Election bannerElection banner
Published:Updated:

`கோவிந்தா கோபாலா' கோஷத்துடன் தொடங்கியது `சிவாலய ஓட்டம்'... 12 கோயில்களில் வழிபடும் பக்தர்கள்!

சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்கள்
சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்கள்

சிவபெருமானுக்கு வேர்க்கும் என்பதால் கருவறையில் இருக்கும் ஈசனுக்கு விசிறியால் வீசுகின்றனர் சிவாலய ஓட்டமாக செல்லும் பக்தர்கள்.

மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் வழிபடுவதற்காக பாதயாத்திரையாகவும், சைக்கிள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் நேற்று இரவே தங்கள் பயணத்தைத் தொடங்கிவிட்டனர். இதை 'சிவாலய ஓட்டம்' என்கிறார்கள்.

முன்சிறையில் உள்ள திருமலை மஹாதேவர் ஆலயத்தில் சிவபெருமானை வழிபட்டுவிட்டு, அங்கிருந்து சிவாலய ஓட்டத்தைத் தொடங்கும் பக்தர்கள், திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்னிக்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 கோயில்களில் வழிபடுகின்றனர். கடைசி கோயிலான திருநட்டாலம் சிவன் ஆலயத்தில் வழிபட்ட பிறகு அதே பகுதியில் தனியாக அமைந்திருக்கும் வைணவ திருத்தலமான சங்கரநாராயணர் கோயிலில் வழிபட்டு சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

முஞ்சிறை திருமலை மஹாதேவர் ஆலயம்
முஞ்சிறை திருமலை மஹாதேவர் ஆலயம்

கையில் விசிறியும், திருநீற்றுப் பையுமாகச் செல்லும் பக்தர்கள் 'கோவிந்தா, கோபாலா' என மஹாவிஷ்ணுவின் நாமத்தை உரக்க உச்சரித்தபடி சிவன் ஆலயத்தில் வழிபடுகின்றனர். சிவன் ஆலயத்தில் கருவறையில் சுவாமிக்கு விசிறியால் விசிறி விடுகிறார்கள். பின்னர் பன்னிரு சிவன் ஆலயங்களிலும் இருந்தும் பிரசாதமாக கிடைக்கும் விபூதியை சிறிய பையில் சேகரித்துக்கொள்கிறார்கள். கடைசியாக சங்கரநாராயணர் கோயிலில் கிடைக்கும் சந்தன பிரசாதத்தை விசிறியில் வாங்கிக்கொள்கிறார்கள். இந்த சிவாலய ஓட்டத்துக்கு புராண நிகழ்வுகள் வரலாறாக கூறப்படுகிறது.

பஸ்மாசுரன் என்ற அசுரன் தன் கையை யார் தலையில் வைத்தாலும் அவர்கள் சாம்பலாகிவிட வேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் பெற்றார். பெற்ற வரம் பலிக்குமா என சோதிக்க சிவபெருமானின் தலையிலேயே கை வைக்கப் புறப்பட்டான் பஸ்மாசுரன். இதனால் மறைந்து ஓடினார் சிவபெருமான். பின்னர் மஹாவிஷ்ணுவின் உதவியை மனதில் வேண்டினார் சிவபெருமான். மோகினியாக அவதாரம் எடுத்து வந்தார் மஹாவிஷ்ணு. மோகினியின் அழகைக் கண்டு மோகமுற்ற பஸ்மாசுரன் சிவபெருமானை விரட்டுவதை மறந்து, மோகினியிடம் பேச்சுக்கொடுத்தான்.

சிவாலய ஓட்டத்துக்கு புறப்படும் பக்தர்கள்
சிவாலய ஓட்டத்துக்கு புறப்படும் பக்தர்கள்

மோகினியைத் திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார் பஸ்மாசுரன். தன்னுடன் போட்டியிட்டு நடனம் ஆடி வெற்றிபெற்றால் திருமணம் செய்யலாம் என்றார் மோகினி. மோகினியின் நடனத்தைப் பார்த்து, அதுபோல நடனம் ஆடினான் பஸ்மாசுரன். தக்க சமயம் பார்த்து தன் கையைத் தலையில் வைத்து நடனமாடினார் மோகினி. பஸ்மாசுரனும் கையைத் தன் தலையில் வைக்க, சிவபெருமானிடம் வாங்கிய வரத்தின்படி பஸ்பமாகிப்போனான். பஸ்மாசுரன் விரட்டும்போது சிவபெருமான், 'கோபாலா கோவிந்தா' என மஹாவிஷ்ணுவை அழைத்தபடியே ஓடியதால்தான் சிவாலயம் ஓடும் பக்தர்களும் 'கோபாலா, கோவிந்தா' என அழைத்தபடி ஓடுகிறார்கள். பஸ்மாசுரன் விரட்டும்போது ஓடிய சிவபெருமானுக்கு வேர்க்கும் என்பதால் கருவறையில் இருக்கும் ஈசனை பக்தர்கள் விசிறியால் வீசுகின்றனர்.

கடைசியாக திருநட்டாலம் மஹாவிஷ்ணுவின் தரிசனத்துடன் இந்த சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கிறார்கள் பக்தர்கள். சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் விதாமாக அமைந்துள்ளது சிவாலய ஓட்டம். சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு