமாகி உயிர் போகுற நிலைமையில இருந்தேன். ``எம்பிள்ளையக் காப்பாத்திக் கொடு தாயே..! என் மவன் ஆயுசு இருக்குற வரைக்கும் தசராவுக்கு மாலை போட்டு காளி வேடம் கட்டி ஆடி வருவான்னு’’ சொல்லி அம்பாளை மனசுல நினைச்சு எனக்கு விபூதி பூசி விட்டாங்க.

அம்மன் வேடமணியும்  பக்தர்
அம்மன் வேடமணியும் பக்தர்

அடுத்தடுத்த நாள்களிலேயே அம்மை முழுவதுமா இறங்கி, உடம்பு தேறிடுச்சு. அந்த வருஷத்துல இருந்து இப்போ வரைக்கும் காளி வேடம் போட்டுத்தான் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசனம் செய்துட்டு இருக்கேன். என் உயிரை முத்தாரம்மா காப்பாற்றியதுனால நான் கல்யாணம் செஞ்சுக்காம அம்பாளுக்கு அடிமையானதுமாதிரி இப்போ வரைக்கும் சாமியாராத்தான் இருக்கேன்” என்றார்.

விரதமுறை, வேடம் அணிவது குறித்து சில பக்தர்களிடம் பேசினோம், ``காளி வேடம் போடுறவங்க 41 நாள் விரதம் இருப்பாங்க. மற்ற வேடம் போடுறவங்க தசரா திருவிழா கொடியேறிய நாளில் இருந்து மாலை போட்டு 10 நாள் விரதம் கடைப்பிடிச்சு அவரவர் நேர்த்திக்கடனாக நினைச்ச வேடத்தைப் போடுவார்கள். இந்த விரத நாள்கள்ல ஒரு நேரம் மட்டும் பச்சரிசி சாதம் சாப்பிடுவாங்க. மற்ற நேரங்களில் பாலும், பழமும்தான். கொடியேறிய முதல் நாளில் மாலை போட்ட பிறகுதான் வேடம் போடக்கூடிய பெட்டியை கீழே இறக்குவோம். இருக்குறதுலயே காளி வேடம்தான் பெரிய வேடம். முதல்ல முகத்துக்கு பவுடர், சாயம் பூசி அடுத்ததா சேலை கட்டி ஜடை முடியை தலையில் கட்டி, தலைக்கு கிரீடம் வச்சு கண்ணுக்கு வெள்ளி கண்மலர் பூட்டி, வாயில் வெள்ளி வீரப்பல் வைத்து கடைசியாக காலுக்கு சலங்கை கட்டுவார்கள்.

வேடமணிந்து செல்லும் பக்தர்கள்
வேடமணிந்து செல்லும் பக்தர்கள்

கையில் திரிசூலம் ஏந்தி வீட்டில் அம்பாளுக்கு பூஜை செய்து தெருக்கள், பஜார்களில் தர்மம் எடுத்து, அந்தக் காணிக்கையை உண்டியலில் போடுவார்கள். அந்தந்த ஊர்க்கோயில்களில் ஓலைக்குடிசை அமைச்சோ அல்லது அந்தந்த தெருக்களில் ஓர் இடத்தில் ஓலைக்குடிசை அமைச்சோ அதில் முத்தாரம்மன் திருவுருவப்படத்தை வைச்சு தசராவுக்கு மாலை போடும் பக்தர்கள் கூடி 10 நாள்களும் தினசரி பஜனையுடன் கூடிய பூஜைகளைச் செய்வார்கள். பொதுவாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர் குலசைக்கு மாலை போட்டு வேடம் போட்டுவந்த பக்தர்களாகத்தான் இருப்பாங்க.

முதல்முறை மாலை போடும் பக்தர்கள் பலவருசஷமா கோயிலுக்கு தொடர்ந்து மாலை போட்டுவரும் குருசாமியிடம் கேட்பார்கள். அம்பாளிடம் வாக்கு கேட்டு அம்பாள் என்ன வேடம் போடச் சொல்கிறாளோ அந்த வேடத்தைப் போட்டு தர்மம் எடுத்து கோயிலுக்கு வருகிறார்கள் பக்தர்கள். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அம்பாளுக்கு நேர்ந்துகொண்ட வேடம் அல்லது குருசாமிகள் வாக்கு சொன்ன வேடம் போட்டு 7 வீடு, 11 வீடு, 21 வீடு, 51 வீடு என தங்கள் என்னப்படி அத்தனை வீடுகளில் தட்டு ஏந்தி தர்மம் எடுக்க வேண்டும்

கோயிலுக்குச் செல்லும் வேடமணிந்த பக்தர்கள்
கோயிலுக்குச் செல்லும் வேடமணிந்த பக்தர்கள்

குறவன், குறத்தி, அம்மன், ராஜா, ராணி, லெட்சுமி, விநாயகர், காளி, சிவன், பார்வதி, ராமர் , லெட்சுமணர், அனுமர், கிழவி, கிழவன், போலீஸ், பிச்சைக்காரன், பெண் வேடம்… எனப் பல வகை வேடங்களை பக்தர்கள் போட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்’’ என்றனர். மனமுறுகி வேண்டிக்கொண்டு தசாரா திருவிழாவில் மாலை போட்டு வேடமணிந்து முத்தாரம்மனை தரிசித்தால் அடுத்த ஆண்டு தசராவுக்குள் பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

அடுத்த கட்டுரைக்கு