Election bannerElection banner
Published:Updated:

சித்திரைத் திருவிழா நினைவுகள் - 2 | வையையில் எழுந்தருளும் அழகுமலையான்!

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா

குதிரை குலுங்கக் குலுங்க மதுரையே குலுங்கும். 'கோவிந்தோ’ன்னு குரல்கள் வானைப் பிளக்கும். ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ பாட்டு எல்லாப்பக்கமும் போட்டுட்டே இருப்பாங்க. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு.

கொரோனாவால் இவ்வாண்டும் திருவிழா இல்லை… ஏங்கவைக்கும் சித்திரை விழா நினைவுகள்! - 1
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நகரமக்களின் திருவிழாவாகவும், அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களின் திருவிழாவாகவும் திகழ்கிறது. அழகர்கோயிலில் கொடியேறியதிலிருந்து சுந்தரத்தோளுடையான் தினந்தோறும் கோயிலில் எழுந்தருளுகிறார்.

அழகர் மதுரைக்குக் கிளம்பும் அன்று அவரை வரவேற்க ஏராளமானோர் அழகர்கோயில் வருகின்றனர். ராமநாதபுரம், கமுதி, சிவகங்கை, புதுக்கோட்டை எனச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் கிராம மக்கள் வருகின்றனர். திரியெடுத்து ஆடுவோரும், கருப்பசாமிவேடமிட்டு ஆடுவோரும் பதினெட்டாம்படிக்கருப்பு சந்நிதி முன்னும் அருகிலும் ஆடிக்கொண்டிருக்க அந்த இடமே மருளேறியிருக்கும். மக்கள் சாமியாடுகிறவர்களிடம் காலில் விழுந்து குறி கேட்பர். வேண்டிய வரத்தைச் சொல்லுவார்கள்.

கோயிலில் சாமி கிளம்பும் இடத்தில் பல்லக்கு நிற்கும். அழகர் கள்ளர் வேடத்தில் மதுரை நோக்கிக் கிளம்புவார். அழகர் நாட்டுக்கள்ளர் போல் கொண்டையிட்டு, கண்டாங்கி கட்டி, காதில் கடுக்கன் அணிந்து, கையில் வளரியுடன் அழகாய்க் கிளம்பிவருவதைப் பார்க்க ஏராளமான கூட்டம் காத்திருக்கும். யதிராஜன் முற்றத்தில் பெரும் மக்கள் வெள்ளத்திடையே அழகர் மிதந்து வருவதைப் பார்க்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். வண்டிவாசல் வழியாக சாமியைக் கொண்டு வந்து பதினெட்டாம்படி அருகில் உள்ள கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் வைக்கின்றனர். பௌர்ணமிக்கு முந்தைய நாளென்பதால் நிலவு வட்டமாய் வானில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா

அழகர் கிளம்பும் முன் பதினெட்டாம்படிக்கருப்பு சந்நிதிக்கு நேரே உள்ள குளத்தைத்தாண்டி அதிர்வேட்டுகளும், வானவேடிக்கையும் போட எல்லோரும் அழகரைப் பார்க்க முண்டியடித்தும் முன்னும் பின்னும் நெருக்குவர். கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் நைவேத்தியம் முடிய அழகரை கோபுரத்தின் கீழ் சந்தனக்கதவில் குடியிருக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி சந்நிதிக்கே கொண்டு வருகின்றனர். அங்கு வைத்து அழகரின் நகைக் கணக்கை கருப்பனிடம் ஒப்படைத்த பிறகே கிளம்புவார்களாம். கருப்பசாமி வேடமணிந்தவர்களின் ஆட்டம் அங்கு நம்மை புல்லரிக்க வைத்து விடும்.

பதினெட்டாம் படிக்கருப்புமுன் அழகர் பல்லக்கு குலுக்கக் குலுக்க `கோவிந்தோ! கோவிந்தோ!’ எனும் திருநாமம் திருமாலிருஞ்சோலைமலை முழுக்க எதிரொலிக்கும். பதினெட்டாம்படிக்கருப்பு சந்நிதியிலிருந்து புறப்பட்டு வரும்போது இரணியன் வாசலுக்கு அருகில் மாங்குளம் மண்டபம் உள்ளது. மாங்குளத்துக்காரர்கள் வாலாக்குலை என்னும் காவல்கம்பை சாமியைச் சுற்றியபடி வலம் வந்து காவலுக்கு முன் வருகின்றனர்.

