Published:Updated:

கொரோனாவால் இவ்வாண்டும் திருவிழா இல்லை… ஏங்கவைக்கும் சித்திரை விழா நினைவுகள்! - 1

சித்திரை விழா

தேரோட்டத்தன்று மாசி வீதிகளும் மக்கள் வெள்ளத்தில் திளைக்கும். அடிக்கிற வெயிலே இத்தனை கூட்டத்தைக் கண்டு மண்டை காய்ந்துவிடும். தேரடிக்கருப்பனிடம் வழிபாடு முடித்து தேர் கீழமாசிவீதியிலிருந்து கிளம்புகிறது. இளவட்டங்கள் தேர்வடம் பிடித்து உற்சாகமாக இழுத்து வருவார்கள்.

கொரோனாவால் இவ்வாண்டும் திருவிழா இல்லை… ஏங்கவைக்கும் சித்திரை விழா நினைவுகள்! - 1

தேரோட்டத்தன்று மாசி வீதிகளும் மக்கள் வெள்ளத்தில் திளைக்கும். அடிக்கிற வெயிலே இத்தனை கூட்டத்தைக் கண்டு மண்டை காய்ந்துவிடும். தேரடிக்கருப்பனிடம் வழிபாடு முடித்து தேர் கீழமாசிவீதியிலிருந்து கிளம்புகிறது. இளவட்டங்கள் தேர்வடம் பிடித்து உற்சாகமாக இழுத்து வருவார்கள்.

Published:Updated:
சித்திரை விழா
எல்லா ஊரிலும் திருவிழா என்றாலே கொண்டாட்டந்தான். அதுவும் நம்ம திருவிழாக்களின் தலைநகரில் சித்திரைத் திருவிழா என்றால் பெருங்கொண்டாட்டந்தான். மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேறியதிலிருந்து அழகர் மலைக்குத் திரும்பும்வரை மதுரையே கோலாகலமாயிருக்கும். மதுரை சித்திரைத் திருவிழாவை ‘திருவிழாக்களின் திருவிழா’ என்றால் அது மிகையாகாது.

மாசி மாதத்தில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையும், சித்திரை மாதத்தில் தேனூருக்கருகில் வைகையில் இறங்கி கொண்டிருந்த அழகர் திருவிழாவையும் ஒருங்கிணைத்து சைவ வைணவ பிணைப்பை ஏற்படுத்திய பெருமை திருமலைநாயக்கரையே சேரும். மக்கள் இந்தத் திருவிழாக்கள் ஒருங்கிணைந்ததை தங்கள் கதைகள் மூலம் மேலும் ஒன்று சேர்த்துவிட்டனர். தங்கை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு அழகர் வருவதாகவும் அவர் வருமுன்னே கல்யாணம் முடிந்துவிட்டதால் கோவித்துக்கொண்டு ஆற்றில் இறங்கி வண்டியூருக்கு தன் காதலி துளுக்கநாச்சியார் வீட்டிற்கு சென்றுவிடுவதாகவும் கதைகளைப் புனைந்துவிட்டனர். அந்தக்கதை இன்றளவும் மாறாமல் சுற்றிச்சுற்றி புழங்கிவருகிறது.

தேரோடும் வீதிகளில் ஊர்கூடும் திருவிழா

சித்திரை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேறுவதுடன் திருவிழா தொடங்கும். அம்மையும், அப்பனும் காலையும், மாலையும் வீதியுலா வருவார்கள். கோயிலில் கொடியேறியதிலிருந்து கற்பகவிருட்சம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்கக்குதிரை, ரிஷப வாகனம், நந்தி வாகனம், யாளி வாகனம், வெள்ளியானை, பூப்பல்லக்கு, திருத்தேர் என தினந்தோறும் ஒரு வாகனத்தில் பிரியாவிடையுடன் சொக்கநாதரும், தனியாக மீனாட்சியம்மனும் வீதியுலா வருவர். இதில் தேரோட்டத்தன்று மாலை தேர்த்தடம் பார்க்க வரும் சப்தாவர்ணசப்பரத்தில் மட்டுமே மீனாட்சியம்மன் சொக்கநாதர் மற்றும் பிரியாவிடையுடன் இணைந்து வருவார்.

