Published:Updated:

`பிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை!

முத்துக்குமரன் மு

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆவணிமூலத்திருவிழாவையொட்டி இன்று புட்டுத் திருவிழா நடைபெறுகிறது

Madurai
Madurai

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆவணிமூலத்திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகின்றது. மொத்தம் 18 நாள்கள் நடைபெறும் இந்த ஆவணிமூலத் திருவிழாவில் முதல் 6 நாள்கள் சந்திரசேகரர் உற்சவம் நடைபெறும். அடுத்த 12 நாள்களும் சொக்கநாதப்  பெருமான் ஆவணிமூலவீதிகளில் எழுந்தருளித் திருவுலாக் காண்பார்.

Madurai
Madurai

இந்தத் திருவிழாவின்போது ஒவ்வொருநாளும் ஒவ்வொரு திருவிளையாடல் நிகழ்த்திக் காட்டப்படும். அந்த வரிசையில் இன்று `பிட்டுக்கு மண்சுமந்த லீலை’யை நிகழ்த்துவதற்காக சொக்கநாதப் பெருமான் வைகைக்கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்புக்கு எழுந்தருளுகிறார்.

திருவிழாவின் ஒருபகுதியாகத் திருவாதவூரில் மாணிக்கவாசகர் புறப்பாடு நடைபெறும். அதன்படி ஆதவூரிலிருந்து சனிக்கிழமை காலையில் புறப்பட்ட மணிவாசகப்பெருமான்  நேற்று மாலைப்பொழுதில் மதுரைக்கோயிலுக்கு எழுந்தருளினார்.

நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண்சுமந்தது ஆகிய லீலைகளை நடத்திட பாண்டிய மன்னனாகத் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் மதுரைக்கு எழுந்துள்ளார்.

Madurai
Madurai

விழாவின் 14-ம் நாளான நேற்று நரியைப் பரியாக்கிய லீலை வடக்காடிவீதி கிழக்காடிவீதி சந்திப்பில் நடைபெற்றது. லீலையைப் பட்டர்கள் கதையாக நிகழ்த்திக் காண்பித்தனர். திருவிழாவின் பெருநிகழ்வான புட்டுத்திருவிழாவுக்காக இன்று அதிகாலை பஞ்சமூர்த்திகள் புறப்பட்டருளினர். மதுரைக்கோயிலில் வெள்ளி சிம்மாசனங்களில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகள் அதிகாலை 5 மணியளவில் புறப்பாடு கண்டனர். இதையொட்டித் திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. இன்றைய திருநாள் முடிவடைந்து உற்சவர்கள் மதுரைக் கோயிலை அடையும் வரையிலும் திருக்கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும்.

உற்சவர்கள் வைகை தென்கரையோரம் திருவீதியுலாவாகப் புட்டுத்தோப்பை அடைவார்கள். வைகையிலிருந்து ஏற்கெனவே மண் எடுத்துவந்து பூஜித்து அங்கே தயாராய் வைக்கப்பட்டிருக்கும்.

சுவாமிக்குரிய உக்கிரபாண்டிய வகையறா பட்டர்கள், அலங்கரிக்கப்பட்ட யானையின்மீது ராஜமரியாதையோடு அழைத்துவரப்படுவர். அவர்கள்தாம் `பிட்டுக்கு மண்சுமந்த லீலை’யை நிகழ்த்திக்காட்டுவார்கள். அப்போது, பூஜிக்கப்பட்ட அந்த வைகை திருமண்ணைத் தன் தலையில் ஏந்தியவராய் சொக்கர்பெருமான் காட்சிதந்தருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த லீலையைத்தொடர்ந்து, உற்சவர்கள் பக்தர்களுக்காகக் காட்சியளிப்பர். அந்தக்கரையெங்கிலும் பிட்டுப்பிரசாதம் விற்கப்படும்.

Madurai
Madurai

திருநாள் உற்சவம் நிறைவடைந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும், வெள்ளிக்குதிரை வாகனங்களில் முருகர், மாணிக்கவாசகர் ஆகியோரும் புறப்பட்டு இரவில் மதுரைக்கோயிலுக்கு எழுந்தருளுவர். 18-ம் நாள் தீர்த்தவாரி முடிவடைந்ததும் மணிவாசகப்பெருமானும், முருகப்பெருமானும் தத்தம் இருப்பிடத்துக்குப் புறப்பாடு கண்டருளுவர்.

திருப்பரங்குன்றத்து முருகக் கடவுள் மீனாட்சிக்கோயிலுக்கு சித்திரைத் திருவிழா மற்றும் ஆவணிமூலத்திருவிழா ஆகிய இரு விழாக்களின்போதும் எழுந்தருள்வது வழக்கம். அதேபோன்று பங்குனி உத்திரத்திருவிழாவின்போது மதுரை இறைவனும் இறைவியும் திருப்பரங்குன்றத்துக்குச் செல்வார்கள்.