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 2 | கதவாயிருந்து காக்கும் தெய்வம்... அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பசாமி!

அழகரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஒரு மண்டபத்தில் பார்த்தோமே அடுத்த மண்டபத்தில் போய் ஏன் பார்க்கவேண்டும் என்ற ஐயம் மனதில் ஒருபோதும் வராது. அவரோடே அலையணும் அது ஒன்றுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கும்.

இரணியன் கோட்டையிலிருந்து அழகாபுரிக்கோட்டை வாசலை நோக்கி அழகர் செல்ல பெருங்கூட்டம் அவர் பின்னாடியே மதுரை கிளம்பும். அழகாபுரிக் கோட்டை வளாகத்தில் வண்டி கட்டி வந்த கிராமத்தினரிடம் உரையாடும்போது நாம் நிறைய தகவல்களை அம்மக்களிடமிருந்து அறிந்துகொள்ள முடியும். பெரும்பாலான கிராம மக்கள் வருடந்தோறும் சித்திரைத் திருவிழாவிற்கு வருவதைக் கடமையாகக் கொண்டுள்ளனர்.

ஆடுவெட்டி அதை அங்கு வைத்து சமைத்து உண்டு மீதமுள்ள கறியை உப்புக்கண்டம் போட்டு வண்டியில் மாலையாக சரம்சரமாய் காய வைத்திருக்கின்றனர். மஞ்சளும் சிவப்புமாய் கறித்துண்டங்கள் பார்க்கத் தோரணம் போலிருக்கின்றன. வண்டி கட்டி வரும் கிராமத்துப் பெரியவர்கள் நிறைய பேருக்கு வர்ணிப்பு பாடத்தெரிந்திருக்கிறது. அழகர்கோயிலிலிருந்து அழகர் புறப்பட்டு வர, வழிநெடுக உள்ள ஊர்களில் அழகருக்காக மக்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா

கள்ளழகர் பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி வழியாக அதிகாலை மூன்றுமாவடிக்கு வந்துசேர்கிறார். மூன்றுமாவடியில் வைத்து அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைத்துச் செல்வதால் எதிர்சேவை என்று சொல்கின்றனர். மதுரையிலுள்ள சாமியாடிகள் மூன்றுமாவடியிலிருந்து அழகரோடு பயணித்து மீண்டும் அழகர் மூன்றுமாவடி வரை வந்து வழியனுப்பிச் செல்கின்றனர். விசிறி வீசுபவர்களும் இதே போலத்தான். மூன்றுமாவடி வரும் அழகர் கோசாகுளம் புதூர் பகுதியில் உள்ள திருக்கண்களில் எழுந்தருளி மாலை தல்லாகுளம் அம்பலகாரர் மண்டகப்படிக்கு வருகிறார்.

தல்லாகுளத்தில் எதிர்சேவை பார்க்க ஏராளமானோர் வருகின்றனர். அழகர் வரும் இரவு தல்லாகுளமே பலநூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். அழகர் வேடமணிந்த துருத்தி நீர் தெளிப்போர், திரியெடுத்து ஆடுபவர்கள், முத்துசோலிப்பல்வரிசை கட்டி ஆடுபவர்கள் எல்லாம் தப்பும் தவிலும் வைத்து ஆடிவர ஒரு பெருங்கூட்டமே அவர்களோடு ஆடிவரும். நகரத்து இளைஞர்களும் அவர்களோடு சேர்ந்து ஆடி மகிழ்வர். ஆடாத கால்களும் அன்று லேசாக ஆடும். துருத்திநீர் தெளிப்போர் வட்ட வட்டமாக நின்று ஒயிலாட்டம் போல ஆடுவர். காணவே ரொம்ப அழகாய் இருக்கும். குதிரை வாகனத்தில் அழகர் தல்லாகுளம் பெருமாள் கோயிலை விட்டு வந்ததும் தண்ணீரை அவர் மேல் துருத்தி நீர்தெளிப்போர் பீய்ச்சி மகிழ்வர்.