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்

எத்தனை ஊர்கள் மதுரை போல அழகான வீதியமைப்பைக் கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை. மதுரை வீதிகளின் அழகைச் சொல்லி மாளாது. அதுவும் சித்திரைத் திருவிழாக் காலங்களில் ஒவ்வொரு வீதியும் பேரழகு கொண்டு விடுகிறது. தினந்தோறும் மாலை வேளைகளில் சாமி பார்க்க மக்கள் திரளாக மாசிவீதிகளில் கூடுவார்கள். பெண்கள் மல்லிகைப் பூச்சூடி தங்கள் வீட்டு விசேஷம் போல அலங்காரத்துடன் வருவார்கள். பெண்பிள்ளைகள் பட்டுப்பாவடையோடு, பூச்சூடி வருவதைக் காணும்போது மீனாட்சியம்மனே வீதிகளில் பல்வேறு உருவெடுத்து வலம் வருவது போலிருக்கும். பெண்கள்தான் திருவிழாவை வண்ணமயமாக்குகின்றனர். தினந்தோறும் பார்த்தாலும் சலிக்காமல் மறுநாள் அந்த வாகனத்தில் பார்க்க வேண்டும், இந்த வாகனத்தில் பார்க்க வேண்டுமென மக்கள் வேடிக்கைப் பார்க்க மகிழ்ச்சியோடு கிளம்பி வருவார்கள்.

மாசி வீதிகளில் உள்ள கடைக்காரர்கள் மாலை வேளையில் கடையின் முன்னுள்ள வாசல் தெளித்து கோலமிட்டு பலகையில் விளக்கு ஏற்றி, சாமி வருவதை தேங்காய் பழத்தோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சாமி பார்க்க வருபவர்கள் கடைகளின் முன்னால் உள்ள வெளியில் அமர்ந்து விடுவார்கள்.

சாமி ஊர்வலத்திற்கு முன்பாக அம்மன் சன்னதியிலிருந்து இளந்தலைமுறையின் கலைநிகழ்ச்சிகளோடு ஊர்வலம் கிளம்பும். பட்டுப்பாவாடைகளை சரசரக்க கோலடிப்பவர்கள், கரகக்குடத்தை தலையில் வைத்து ஆடுபவர்கள், தோளில் இருபுறமும் மாலையணிந்து கையில் வண்ணத்துணிகளை கையில் சுழற்றி ஒயிலாடுபவர்கள், கொக்கின் கால்களைப் போல பெரிதாக கட்டைக்கால் கட்டி ஊரையே நிமிர்ந்து பார்க்க வைக்கும் கொக்கலிக் கட்டைக்காரர்கள், முகம் முழுக்க சந்தனம் பூசி மையில் பெரிய மீசை வரைந்த கருப்பசாமியாடிகள், மீனாட்சி, காமாட்சி என அம்மன் வேடமிட்டவர்கள், தத்திதத்தி நடைபழகும் குட்டிக்கிருஷ்ணன், முருகன் வேடமிட்டவர்கள் என ஒரு பெருந்திரளே மாசி வீதி சுற்றி வலம் வரும்.

ஆட்டக்காரர்களை உற்சாகப்படுத்த நையாண்டி மேளம் வாசிப்பவர்களும் ஒவ்வொரு குழுவின் முன்னே அடித்துச் செல்ல மதுரை வீதிகளில் ஊரே திரண்டு நிற்கும். தூங்காநகரின் பெயரைப் பறைசாற்றும் வண்ணம் ஒளிரும் விளக்குகளோடு வாகனங்கள் முன் செல்ல அந்த வண்டிகளில் ஒலிக்கும் ‘பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி’ போன்ற பாடல்கள் கூட்டத்தை உற்சாகமூட்டும்.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா

கோயில்யானை முகபடாம் போட்டு அழகிய வண்ண துணியை மாட்டி ஊர்வலத்திற்கு முன்பாக நடந்து வரும். கோயில் தம்பட்ட மாட்டின் முதுகில் கட்டிய முரசுகளில் டமடம என அடித்தபடி வருவர். அந்த மாட்டின் வளைந்த கொம்பு நம்மையும் வளைத்துவிடும் ஆற்றல் கொண்டது. மருத நிலத்தில் பாலைவனத்திலிருந்து வந்த ஒட்டங்கங்களும் பாவமாய் வீதியை சுற்றி வரும். குழந்தைகளுக்கு சாமி பார்த்த திருப்தி இந்த விலங்குகளைப் பார்த்ததும் ஏற்படும். ‘அப்பா ஆனை, மாடு’ எனக் குதூகலமாய் காட்டி சொல்வார்கள்.

