Published:Updated:

மதுரை: தொடங்கியது மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா... புது கட்டுப்பாடுகள் என்னென்ன?

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா

இந்த வருட சித்திரைத் திருவிழா மக்கள் கலந்துகொள்ளாமல் உள் திருவிழாவாக நடைபெறுகிறது.

புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கொடியேற்றம்
கொடியேற்றம்

தென்மாவட்ட மக்களின் முக்கிய விழாவான மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கி தினமொரு சிறப்பு பூஜைகளுடன் சாமி வீதி உலாவுடன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் என 12 நாள்கள் கொண்டாட்டமாக நடைபெறும் இவ்விழா, கடந்த ஆண்டு கொரோனா பேரிடரால் மக்கள் கலந்து கொள்ளாமல் கோயிலுக்குள் எளிமையாக நடைபெற்றது. திருக்கல்யாணம் இணையதளம் வழியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்த ஆண்டும் கோரோனா 2-வது அலை ஏற்பட்டுள்ளதால் சித்திரைத்திருவிழாவில் மக்கள் கலந்து கொள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், குறிப்பிட்ட நேரம் மக்கள் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்

இன்று காலை 9.30 மணிக்கு மீனாட்சியம்மன் கோயிலில் பாரம்பர்ய முறையில் சிறப்பு பூஜைகள் நடத்தி கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் தக்கார் கருமுத்துகண்ணன், கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்துகொண்டனர்.

சித்திரைத் திருவிழா நினைவுகள் - 2 | வையையில் எழுந்தருளும் அழகுமலையான்!

வருகின்ற 22-ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், 24-ம் தேதி திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை மக்கள் இணையவழியில் காணலாம். சுவாமியுடன் அம்மன் வீதி உலாவும், தேரோட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது. வழக்கமான அனைத்து விழாக்களும் கோயில் அருகில் ஆடி வீதியில் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

சுவாமியுடன் மீனாட்சியம்மன்
சுவாமியுடன் மீனாட்சியம்மன்

கோயில் நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மக்கள் கோயிலுக்கு வந்து தரிசிக்கலாம். 10 வயதுக்குட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோயிலுக்கு வரவும், பூஜைப்பொருள்களுடன் பக்தர்கள் வரவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் சித்திரைத்திருவிழாவின் தொடர்ச்சியான கள்ளழகர் மதுரைக்கு வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவமும், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் தடை செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் கோயில் வளாகத்திலேயே அழகர் திருவிழா நடைபெறும்.
அடுத்த கட்டுரைக்கு