துருத்தி நீர் சரம்போல மழையாய்ப் பொழிய, அழகர் குதிரை மிதந்து வருவது போலிருக்கும். அழகரைத் தூக்கி வரும் சீர்பாதம் தாங்கிகள் சில இடங்களில் அப்படியே சாமியைத் தண்டியலோடு வைத்துக் குலுக்குவர். பார்க்கவே கொண்டாட்டமாக இருக்கும். குதிரை குலுங்கக் குலுங்க மதுரையே குலுங்கும். 'கோவிந்தோ’ன்னு குரல்கள் வானைப் பிளக்கும். ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ பாட்டு எல்லாப்பக்கமும் போட்டுட்டே இருப்பாங்க. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு. சில திருக்கண்களில் வர்ணிப்பு ஏற்பாடு செய்திருப்பாங்க. கேட்க ரொம்ப அருமையாயிருக்கும்.

அழகர் வைகைக்கு எழுந்தருளுவதே மண்டூகமான(தவளை) சுதபஸ் என்ற முனிவருக்கு முக்தி கொடுக்கவே. முன்னர் அலங்காநல்லூர் வழியாக தேனூருக்கருகில் வைகையில் இந்த முக்தி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. திருமலைநாயக்கர் காலத்திற்குப் பிறகு வண்டியூர்கருகில் தேனூர் மண்டபம் கட்டி மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது. அண்ணாநகரிலிருந்து வண்டியூர் செல்லும் வழியில் ஆற்றுக்குள்ளே தேனூர் மண்டபம் அமைந்திருக்கிறது.

தேனூர் மண்டபம்
தேனூர் மண்டபம்

அழகர் தேனூர் மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட தற்காலிகத் தகரக்கொட்டகையில் எழுந்தருவதைவிட மண்டபத்தைச் சீரமைத்து அதில் எழுந்தருளினால் நன்றாக இருக்கும். வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலிலிருந்து சேஷவாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். ஏழுதலைநாகத்திலிருந்து நாகராஜன் வணங்கியபடியிருக்க வாலின் கீழ் சுற்றிலும் யானையொன்றும், நாகமுமாக மாறிமாறி அழகாக சேஷவாகனம் அமைக்கப்பட்டிருக்கிறது. அழகர் கருடவாகனத்தில் புறப்படும் வரை மக்களோடு அலையலாம்.

நான் பார்த்த அழகர் திருவிழா இன்னும் நினைவில் நின்று இனிக்கிறது.

வைகையில் தண்ணீர் நன்றாக வர ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர். சித்திரை மாத கத்திரி வெயிலுக்கு இதமாக நுங்கு, பதநீர், இளநீர், தர்ப்பூசணி மற்றும் ஐஸ் விற்பவர்கள் ஏராளமானோர் இருந்தனர். ராட்டினங்களும், பலூன் கடைகளும் ஆங்காங்கே முளைத்திருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் போவதும் வருவதுமாக அலைந்துகொண்டிருந்தனர். தாகம்தீர்க்கும் தண்ணீர்ப்பந்தல்களில் தண்ணீர், நீர்மோர், பானகம், ஆரஞ்சு சுவையுடைய குடினியை வாங்கி மக்கள் அருந்தி மகிழ்ந்தனர். மண்டபத்தில் மிகச் சிரமப்பட்டு ஏறிப்பார்த்தால் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர். அங்கிருந்து ஆற்றில் தாவிக் குதித்துக் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களையும், அழகரைப் பார்க்க வந்து செல்லும் மக்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். சூடான தேங்காய் போளி, சுண்டல், பட்டாணி என விற்று வந்தனர். அவற்றை வாங்கி உண்டு பசியாறிய மக்களுள் நானும் ஒருவனானேன்.