சாமி ஊர்வலத்திற்கு முன் வரும் வாகனங்களில் திருவிழா குறித்த அறிவிப்பு செய்தபடி வருவார்கள். “ஜெகம்புகழும் சித்திரைத் திருவிழா. வருடந்தோறும் 282 நாள்கள் திருவிழா நடக்கும் மதுரையம்பதி, கண்ணைக் கவரும் வண்ண நகைகள் கள்வர்கள் கரம் படாமல் பார்த்துக் கொள்ளவும். தாங்கள் அணிந்துள்ள தங்கச்சங்கிலி, வைக்கபுரி, கவர்னர் மாலை. தோடு, தொங்கட்டான், லோலாக்கு, மாட்டி இவைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்” என்ற ஏற்ற இறக்கமான அறிவிப்பை கேட்டு புன்னகைப் பூப்பவர்கள் ஏராளம்.

நீரும் நிலனும் தீயும் வளியுமாக விசும்பொடு ஐந்து உடன் இயற்றிய மழு வாள் நெடியோன் வீதியுலா கிளம்ப உயர்பூரிமவிழுத்தெருவின் இருமருங்கும் மக்கள் தங்கள் தலைவனை மதுரயானை வணங்குவார்கள். ஆலவாய் அண்ணல் பிரியாவிடையுடன் வருகிறார். சிரித்தமுகத்துடன் இருக்கும் சொக்கநாதனைக் கண்டு சொக்காதவர்கள் இல்லை. சந்திர சூரியர்களை மிஞ்சும் பேரழகு கொண்ட சுந்தரனைக் கண்டு மயங்காதவர்கள் இல்லை. “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும் பனித்த சடையும் பால் போன்ற மேனியும்” என்ற தேவாரப் பாடல் வரிகள் உங்கள் நினைவிற்கு வரலாம். சிவபெருமானுடன் வரும் பிரியாவிடை பார்வதியின் அம்சமென்பர். பிரியாவிடை உற்சவர் மட்டுமே. கோயிலில் சிலை ரூபமாக இவருக்கு சன்னதி கிடையாது.

மதுரையம்பதியாளும் அரசியாக மீனாட்சி எழுந்தருள “தாயே! அம்மா! மீனாட்சி!” என ஒவ்வொருவரும் தம் விருப்பதிற்கேற்ப விளித்து அழைக்க, எல்லோரையும் பார்த்தபடி அன்னை வருவாள். பெண்கள் அன்னையை வணங்குவதோடு அவள் அணிந்த பட்டுச் சேலையை கொஞ்சம் பொறாமையோடு பார்ப்பார்கள். மாம்பழக்கலர், ராமர் பச்சை என பட்டுச் சேலையின் வண்ணங்களில் சொக்கிப் போகின்றனர். அத்தோடு நில்லாமல் முத்துமாலை, தங்கச்சங்கிலி என அன்னையின் ஆபரணங்களைப் பார்த்து ரசிப்பார்கள்.

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா

தங்களைக் கடந்துபோன பின்பும் பின்னால் தெரியும் சடையலங்காரத்தைக் கூட பார்த்து வியப்பார்கள். மதுரை மீனாட்சியை தங்களின் பிரதிநிதியாகவே இந்த ஊர் பெண்கள் நினைக்கின்றனர். ‘இந்தம்மா தனியாத்தான் வரும்! அந்தம்மா ஊருல்ல!’ ‘ரிஷப வாகனத்துல பார்த்தா அம்புட்டு புண்ணியம். அது ஆறாம் நாளும் பனிரெண்டாம் நாளும் வரும்’ என சாமி பார்த்துவிட்டு தங்கள் அனுபவங்களை அசைபோட்டபடி நடப்பார்கள்.

சித்திரைத் திருவிழாவின் நான்காம்நாள் வில்லாபுரத்திலுள்ள பாவக்காய் மண்டபத்திற்கு பல்லக்கில் சென்று வரும்போது சின்னக்கடைத்தெரு வழியாக சித்திரை வீதிகளைச் சுற்றி கோயிலுக்குள் செல்வார்கள். ஐந்தாம் நாள் வடக்குமாசி வீதி இராமாயணச்சாவடிக்கு எழுந்தருளி அங்கிருந்து மாலை குதிரை வாகனத்தில் கோயிலை வந்தடைவர். அன்றைய தினங்களையும் மக்கள் அறிந்து அந்தந்த வீதிகளில் மாற்றங்களுக்கேற்ப சாமி பார்க்க வந்துவிடுவர். ஐந்தாம் நாள் வேடுபறிலீலை என சுந்தரரை வைத்து சிவன் செய்த லீலையை வாசிப்பர். இந்நிகழ்வுகள் கோயிலினுள் நடைபெறும். அதே போல ஆறாம் நாள் சமணர்களை வென்று சைவ சமயம் திருஞானசம்பந்தரால் எழுட்சி பெற்ற கதையை வாசிப்பர்.

சித்திரைப் பெருவிழா மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேறியதிலிருந்து பன்னிரண்டுநாள்கள் நடைபெறுகிறது. இதில் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பட்டாபிஷேகத்தன்று மீனாட்சியம்மன் பட்டம் சூடி மதுரையாளும் பொறுப்பை ஏற்கிறார். அன்று வேப்பம்பூ மாலை சூடுகிறார். திக்விஜயத்தன்று மீனாட்சியம்மன், சிவன் போல வேடமிட்ட சிறுவர்கள் சாமியுடன் வருவர். மீனாட்சியம்மன் எழுகடல்தெருவில் அமைந்துள்ள தம் தாயாரான காஞ்சனமாலையை வணங்கிப் போருக்குச் செல்வார். திக்கெட்டிலும் வெற்றி வாகை சூடி கீழமாசிவீதி வடக்குமாசிவீதி சந்திப்பில் சொக்கநாதரைக் கண்டு தம் மணாளன் என முடிவுசெய்கிறார்.

மறுநாள் திருக்கல்யாணம் வடக்காடிவீதியில் நடைபெறும். நான் திருக்கல்யாணத்தை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு திருக்கல்யாணத்திற்கு சாப்பாடு கோயிலிலேயே தயாராகும். ஆடிவீதிகளில் மலை போல குவித்திருக்கும் காய்கறிகளைப் பார்க்கும்போது சிவனோடு வந்த குண்டோதரனுக்காகத்தான் இந்த ஏற்பாடோ என எண்ணத்தோன்றும். இப்போது சேதுபதி மேனிலைப் பள்ளியில் திருக்கல்யாண சாப்பாடு நடைபெறுகிறது. பொதுமக்கள் சாப்பிட்டு கல்யாண மொய் அங்கேயே எழுதிச் செல்வார்கள்.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா

திருக்கல்யாணத்தன்று இரவு வரும் பூப்பல்லக்கை காண மாசி வீதிகளில் ஏராளமானோர் காத்திருப்பார்கள். அன்று வெள்ளியானை வாகனத்தில் பிரியாவிடையுடன் சொக்கநாதரும், பூப்பல்லக்கில் மீனாட்சியம்மனும், மயில் வாகனத்தில் திருப்பரங்குன்ற முருகனும், கருடவாகனத்தில் திருப்பரங்குன்ற பவளக்கனிவாய் பெருமாளும் வருவது கண்கொள்ளாக்காட்சி. பூப்பல்லக்கு பார்க்க ஏராளமான கூட்டம் வரும். இத்தனைக்கும் பூப்பல்லக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் கிளம்பும். ஆனாலும் மக்கள் காத்திருந்து சாமி பார்த்துவிட்டு செல்வர்.

"மதுரையைத் தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடி சூடி திக்விஜயம் செய்வதில்லை. மேலும், மீனாட்சி பாண்டியர்களின் குலதெய்வமென சொல்லும் வகையில் பட்டம் சூடும் அன்று பாண்டியர்களின் குலச்சின்னமான வேப்பம்பூ மாலையை சூடுகிறாள்” எனப் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் கூறுகிறார்.

தேரோட்டத்தன்று மாசி வீதிகளும் மக்கள் வெள்ளத்தில் திளைக்கும். அடிக்கிற வெயிலே இத்தனை கூட்டத்தைக் கண்டு மண்டை காய்ந்துவிடும். தேரடிக்கருப்பனிடம் வழிபாடு முடித்து தேர் கீழமாசிவீதியிலிருந்து கிளம்புகிறது. இளவட்டங்கள் தேர்வடம் பிடித்து உற்சாகமாக இழுத்து வருவார்கள். முன்பு மதுரா கோட்ஸ் ஊழியர்கள் தேரிழுப்பார்கள் என மனோகர் தேவதாஸ் 'எனது மதுரை நினைவுகள்' நூலில் பதிவு செய்திருக்கிறார். மதுரையிலுள்ள இளைஞர்களுக்கு தேரோட்டம்தான் பெரிய கொண்டாட்டம். தேர் இழுத்து வரும் போது முழுக்க அவர்கள் ஆட்டம்தான்.

‘ஹரஹர சங்கர! ஜெயஜெய சங்கர! ஹரஹரமகாதேவா’ என்ற நாமம் சொக்கநாதபெருமாளும், பிரியாவிடையும் வரும் தேரின் முன்னும், ‘கடம்பவன சுந்தரர், மீனாட்சி சுந்தரர்’ என்ற நாமம் மீனாட்சி தேரின் முன்னும் ஒலிக்கும். முன்தேர்குரவை போல தேரிழுத்து வருபவர்களும், தேர்ப்பார்க்க வந்தவர்களும் சொல்ல தேர் மெல்ல அசைந்து அசைந்து வரும். பெரிய கடைகளின் பிரம்மாண்டங்களை எல்லாம் கொஞ்சம் அசைத்து பார்த்து தேர் வரும். ஒவ்வொரு வீதி வளையும் போதும் மதுரை கோபுரமே வீதியில் வளைந்து வருவது போலிருக்கும். தேர் வளையும் இடங்களில் வடத்தைக் கொண்டு செல்வதற்கு தோதாக வடம்போக்கித் தெருக்களோடு மதுரை வீதிகளை அமைத்துள்ள நம் முன்னோர்களை எண்ணிப் பெருமை கொள்ளலாம். மேலமாசிவீதி – வடக்குமாசிவீதி சந்திப்பில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தேர் பார்ப்பதற்கு வசதியாக மேடை அமைத்திருப்பர்.

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன்
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன்

நீர்மோர் பந்தல்கள், பல்வகையான சாதங்கள் என வழிநெடுக கிடைக்கும். வாங்கித் தின்று கொண்டே தேர் பார்க்க மக்கள் வீதிகளில் அலைவார்கள். அதிலும் சின்ன போணிகளில் வீட்டிலேயே எலுமிச்சம்பழம், நன்னாரி சர்பத் வாங்கி கலந்து கொண்டு வந்து வெயிலுக்கு இதமாக கொடுக்கும் அடியவர்களின் சேவை போற்றுதலுக்குரியது. தேர் வரும் போது பெரிய, பெரிய மேளங்களை வைத்து ஆண்களும், பெண்களும் சிவவாத்திய இசைக்கு ஏற்ப ஆடி வருவதைப் பார்க்கும் போது மாசி வீதிகளும் அதிரும்.

தேரோட்டத்தன்று இரவு சப்தாவர்ண சப்பரத்தில் அன்னை மீனாட்சி ஆலவாய்சொக்கருடன், பிரியாவிடை அம்மையுடன் சேர்ந்து ஒரே பல்லக்கில் வரும் காட்சியைக்காண கண்ணிரண்டு போதாது. அம்மன் சன்னதி முழுக்க மக்கள் அமர்ந்திருக்கின்றனர். சப்பரம் பார்ப்பவர்கள் இன்று ஒரு நாள் பார்த்தால் பத்துநாள் பார்த்த புண்ணியம் என்று சொல்லிக்கொண்டு நடப்பார்கள். ஆனால், அவர்கள் இதற்கு முன்பே பத்துநாளில் பாதிநாள் வந்தவர்கள்தான்.

- நினைவுகள் தொடரும்...

- சித்திரவீதிக்காரன்