தேனூர் மண்டபத்திற்கு எதிரே ஒரு குழி தோண்டி அதில் நீர் நிரப்பியிருந்தனர். அதன் கரையில் மண்டூகமுனிவர் சிலையும், ஒரு நாரையையும் கட்டி வைத்திருந்தனர். அழகர் கருடவாகனத்தில் எழுந்தருளியதும் திரையை விலக்கினர். தீபாராதனை முடிய அங்கு கட்டியிருந்த நாரையை அவிழ்த்து விடுகின்றனர். மக்கள், அழகர் நாரைக்கு முக்தியளித்ததாகப் பேசிக்கொண்டனர். மேலும், நாரை எந்தப்பக்கம் போகுதென்று பார்த்தனர். அத்திசையில் மழை பெய்யுமென்பதும் நம்பிக்கை. அழகர் கருடவாகனத்தில் புறப்படும்போது தேனூர் மண்டபத்தில் கட்டியிருந்த நெற்கதிர்த் தோரணங்களை பூசாரி அவிழ்த்து விடுகிறார். மேலும், மற்ற திருக்கண்களில் அழகர் எழுந்தருள அவர்கள் கட்டணம் கட்ட வேண்டும். தேனூர் மண்டபத்தில் அழகர் எழுந்தருள கோயில் நிர்வாகத்திலிருந்து தேனூர்மண்டபத்திற்குப் பணம் கட்டுவார்களாம். தேனூர் மண்டபத்தை ஒரு சுற்று சுற்றி வந்து கருடவாகனத்தோடு அனுமார் கோயிலுக்கு மக்கள் வெள்ளத்தில் மிதந்து செல்கிறார். அங்கிருந்து மெல்லக் கிளம்பினோம். அன்றிரவு தசாவதாரம் ராமராயர் மண்டகப்படியில் நடக்கும். மறுநாள் ராஜாங்கக் கோலத்தில் சேதுபதிராஜா மண்டபத்திற்கு வருகிறார். அங்கு பூப்பல்லக்கு தயாராகிறது.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா

பூப்பல்லக்கைப் பார்க்க தல்லாகுளத்தில் ஏராளமானோர் திரண்டிருக்கின்றனர். திருக்கண்களில் வர்ணிப்பு பாடுபவர்கள் இரவு முழுவதும் பாடிக்கொண்டிருப்பார்கள். கோயிலுக்கு எதிரேயுள்ள திடலில் மிளகாய்பஜ்ஜி மற்றும் அப்பளக்கடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள், சின்னச்சின்ன ராட்டினங்கள் என ஏராளமான கடைகள் முளைத்திருக்கும். மக்கள் இரவெனப்பாராமல் வேண்டியதை வாங்கித்தின்று சுற்றித் திரிவர்.

அழகர் பூப்பல்லக்கில் கள்ளர்வேடத்தோடு கிளம்புகிறார். பூப்பல்லக்கு கிளம்பிச் சில மண்டபங்களுக்குள்ளேயே சீர்பாதம்தாங்கிகள் குலுக்குகிற குலுக்கில் பூ நிறைய உதிர்ந்துவிடும். தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வருவதற்குள்ளேயே இலையுதிர்கால மரங்களைப் போல இருக்கும். சில திருக்கண்களில் அன்னதானம் நடக்கும். அன்றிரவு மூன்றுமாவடியில் அழகரை வழியனுப்ப ஏராளமான மக்கள் வருவர். அழகரைப் பிரிய மனமில்லாமல்தான் அன்று வீட்டுக்குப் போவார்கள்.

அழகர்மலையிலிருந்து வரும்போது வரவேற்கச் செல்வதுபோல மலைக்குத் திரும்பும்போதும் அவருடன் செல்ல வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பு ஒருமுறை எனக்குக் கிட்டியது. அதிகாலை விடியலில் திருவிழான்பட்டியில் திருமாலிருஞ்சோலையழகன் தரிசனம் கிட்டியது. திருவிழா நாயகனை திருவிழான்பட்டியில் பார்த்தது எவ்வளவு பொருத்தமாகியிருக்கிறது. அங்கிருந்து அழகரோடு அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி என அழகர்கோயில் வரை உடன் சென்றோம்.

வழிநெடுக கிராமங்கள் அழகரை வரவேற்கத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. மக்கள் அழகரை வரவேற்க வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள். அழகர் வரும்முன் அந்த ஊர் எல்லையில் வேட்டுப் போடுகிறார்கள். அதிர்வேட்டுப் போடுவதற்கென்றே தனியாக ஆட்கள் அழகருடன் வருகின்றனர். அதையறிந்ததும் மக்களின் திருக்கண்களும், மண்டபத்திருக்கண்களும் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. ஒலிபெருக்கியில் 'வாராரு வாராரு அழகர் வாராரு’ பாடல் இடைவிடாமல் ஒலிக்கத்தொடங்கிவிடும். அழகரைக் கண்டதும் இளவட்டங்கள் ஆட்டம்போடுவார்கள்.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா
UJ

திருக்கண்களை நுங்கு, மாங்காய், ஈச்சங்காய், தென்னங்குலை, தென்னங்குருத்து, வாழைமரம் என கிராமத்துபாணியில் மிக அழகாக அலங்கரித்திருந்தார்கள். கிராமத் திருவிழாப்போல ஊரே திரண்டிருக்கிறது. சாலையோரங்களில் பூந்தி, அல்வா, காரச்சேவு, லட்டு, மிச்சர் எனத் தின்பண்டங்கள் பல வண்ணங்களில் காத்திருக்கின்றன. சர்க்கஸ்காட்சிகள் திருவிழாவை முன்னிட்டு அந்த ஊரில் நடக்கின்றன. கனகாம்பரம் சூடிய பெண்களையும், நாமம் போட்ட ஆண்களையும் அதிகம் காணமுடிந்தது. அவர்களது எளிமையே அம்மக்களின் அலங்காரமாக அமைகிறது. அப்பன் திருப்பதியிலுள்ள திருக்கண்களில் எழுந்தருளும் அழகர் அப்பன்திருப்பதி கோயில் முன்புள்ள மண்டபத்திற்கு வருகிறார். அங்கு வைத்து வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் மரியாதை செலுத்த அவருக்கு அங்கு பரிவட்டம் கட்டுகிறார்கள்.

அங்கிருந்து மக்கள் வெள்ளத்தில் விடைபெற்று அழகர் கள்ளந்திரி நோக்கி வருகிறார். அழகர்கோயிலைச் சுற்றியுள்ள மக்கள் திருவிழாப் பணிகளைக் காலங்காலமாகச் செய்துவருகின்றனர். திரியெடுத்து வருவதும், குடை பிடித்து வருவதும் கள்ளந்திரி மக்களின் பணி, சீர்பாதம்தாங்கிகளாக அழகரைச் சுமந்து வருவது பொய்கைகரைப்பட்டிகாரர்களின் பணி, உண்டியல் வண்டி கொண்டுவருவது வலையபட்டிகாரர்கள் பணியெனப் பிரித்து வைத்து அழகுமலையானுக்குச் சேவை செய்கிறார்கள்.

கள்ளந்திரிக்கு முன்புள்ள பாறைத்திட்டுக்களில் மக்கள் அழகருக்காக காத்துக்கிடக்கிறார்கள். கள்ளந்திரி மந்தையிலும் ஏகப்பட்ட கூட்டம். அழகர் வந்ததும் ஊரே மகிழ்ச்சியில் திளைக்கிறது. அங்கிருந்து கள்ளந்திரிப் பாலம் தாண்டி அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாட்டுவண்டியில் அழகர்கோயில் உண்டியல்கள் வந்து கொண்டிருந்தன. பொய்கைகரைப்பட்டியில் உள்ள கடைசி மண்டபத்திலிருந்து அழகர் கிளம்பும் போது குலுக்கி எடுத்துவிட்டார்கள். மேனி நமக்கு சிலிர்க்கிறது.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா
UJ

அழகர்கோயில் நுழைவாயிலிலிருந்தே அழகரை வரவேற்க ஏகப்பட்ட கூட்டம். மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டே அழகாபுரிக்கோட்டை, இரணியன் கோட்டையைக் கடந்து பதினெட்டாம்படிகருப்பு வாசலுக்கு வருகிறார். அங்கிருந்து வண்டிவாசல் வழியாக நுழைய அவர்மேல் பூமாரி பொழிய வரவேற்கிறார்கள். பூசணிகளை எடுத்து அழகரைச் சுற்றி வந்து திருஷ்டி கழிக்கிறார்கள். அழகர் திருக்கல்யாணமண்டபத்தின் இடதுபுறமாகச் சுற்றி வந்து கோயிலுக்குள் நுழைகிறார். ஆடிமாதம்தான் தீர்த்தமாடி கோயிலுக்குள் வருவாரென்ற தீட்டு எனும் புனைவைத் தாண்டி அழகர் தம் இருப்பிடம் போய்ச் சேர்கிறார்.

அதெல்லாம் ஒரு காலம். முடிந்த திருவிழா நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கையிலேயே அடுத்த திருவிழா மற்றொரு கோயிலில் தொடங்கிவிடும். கொரோனா தற்காலிகமாக இவற்றை நிறுத்திவைத்திருக்கிறது. இதுவும் கடந்துபோகும். அழகரும் அன்னை மீனாட்சியும் இந்த நிலையை மாற்றுவார்கள். மதுரையும் நம் மனங்களும் வண்ணம் தரிக்கும்!

- சித்திரவீதிக்காரன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு